நியூஸ் வே



* விஜய்யை அட்லிக்கு அடுத்து சசிகுமார் டைரக்ட் செய்கிறார். அவர் அந்தப் படத்தில் நடிக்கமாட்டார்!

* ‘குக்கூ’ இயக்குநர் ராஜுமுருகனின் அடுத்த படத்தை சூர்யா தயாரிக்கிறார். ‘மெட்ராஸ்’ கலையரசன் அல்லது அதர்வா நடிக்கலாம்.

* தமிழில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ரெடியாகி விட்டார் நமீதா. குண்டு அனுஷ்காவுக்கு ரோல் மாடல் போலிருந்த நமீ, இப்போ 18 கிலோ இளைத்திருக்கிறார். ‘‘இன்னும் பத்து கிலோ குறைக்கறதுதான் டார்கெட்!’’ என்கிறார் உறுதியாக!



* ‘10 எண்றதுக்குள்ள’ படம் முடித்து விக்ரம் ‘மர்ம மனிதன்’ படத்திற்கு ரெடியாகிவிட்டார். மறைந்த நாடகாசிரியர் கோமல் சுவாமி நாதனின் பேரன்தான் படத்தின் டைரக்டர் ஆனந்த சங்கர்.

* விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் இந்த வருடத்திற்கான `விஷ்ணுபுரம் விருது’ கவிஞர் தேவதச்சனுக்குக் கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இலக்கிய வட்டம், தொடர்ந்து ஐந்து வருடமாக இவ்விருதை வழங்கி வருகிறது. வரும் டிசம்பரில் வழங்கப்பட இருக்கும் இவ்விருது ஒருலட்சம் ரூபாய் பணமும், நினைவுப்பரிசு கேடயமும் அடங்கியது.

* புகழ்பெற்ற தாஜ்மகால் இருக்கும் அதே உத்தரப்பிரதேசத்தில் இன்னொரு தாஜ்மகால் உருவாகிறது. புலந்த்சாஹர் அருகே இருக்கும் கசேர் கலான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஃபைசல் காத்ரிக்கு இப்போது வயது 81. அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கிளார்க். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொண்டைப் புற்றுநோயால் மனைவி இறக்க, தனது சேமிப்புகள், ஓய்வூதியம் என 14 லட்ச ரூபாயை செலவழித்து மனைவிக்காக தாஜ்மகால் கட்டினார் இவர். பணம் போதாமல் இது முழுமை பெறாமல் நிற்க, இதுபற்றிய செய்திகளைப் படித்துவிட்டு உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இப்போது காத்ரிக்கு நிதியுதவி செய்வதாகக் கூறியிருக்கிறார்.

* சுதீப்பை வைத்து கன்னடம், தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘முடிஞ்சா இவனப் புடி’ படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுவென நடக்கிறது. ஹீரோயின் நித்யா மேனன். சுதீப்பின் பர்த் டேவைக் கூட ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர்.

* ரக்‌ஷா பந்தனை மும்பை வீட்டில் கொண்டாடியிருக்கிறார் ஹன்சிகா. சகோதரர் பிரஷாந்த் அவருக்கு ராக்கி கட்ட, ‘என் பலமே அண்ணன்தான்’ என உருகியிருக்கிறார் ஹன்சி.

\

* ஓவியர் மாருதியின் 77வது பிறந்தநாளை சிம்பிளாக விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர் அவரின் சீடர்களான அறிவழகனும், கமலநாதனும்! இதில், ஜெயராஜ், ராமு, மணியம் செல்வன், ஜமால், அரஸ் உள்ளிட்ட ஓவியர்கள் பலரும் கலந்துகொண்டு மாருதியுடனான நினைவுகளைப் பகிர்ந்தது அத்தனை அழகு!

* போதுமான தகுதிகள் இல்லாத ஒரு நடிகரைத் தலைவராக நியமித்ததை எதிர்த்து புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகிறார்கள். ஸ்டிரைக் செய்து வரும் மாணவர்களை, ‘‘நீங்கள் டெல்லிக்கு வந்தால் நான் இடம் தருகிறேன். வகுப்புகளை நடத்திக்கொண்டே போராடுங்கள்’’ என அழைத்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

* ‘கபாலி’ படம் உறுதி செய்யப்பட்டதும் ‘மெட்ராஸ்’ யூனிட்டில் அனைவருக்கும் போன் போட்டு விஷயத்தைச் சொன்ன ரஞ்சித், ‘‘நீங்களும் படத்தில் இருக்கிறீர்கள்’’ என்று அப்போதே அவரவர் கேரக்டர்களையும் ஃபிக்ஸ் பண்ணிவிட்டாராம். ‘கபாலி’யில் இடம் கிடைக்காமல் போனது கார்த்தி, கேத்தரீன் இருவருக்கு மட்டுமே!

