ஐந்தும் மூன்றும் ஒன்பது
இந்திரா சௌந்தர்ராஜன்/ஓவியம்: ஸ்யாம்
‘நாஸ்டர்டாமஸ் என்று ஒரு பிரெஞ்சுக்காரர் எதிர்காலம் குறித்து பல கருத்துக்களை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் எழுதிய பல விஷயங்கள் அப்படியே நடந்தும் இருக்கின்றன. இனி வரும் நாளில் நடக்க இருப்பதையும் எழுதியுள்ளார். அவை எல்லாம் நடக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். இந்த நாஸ்டர்டாமஸ் விஷயத்தை விஞ்ஞானிகள் அப்படியே விட்டு விட்டனர். ‘இது எப்படிச் சாத்தியம்’ என்று ஆராய்வதை விட ‘இதைக் கண்டுகொள்ளாமல் போவதே புத்திசாலித்தனம்’ என்பது சிலர் கருத்து.
அடுத்து, பறக்கும் தட்டு வடிவில் விண்ணில் இருந்து வாகனங்கள் பூமியில் உள்ள வயல்களில் இறங்கியிருக்கின்றன. அப்படி அவை இறங்கிய இடங்களில் பயிர்கள் கத்தரிக்கப்பட்டது போல தடயம் உருவாகியுள்ளது. அதை வைத்து ‘ஏலியன்கள்’ எனப்படும் மாற்று கிரகத்தவர்கள் பூமிக்கு சகஜமாக வந்து செல்கின்றனர் என்கிற ஒரு கருத்து பலமாக உலவுகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஏலியன்கள் இப்படி மனிதர்கள் தங்களைக் கண்டுவிடாதவாறு மிக எச்சரிக்கையாக வந்து செல்வதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த விஷயமும் ஒரு அமானுஷ்யமாக, கேள்விக்குறியாகவே உள்ளது’ என்றார் ஜோசப் சந்திரன்.
‘நானும் இதுபோன்ற செய்திகளைப் படித்துள்ளேன். ஆழ்ந்த அறிவியல் நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி ஒருமுறை தங்களுக்குள் நினைத்துப் பார்க்கக்கூட விரும்புவதில்லை’ என்றேன் நான். ‘அது அவர்களின் தீவிரத் தன்மையைப் பொறுத்து அமையும் விஷயமாகும். உண்மையில் எல்லாமே அறிவியல்தான். ஒரு கடல் பிராந்தியத்தில் குறிப்பிட்ட பகுதியில் விமானங்கள் காணாமல் போகின்றன. கப்பல்கள் போனாலும் திரும்புவதில்லை. இதுகுறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. புவிஈர்ப்பு விசைப்பாடு சார்ந்த ஒரு விஷயம்தான் காரணம். தெளிவாகத் தெரிந்தால் அதை விளக்க முடியும். விளக்க முடிவது விஞ்ஞானமாகி விடுகிறது; அப்படி விளக்க முடியாததே புதிராக, அமானுஷ்யமாக அப்படியே நின்று விடுகிறது. இன்று புரியாவிட்டாலும் எதிர் காலத்தில் புரியும் சாத்தியங்கள் மிகுதி. எனவே, நாம் அமானுஷ்யங்களை அலட்சியப்படுத்தி, அதுதான் அறிவுபூர்வ செயல்பாடு என்று எண்ணக் கூடாது. அமானுஷ்யங்கள் மேல் ஒரு பார்வை இருந்தபடியே இருக்க வேண்டும்’- என்று ஜோசப் சந்திரன் பேசியது என் வரையில் மாறுபட்ட கருத்து.
