ஆமையைவிட மெதுவாக நகரும் மெட்ரோ ரயில்!
அலட்சிய அரசு அவதியில் மக்கள்
‘‘எங்க தெருவுல 150 குடும்பங்கள் இருக்கு. ‘மெட்ரோ ரயில் வேலை நடக்கப் போகுது... கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க’ன்னு சொல்லி ரோட்டை மூடினாங்க. ‘சரி... பொதுக் காரியம்தானே! சிரமத்தைப் பொறுத்துக்கலாம்’னு அமைதியா இருந்தோம். மூணு வருஷமாகுது. இப்போ பத்தடி தூரத்துல இருக்கிற மெயின் ரோட்டுக்கு ரெண்டு கிலோ மீட்டர் சுத்திப் போக வேண்டியிருக்கு. எந்த வாகனமும் உள்ளே வரமுடியாது. உடம்பு முடியாதவங்க படுற பாடு வார்த்தையால சொல்ல முடியாது. ஏன்... ஒரு சாவு விழுந்தாக்கூட ஊரைச் சுத்தி தூக்கிட்டுப் போக வேண்டியிருக்கு. 2012ல முடிஞ்சிடும்; 13ல முடிஞ்சிடும்னு சொன்னாங்க. இப்போ வேலை செஞ்ச கம்பெனிக்காரன் ஓடிப் போயிட்டானாம்... 2017லதான் முடியும்ங்கிறாங்க. நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ - குமுறிக் கொட்டுகிறார் ஆக்னஸ் சோமகாந்தன்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ரங்கூன் தெருவைச் சேர்ந்தவர். மெட்ரோ ரயில் பணிக்காக இந்தத் தெரு, அண்ணா சாலையைத் தொடும் பகுதியை துண்டாடி விட்டார்கள். அவசரம் என்றால், பிரிட்டிஷ் கவுன்சிலின் பாதுகாப்புகளைக் கடந்து ஒரு தெருவைச் சுற்றித்தான் பிரதான சாலைக்கு வரவேண்டும்.
‘‘எனக்கு சாலிகிராமத்துல வீடு... அடிக்கடி பாரிமுனைக்குப் போக வேண்டியிருக்கும். குறைஞ்சது ரெண்டரை மணி நேரமாகுது. எல்லாத்தையும் ‘ஒன்வே... ஒன்வே...’ன்னு மாத்தி விட்டாங்க. வெளியில வரவே கஷ்டமா இருக்கு. எந்த நாட்டுலயும் ஒரு வேலையை இப்படி இழுக்க மாட்டாங்க...’’ - புலம்புகிற அர்ச்சனா, திரைப்பட நடிகை.
‘‘காலையிலயும் சாயங்காலமும் அண்ணா நகருக்குள்ள நுழையவே முடியிறதில்லை. எல்லாப் பாதையையும் மாத்தி விட்டுட்டாங்க. நிறைய பேருக்கு வாழ்வாதாரம் போச்சு. ஒரு பொதுக் காரியத்துக்காக தற்காலிகப் பிரச்னைகளைப் பொறுத்துக்கலாம். அதையே நிரந்தரப் பிரச்னையா மாத்தினா எப்படி பொறுக்க முடியும்?’’ - ஆதங்கப்படுகிற நூரி, குடும்பத்தலைவி.
‘‘கே.எம்.சி, மவுண்ட் ரோடுன்னு எந்தப் பக்கம் போனாலும் டிராஃபிக் கொடுமை. ஒரு மணி நேரம் முன்னாடி கிளம்பினாதான் திட்டமிட்டபடி காலேஜுக்குப் போக முடியும். மெட்ரோ ரயில் வந்தா விடிவுகாலம் வந்திடும்னு இந்தக் கொடுமையை அனுபவிச்சிக்கிட்டிருக்கோம். இவங்க செய்யற லட்சணத்தைப் பார்த்தா 2020ல கூட முடியாது போலருக்கு...’’ - வருத்தமாகப் பேசும் வெண்பா, கல்லூரி மாணவி.