* ஹர்திக் படேல் பற்றித்தான் இப்போது இந்தியா முழுவதும் பேச்சு! குஜராத்தின் படேல் சமூகத்தினரை ஓபிசியில் சேர்க்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தி குஜராத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டார் இந்த 21 வயது இளைஞர். பிரதமர் நரேந்திர மோடியின் இதயம் வலிக்கச் செய்த இவர் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருப்பது போல வீடியோ வெளியாகி பரபரப்பு கிளம்பியது. ‘‘நான் அவன் இல்லை’’ என ஹர்திக் கதறாத குறை!

* பாலிவுட்டில் ‘அகிரா’வுக்கு அடுத்து ஒரு படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டார் சோனாக்‌ஷி. கிடைத்த டைமில், ஃப்யூஷன் டூராக சான்பிரான்சிஸ்கோ சென்றிருக்கிறார்.

* நடிகர் சங்கம் தொடர்பாக விஷால் அணியினர் அஜித்திடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள். ‘‘சங்க பிரச்னை தொடர்பாக தனிப்பட்ட முறையில் என்னை யாரும் சந்திப்பதை விரும்பவில்லை’’ என தெரிவித்துவிட்டதாம் அஜித் தரப்பு!

* சமீபத்தில் தன் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய யுவன்ஷங்கர் ராஜா, தம்பதி சகிதமாக அப்பாவைச் சந்தித்து ஆசி வாங்கி மகிழ்ந்திருக்கிறார்.

* மலையாளத்தில் வெளிவந்த ‘மெமரீஸ்’, தமிழில் ரீமேக் ஆகிறது. அருள்நிதி நடிக்கும் இப்படத்தை அறிவழகன் இயக்குகிறார். நிக்கி கல்ரானியும், மோனல் கஜ்ஜாரும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் ஷூட்டிங்!

* தனுஷ், ‘வட சென்னை’ படத்துக்காக வெற்றிமாறனுக்கு 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கடலில் நடக்கும் மீனவர் மோதலை 40 நாட்கள் தத்ரூபமாக படமாக்கப் போகிறார்களாம்.

* ஜீவா நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்திலிருந்து கீர்த்தி சுரேஷை நீக்கிவிட்டு, காஜல் அகர்வாலை கமிட் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தப் படத்துக்காக கீர்த்தி கொடுத்த தேதிகள் வீணடிக்கப்பட்டன. இப்போது தனுஷ் படம், தெலுங்குப் படங்கள் என அடுத்தடுத்து பொண்ணு பிஸி! இந்தப் படத்தினால் ஜூலையில் கீர்த்தியைத் தேடி வந்த துல்கர் படத்தைக் கூட கீர்த்தி இழந்துவிட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

* 700 சதுர அடி ஏ.சி அறை, வைஃபை வசதி, ஐந்து போன்கள், நான்கு கம்ப்யூட்டர், மூன்று லேப்டாப், எல்.இ.டி. டெலிவிஷன், வேளாவேளைக்கு வீட்டு சாப்பாடு, 2 உதவியாளர்கள், மூன்று காவலர்கள்... நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதாகி திஹார் சிறையில் இருக்கும் சஹாரா அதிபர் சுப்ரதா ராயின் சிறை வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பத் தருவதற்கு நிதி திரட்ட வேண்டுமே... அதற்காக கோர்ட் உத்தரவுப்படி இதையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக சஹாரா நிறுவனம் இதுவரை சிறைத் துறைக்கு 60 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தியிருக்கிறது.

* தன் முன்னாள் கணவரைப் பார்க்கப் பிடிக்காமலே தனது ெசல்ல நாய் ஜோஜோ தற்கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி காட்டியுள்ளார் `பே வாட்ச்’ நடிகை பமீலா ஆண்டர்சன்! கடந்த ஏப்ரல் மாதம்தான் அவர் தன் மூன்றாவது கணவரான ரிக் சாலமனை விவாகரத்து செய்தார். அதற்கு சில நாட்களுக்கு முன் ஜோஜோ இறந்து போனது. அதையும் இதையும் இணைத்து பத்திரிகைக்கு வருத்தமாகப் பேட்டியளித்துவிட்டார் அம்மணி!

* ‘திருநாள்’ படத்தை முடித்துவிட்டு, மலையாளத்தில் மம்மூட்டி, ஆர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் சென்று விட்டார் நயன்தாரா. கொச்சியில் நடந்த அந்தப் படப்பிடிப்பில்தான் நயனுக்கு ஓணம் கொண்டாட்டம்!

* கடந்த 2007ல் ஷோலேவின் ரீமேக்கான `ஆக்’, ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ரிலீஸானது. ஆனால், படம் பெரிதாக சோபிக்கவில்லை. இதில், காப்பிரைட் உரிமை மீறலுக்காக தொடரப்பட்ட வழக்கில் ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். அதோடு, ‘‘இந்தப் படத்தை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சிதைத்துவிட்டார்’’ என்றும் வர்மாவை கண்டித்திருக்கிறது கோர்ட்!