சமாளிப்பு
ராம்ப்ரசாத்
வீட்டையே ரெண்டு பண்ணிக் கொண்டிருந்தான் ராகவன். ‘‘மூத்தவன் நான்... பொண்ணுங்களை திரும்பிப் பார்த்தாலே குடும்ப மானம் போயிடும்னு சென்டிமென்ட் பேசறீங்க! ஆனா இன்னிக்கு இளையவன் மதன் ‘சனிக்கிழமை ஆபீஸ்’னு பொய் சொல்லிட்டு எந்தப் பொண்ணு கூடவோ ஊர் சுத்திக்கிட்டிருக்கான். அவனுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டமா? யாராவது அவன் பண்ற அநியாயத்தைக் கண்டுக்கறீங்களா?’’ ‘‘டேய், நீ சொல்றதுக்கு என்னடா ஆதாரம்?’’ அப்பா கேட்டார். ‘‘இப்ப மதனுக்கு போன் போடுங்க... எடுக்க மாட்டான். அப்படியே எடுத்தாலும் பக்கத்துல யாராவது ஃப்ரெண்டுகிட்ட கொடுக்கச் சொல்லுங்க... மாட்டிப்பான்!’’
அப்பா உடனே மதனுக்கு போன் போட்டார். ஐந்து ரிங் அனாமத்தாக செல்ல, நம்பியார் போலச் சிரித்தான் ராகவன். ஆறாவது ரிங்கில் மறுமுனை உயிர் பெற்றது. ‘‘சொல்லுங்கப்பா’’ - மதனின் குரல் ஸ்பீக்கரில். ‘‘எங்கப்பா இருக்க?’’ அப்பா கேட்டார். ‘‘ஃப்ரண்ட்ஸோட ஆபீஸ்லப்பா’’ என்று சொல்லி முடிக்கும் முன்பே, ‘‘அப்பா, நான் தியாகு பேசுறேன்.. எப்படி இருக்கீங்க?’’ - கணீர் ஆண் குரல். தியாகுவின் குரலேதான்... மதனின் நெருங்கிய நண்பன். அப்பா ராகவனை முறைத்தார். அம்மா பூச்சியைப் பார்ப்பது போல் பார்த்தாள். ராகவன் சட்டென ஏதோ தோன்றி, அப்பாவிடமிருந்து போனைப் பிடுங்கினான். ‘‘டேய் மதன்... என்னடா உன் ஆளு ஆம்பளை குரல்ல பேசுது?’’ என்று கத்தினான். அப்பாவும் அம்மாவும் ஒருசேர சிலையானார்கள்.
|