ஆக்னஸ், அர்ச்சனா, நூரி, வெண்பாவின் குரல்தான் இப்போது சென்னையின் குரல். கடந்த ஐந்து ஆண்டுகளாக மெட்ரோ ரயில் மீதான எதிர்பார்ப்பில் சகிப்புத்தன்மையோடும் மன உளைச்சலோடும், எரிச்சலோடும் கடந்து சென்ற மக்கள் தற்போது கொதித்தெழ ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையின் இதயப்பகுதியான மவுண்ட் ரோட்டில் சுரங்கப்பணி மேற்கொண்ட ஒரு ரஷிய நிறுவனம் பணியைக் கைவிட்டு ஓடிவிட, 3 மாதங்களாக பணிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. வழக்கம்போலவே போக்கு வரத்தும் ஸ்தம்பிக்கிறது. சென்னையின் எதிர்கால போக்குவரத்துத் தேவையைக் கருத்தில்கொண்டு 2009, ஜூன் மாதம் திமுக ஆட்சியால் தொடங்கப்பட்டது மெட்ரோ ரயில் திட்டம். ரூ.14,600 கோடி மதிப்பீட்டில் வண்ணாரப்பேட்டை- விமானநிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் 45 கி.மீ நீளத்துக்கு பணிகள் தொடங்கின. 24 கி.மீ. சுரங்கப்பாதையாகவும், 21 கி.மீ உயர்த்தப்பட்ட பாதையாகவும் திட்டமிடப்பட்டது. 2015ல் முழுப்பணிகளும் நிறைவுற்று ரயில்கள் ஓடத் தொடங்கும் என்றார்கள்.
2015ல் எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் நிதி கொடுப்பதில் பிரச்னை, திட்ட அறிக்கையில் ஏற்பட்ட குழப்பங்கள், நடைமுறை இடர்ப்பாடுகள் காரணமாக இதுவரை 63% பணிகளே நிறைவு பெற்றிருக்கின்றன. கோயம்பேடு- ஆலந்தூர் வழித்தடத்தில் வெறும் 10 கி.மீ தொலைவுக்கு மட்டுமே தற்போது ரயில் விடப்பட்டுள்ளது. பணிகளை முடிக்க இன்னும் ரூ.6000 கோடி கூடுதலாக தேவை என்கிறார்கள். மே தினப் பூங்கா தொடங்கி சைதாப்பேட்டை வரை 18 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை மற்றும் ரயில்நிலையங்கள் அமைக்கும் பணியை கேமன் இந்தியா-மாஸ்மெட்ரோஸ்ட்ராய் நிறுவனங்கள் செய்து வந்தன.
இன்னும் 40% பணிகள் மிச்சமுள்ள நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த மாஸ்மெட்ரோஸ்ட்ராய் நிறுவனம் சொல்லாமல் கொள்ளாமல் பணியில் இருந்து விலகி விட்டது. இதையடுத்து கேமன் இந்தியா நிறுவனம் தனியாகப் பணிகளைச் செய்ய முயற்சித்தபோது, ‘ஊழியர்களுக்கு சம்பளம், பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை என கணிசமான தொகை பாக்கி வைக்கப்பட்டிருந்ததை’ சுட்டிக் காட்டி மொத்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது மெட்ரோ ரயில் நிர்வாகம். இதை எதிர்த்து, கேமன் இந்தியா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரம், மெட்ரோ ரயில் நிர்வாகம், மீதமுள்ள பணியைச் செய்ய புதிதாக டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. மீதமிருக்கிற வேலை முடிக்க குறைந்தது 20 மாதங்களாகும் என்கிறது மெட்ரோ ரயில் தரப்பு. ஆனால், 2020ல்தான் முழுப்பணியும் நிறைவுற்று ரயில் ஓடும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
ரஷ்ய நிறுவனம் ஏன் பணியில் இருந்து ஓடியது? ‘‘கேமன் இந்தியா நிறுவனத்தோடு இணைந்து அரசினர் தோட்டம் தொடங்கி எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை வழியாக சைதாப்பேட்டை வரை (இருபுறமும் சேர்த்து 18 கி.மீ) சுரங்கப்பாதை மற்றும் ஸ்டேஷன் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தது இந்த நிறுவனம். இதற்கு ரூ.1947 கோடி ஒதுக்கப்பட்டது. 2015ல் பணிகள் நிறைவுற வேண்டிய நிலையில் 60% பணிகளே இங்கு முடிக்கப்பட்டுள்ளன. இந்த காலதாமதத்துக்கு திட்ட அறிக்கையில் மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனையில் உள்ள தவறே காரணம் என்கிறது இந்த நிறுவனம். ஆயிரம் விளக்கு பகுதி மணல் மற்றும் களிமண்ணால் ஆனது என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் கடும்பாறைகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் மேலும் 3 மீட்டர் ஆழமான இடத்தில் சுரங்கம் தோண்டும்படி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ‘சரியான திட்டமிடல் இல்லாததால் சுரங்கம் தோண்டும் டனல் போரிங் இயந்திரங்களின் ‘கட்டர்கள்’ பாறையில் சிக்கி உடைந்து நொறுங்கி விடுகின்றன. 5 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டிய கட்டர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியிருக்கிறது. அதனால் 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழமாகத் தோண்டுவதால் கூடுதல் நிதி தர வேண்டும்’ என்று அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஆனால் இதை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கவில்லை. மேலும் ஒப்பந்தப்படி தர வேண்டிய நிதியை ஒதுக்குவதிலும் காலதாமதம் செய்திருக்கிறார்கள். இந்தச் சூழலில், பொருட்கள் கொடுத்த சப் கான்ட்ராக்டர்களும் நெருக்க, ரஷ்ய நிறுவனம் ‘விட்டால் போதும்’ எனச் சென்றுவிட்டது...’’ என்கிறார் ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் இளங்கோவன்.