கஞ்சமலை தங்கம் குறித்த விஷயத்துக்கு மீண்டும் வருகிறேன். அதை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒரு விருப்பம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக அங்கு உடம்பில்லாத உடம்போடு நடமாடும் சித்தர்களை எப்பாடுபட்டாவது சந்தித்துப் பேசவும் நான் விரும்பினேன். ஏனென்றால், எனக்குள் ஒரு கேள்விக்கு தெளிவான விடையின்றி தவித்தபடியேதான் இருக்கிறேன். உயிர் போனபின் உடம்பை எரித்து அழித்து விடுகிறோம். போன உயிர் அதன்பின் சூட்சும உடம்போடு அலைவதாகக் கூறுவது எதை வைத்து? அந்த சூட்சும உடம்பு எந்த வடிவில் இருக்கும்? அதற்கு பசி, தாகம் உண்டா? உண்டு என்றால் அது எதை உண்ணும்? எப்படி உண்ணும்? - இப்படி என்னுள் பலப்பல கேள்விகள்.” - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...
போலீஸ் ஆபீசர் கூறியதைக் கேட்ட வள்ளுவருக்கும் கணபதி சுப்ரமணியனின் கலக்கம் புரிந்தது. ‘‘சார்... இந்த உடம்போடு அவர் எங்க சார் போக முடியும்? அவர் எங்கேயும் போக மாட்டார். நீங்க கவலைப்பட வேண்டாம்’’ என்றார். அதன்பின் அவர்கள் புறப்பட்டனர். தனது போலீஸ் காரிலேயே இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்ட அந்த போலீஸ் ஆபீசரின் நேம் பேட்ஜில் சந்தானம் என்கிற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த சந்தானம் காரின் முன்புற சீட்டில் அமர்ந்துகொள்ள, பின்னால் கணபதி சுப்ரமணியனும் வள்ளுவரும் அமர்ந்துகொள்ள, காரும் கிளம்பியது. கார் மகாபலிபுரத்தை விட்டு விலகிய நிலையில் சந்தானத்துக்கு திரும்பவும் ஒரு போன் வந்தது. ‘‘சொல்லுய்யா...’’ ‘‘........................’’ ‘‘என்னய்யா என்னென்னமோ சொல்றே. நாம எந்த காலத்துலய்யா இருக்கோம்?’’ ‘‘...................’’ ‘‘சரி... சரி... இந்த விஷயம் மீடியாவுல வந்துடாதபடி பாத்துக்குங்க. எருமை பலி - விசேஷ யாகம் - மத்திய மந்திரி தொடர்புன்னு விஷயம் வெளிய கசிஞ்சா அவ்வளவு பேரும் கேமராவோட வந்து நிப்பாங்க. கேள்வியா கேட்டு போலியா ஒரு பயங்கரத்தை உருவாக்கிடுவாங்க. அப்புறம் கேக்கவே வேண்டாம். ஒரு நாலு பேர் டி.வி.ல உக்காந்து பிரிச்சு மேயத் தொடங்கிடுவாங்க. அப்புறம் டாப்ல இருந்து நமக்குத்தான் டார்ச்சர் வரும். என்னவோ நாமதான் அந்த நாலு பேருக்கு நாற்காலி தூக்கிப் போட்டு உட்காரச் சொன்னோம்ங்கற அளவுக்கு டி.ஜி.பி. புலம்ப ஆரம்பிச்சிடுவார்...’’ பேசி முடித்து போனை டேஷ்போர்டு மேல் உள்ள ஸ்டாண்டில் வைத்தார். அப்படியே கண்ணாடி வழியாக வள்ளுவரையும், கணபதி சுப்ர மணியனையும் பார்த்தபடி தன் மீசையை நீவிக்கொண்டார். கணபதி சுப்ரமணியனிடம் ஒரு குறுகுறுப்பு. ‘‘என்ன சார்... பெருசா ஏதோ கான்ட்ரவர்சி போல இருக்கு?’’ ‘‘ஆமாம் சார்... உங்கள கடத்தின பாவிங்க ஒண்ணும் லேசுப்பட்ட ஆளுங்களா இல்லை. பலி, பூஜை, யாகம்னு எல்லாம் பண்ணியிருக்காங்க போல இருக்கு!’’ ‘‘அப்ப ஏதாவது கோரிக்கை கட்டாயம் இருக்கணுமே?’’ - என்று வள்ளுவர் இடையிட்டார். ‘‘ஏதோ அபூர்வமான ஒரு விஷயத்துக்காகன்னு மட்டும் தெரியுது. யாகத்தை செல்போன் கேமராவுல படம் பிடிச்சி சிலருக்கு வாட்ஸ் அப்ல அனுப்பியிருக்காங்க. அதுல சென்ட்ரல் மினிஸ்டரும் ஒருத்தர்...’’ ‘‘மந்திரிகள் பதவிக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு யாகங்கள் செய்யறது சகஜம்தானே?’’ ‘‘அதை ஏன் ரகசியமா செய்யணும்? அப்புறம் அதை தமிழ்நாட்டுல வந்து சென்னைக்குப் பக்கத்துல திருவாலங்காட்டு சுடுகாட்டுல வெச்சு எதுக்கு பண்ணணும்?’’ ‘‘திருவாலங்காடு பழமையான தலமாச்சே?’’ ‘‘சரி... ஏதோ யாகம் செய்தாங்கன்னு அதை விட்ருவோம். இவங்க எதுக்கு உங்களைக் கடத்தணும்?’’ ‘‘அதான் புதையல் எடுக்கன்னு நான்கூட சொன்னேனே சார்...’’ ‘‘உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா சார்..?’’ ‘‘என்ன சார்?’’ ‘‘இந்த ஆக்சிடென்ட்டே கூட தற்செயலா நடக்கலை. அதுக்குப் பின்னால சூழ்ச்சி இருக்கற மாதிரி தெரியுது...’’ ‘‘வாட்..?’’ ‘‘ஆமாம் சார்... அவங்க நடத்தின அந்த யாகம், அப்புறம் உங்கள கடத்தினதுன்னு சகலத்தையும் அவங்களுக்கே தெரியாம வேற ஒரு குரூப் பார்த்துக்கிட்டே இருந்திருக்காங்க... அவங்கதான் மாடை குறுக்க விட்டு ஆக்சிடென்ட் பண்ணியிருக்காங்க!’’ ‘‘இதெல்லாம் எப்படி அதுக்குள்ள உங்களுக்குத் தெரிய வந்துச்சு ஆபீசர்?’’ ‘‘இப்ப எங்க டிபார்ட்மென்ட் பெருசா நினைக்கறது ஏ.கே.47 துப்பாக்கியையோ... இல்ல, மாடர்ன் ரிவால்வர்களையோ இல்ல சார். எங்களோட முதல் நண்பனே சி.சி.டி.வி கேமராக்கள்தான்..!’’ ‘‘ஓ... அப்ப எந்த கேமரா மூலம் உங்களுக்கு இதெல்லாம் தெரிய வந்தது?’’ ‘‘அதெல்லாம் சீக்ரெட்... அவ்வளவு டோல்கேட் கேமராவுலயும் நீங்க பயணம் செய்த காரும், உங்களை ஃபாலோ பண்ண காரும் பதிவாகியிருக்கு சார்!’’ ‘‘அப்ப அந்த குரூப்பை பிடிச்சிடலாம் இல்லையா?’’ ‘‘பிடிச்சாதானே முடிச்சு அவிழும். இதுல உங்களை தீவிரமா கண்காணிக்கச் சொல்லி வேற உத்தரவு...’’ ‘‘நான் என்ன அவ்வளவு தூரத்துக்கு ஆபத்தானவனா?’’ ‘‘நீங்க ஆபத்தானவர் இல்லை சார்! ஆபத்துல ,மாட்டிடக்கூடாதுன்னுதான் இந்தக் கண்காணிப்பு. இப்ப நம்ம காரைக்கூட அந்த குரூப்பைச் சேர்ந்த யாராவது ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கலாம்.’’ ‘‘என்ன சார் பீதியைக் கிளப்பறீங்க?’’
‘‘எச்சரிக்கறேன் சார். நடந்து முடிஞ்சது தினமும் வழக்கமா நடக்கற பல ஆக்சிடென்ட்கள்ல ஒண்ணு இல்லை. கிட்டத்தட்ட கொலை... இறந்தவங்களும் தப்பு செய்தவங்க. அதனாலதான் இதுக்குப் பின்னால பயங்கரமா ஏதோ ஒரு திட்டம் இருக்கற மாதிரி தெரியுது.’’ அந்த போலீஸ் ஆபீசர் சந்தானம் சொல்லச் சொல்ல, கணபதி சுப்ரமணியனுக்கு நிஜமாலுமே வயிற்றைக் கலக்கியது. வள்ளுவர் பக்கம் திரும்பியவர், ‘‘வள்ளுவரே... சார் சொல்ற மாதிரி நமக்கு ஆபத்தா? இல்ல, இது வழக்கமான போலீஸ்காரங்களோட சந்தேகமா? உங்க ஜோசியத்துல இதுக்கு எதுவும் விடை கிடைக்குமா?’’ - என்று கேட்டார். சந்தானமும் பின் பக்கம் திரும்பி ‘‘ஓ... இவர்தான் வள்ளுவரா?’’ என்றார்.
‘‘இவரைப் பத்தி நீங்களும் கேள்விப்பட்டிருக்கீங்களா?’’ ‘‘வள்ளுவர்னு இப்ப யார் பேர் வச்சுக்கிறா! அதனால ஒரு தடவை கேட்டாலே மனசுல தங்கிடற பெயர் இது. கொஞ்சம் முந்தி யாரோ டிபார்ட்மென்ட்ல இந்தப் பேரைச் சொல்லி பேசினாங்க. ஆமா, நீங்க ஜோசியம் பார்ப்பீங் களோ?’’ ‘‘அதானே இவங்க தொழிலே!’’ ‘‘உங்களுக்கு எப்படி பழக்கம்?’’
‘‘நான் இவர்கிட்ட என் ஜாதகத்தைக் காட்டி ஜோசியம் பார்த்தேன். அப்ப ‘உங்களுக்கு கண்டம் இருக்கு’ன்னு சொல்லியிருந்தாரு. அதே போல விபத்து ஏற்படவும், கேள்விப்பட்டு பாக்கவே வந்துட்டாரு. இல்ல வள்ளுவரே..?’’ - கணபதி சுப்ரமணியன் புதிய செய்தி ஒன்றை எடுத்துக் கொடுத்து, ‘இதை வைத்து அப்படியே ஆமோதிப்பது போல பேசுங்கள்’ என்பது போல எடுத்துத் தர, வள்ளுவரும் ஆமோதித்தார்.
‘‘பரவால்லியே... எனக்கு புரமோஷன் எப்ப கிடைக்கும்னு சொல்ல முடியுமா உங்களால?’’ - என்று கேட்டார் சந்தானம். ‘‘பிறந்த நாள், நேரம், இடம் மட்டும் சொல்லுங்க - நான் முயற்சி செய்து பார்க்கறேன்’’ என்றார் வள்ளுவர்.
‘சென்னை வீட்டை அடைய எப்படியும் அரை மணி நேரத்துக்கு மேலாகும். அதற்குள் அவரை வசப்படுத்தியது போலவும் இருக்கும்’ என்பது போல சந்தானத்திடம் வள்ளுவர் கேட்க, அவரும் விவரங்கள் கூறினார். வள்ளுவரின் ஆண்ட்ராய்டு போனில் சந்தானத்தின் ஜாதகமே உருவாகத் தொடங்கி விட்டது! கணபதி சுப்ரமணியனோ ‘ஒரு கோஷ்டிக்கு இரண்டு கோஷ்டிகள்’ என்று சந்தானம் சொன்ன அந்த கோஷ்டிகள் குறித்த பயத்திலேயே இருந்தார். ப்ரியாவும், வர்ஷனும் ஏட்டுக்கட்டை கம்ப்யூட்டரில் ஏற்றி முடித்திருப்பார்கள் என்றும் நம்பியவர் ‘காலப்பலகணியைத் தேடிடும் நம் பயணம் எப்படித் தொடங்கப் போகிறதோ, தெரியவில்லையே?’ என்று கலங்கிப் போயிருந்தார்.