‘‘அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்கவில்லை. நிறுவனத்தின் கடன் சுமை அதிகமாகி விட்டது. பொருளாதார நிலையும் சரியில்லை...’’ என்று குற்றம் சாட்டுகிறது மெட்ரோ ரயில் தரப்பு. எது உண்மையானாலும், பாதிப்பு வழக்கம் போல மக்களுக்குத்தான். இன்னும் நான்கைந்து ஆண்டுகளுக்கு நீட்டிக் கொண்டிருக்கும் தடுப்புகளுக்கும், கம்பிகளுக்கும் நடுவில்தான் பயணிக்க வேண்டும். வாகன நெருக்கடியில் சிக்கி, கொடுமைகளை அனுபவிக்க வேண்டும். மன உளைச்சலுக்கும் எரிச்சலுக்கும் உள்ளாக வேண்டும். போதிய கண்காணிப்போ, திட்டமிடலோ, மக்களின் மீது அக்கறையோ இல்லாத தமிழக அரசு மக்களுக்குத் தரும் தண்டனைகளில் இதுவும் ஒன்று!
பரிதாப ஏமாளிகள்!
மாஸ்மெட்ரோஸ்ட்ராய் நிறுவனம் 72 சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து கட்டுமானப் பொருட்களைப் பெற்று வந்தது. இதில் அவர்களுக்கு ரூ.29 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. அந்த நிறுவனம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டதால் பீதியில் இருக்கிறார்கள் வணிகர்கள். ‘‘மெட்ரோ ரயில் நிறுவனத்தை நம்பித்தான் பொருட்களைக் கடனுக்குக் கொடுத்தோம். அந்நிறுவனத்தின் வைப்புத் தொகையில் இருந்து எங்களுக்கு பணம் தரலாம். ஆனா மெட்ரோ ரயில் நிர்வாகம் கை விரிக்குது’’ என்று வருந்துகிறார் ஒரு வணிகர். கேமன்- மாஸ்மெட்ரோஸ்ட்ராய் நிறுவனங்களில் சுமார் 2000 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தார்கள். அனைவரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ‘‘வழக்கம் போலவே வேலைக்குப் போனோம். ‘உங்களை வேலைக்குச் சேத்த நிறுவனம் ஓடிப் போயிடுச்சு. இனிமே உங்களுக்கு வேலையில்லை’ன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. மேலதிகாரிங்ககிட்ட கேட்டா, ‘எங்களுக்கே எதுவும் தெரியலே’ங்கிறாங்க. ‘சம்பள பாக்கி வருமா? இதுவரைக்கும் வேலை செஞ்சதுக்கான பணிப்பலன்கள் கிடைக்குமா?’ன்னு தெரியலே. நிறைய பேருக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லே...’’ என்று புலம்புகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.
பாறைகள் இருப்பது உண்மையா?
‘‘ஆயிரம் விளக்கு பகுதியில் பாறைகள் இருப்பது உண்மையா..?’’ சென்னை பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறைத்தலைவர் டாக்டர் எஸ்.பி.மோகனிடம் கேட்டோம். ‘‘சென்னையின் பல பகுதிகளின் புவி அமைப்பில் பாறைப் படிமங்கள் உண்டு. ஆயிரம் விளக்கு பகுதியிலும் இருக்க வாய்ப்புண்டு. தொடக்கத்திலேயே இதற்கான ஆய்வுகள் நடந்திருக்க வேண்டும். தகுந்த தயாரித்தல்களோடு பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும்...’’ என்கிறார் மோகன்.
- வெ.நீலகண்டன் படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|