ஆபீசர் சந்தானம் கூறியதைப் போலவே அந்த போலீஸ் காரை ஒரு ஐம்பது மீட்டர் இடைவெளியில் ஒருவன் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில், சாதாரணமாக சாலையில் பயணிப்பவன் போல தொடர்ந்து கொண்டிருந்தான்!
வள்ளுவர் தன் ஆண்ட்ராய்டு போனில் சந்தானம் ஜாதகக் கட்டத்தை உருவாக்கி முடித்தார். அது தந்த செய்தி வள்ளுவரைத் திகைக்கச் செய்தது. சந்தானத்துக்கு ஆனாலும் அநியாயத்துக்கு அற்ப ஆயுள்! அதை தனக்குள் மறைத்துக் கொண்டவர் ‘‘சார்... உங்களுக்கு புரமோஷன் நிச்சயம்’’ என்றார்.
சந்தானத்திற்கு அதைக் கேட்க சந்தோஷமாயிற்று... காரும் நகரச் சந்தடிக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அந்த மலைத்தலத்தில் திரும்பின பக்கமெல்லாம் அடர்வான மரங்கள். சாம்பிராணி புகை போட்டது போல பனி படர்ந்திருந்தது. அதனூடே ஒரு மூங்கில் கூடையில் அபூர்வமான மரங்கள் சிலவற்றின் பிசின் மற்றும் வேர்த் துண்டுகளைச் சேகரித்தபடியே நடந்து கொண்டிருந்தான் ஈங்கோய்! சடை பிடித்த தலை, கருத்த உடம்பு, மதர்த்த தோள் பட்டை என்று பளியர் இனத்தின் ஒரு அக்மார்க் பிரதிநிதியாக விளங்கியவன், அங்கே மண்டைப்பாறை என்று அவர்கள் பேச்சு வழக்கில் அழைத்துக் கொள்ளும் பாறை மீது தன் பார்வையைப் பதித்தான். அங்கே பாறைமேல் வெள்ளை நிறத்தில் எந்த வகை இனம் என்றே தெரியாத விதத்தில் ஒரு பறவை வந்து அமர்ந்துகொண்டு, விரிந்த அந்த வனப்பகுதியைப் பார்ப்பதை அவன் கவனித்தான். அடுத்த நொடி அவனுக்குள் நந்தி அடிகள் நினைவுதான் வந்தது. அவர்தான் தன் குகைக்குள் அந்தப் பறவையை அப்படியே வரைந்து வைத்திருந்தார்!
‘‘கையில சரக்கை வச்சிக்கிட்டு, கஞ்சா அடிச்சிக்கிட்டே, அடுத்து எங்க பாம் வைக்கலாம்னு திட்டம் தீட்டுறானுங்க சார்...’’ ‘‘உடனே அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட வேண்டியதுதானேய்யா?’’ ‘‘அவனுங்க திட்டம் தீட்டிக்கிட்டு இருக்கிறதே நம்ம ஜெயிலுக்குள்ளதான் சார்!’’
நடந்து முடிஞ்சது தினமும் வழக்கமா நடக்கற பல ஆக்சிடென்ட்கள்ல ஒண்ணு இல்லை. கிட்டத்தட்ட கொலை...
‘‘உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா கேள்..?’’ ‘‘சட்டத்தில் இருக்கிற ஓட்டை பெருசா... ஓஸோன்ல விழுந்திருக்கிற ஓட்டை பெருசா, யுவர் ஆனர்..?’’ - கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
- தொடரும்...
|