காமிக்ஸ் மன்னன்!
கிங் விஷ்வா
தமிழ்நாட்டின் காமிக்ஸ் பொற்காலத்தை நிர்மாணித்தவர்களில் ஒருவரான ஓவியர் செல்லம் இன்று நம்மிடையே இல்லை. அவர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்கிறார் கார்ட்டூன் சேகரிப்பாளரும் பதிப்பாளருமான கிங் விஷ்வா.
1976ம் ஆண்டு... எமர்ஜென்சி இரும்புக் கரங்கள் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கத் துவங்கியது. பிரதமர் இந்திரா காந்தி சிறிது சிறிதாக ஹிட்லராக மாறிக் கொண்டிருப்பதை அரசியல் தலைவர்கள் கவனித்தனர். அப்போது முரசொலியின் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி மாறன் அவர்கள், ‘‘இதனை அப்படியே ஒரு கார்ட்டூனாக வரைந்து கொடுங்கள்” என்று ஓவியர் செல்லம் அவர்களிடம் கேட்க, மறுநாள் முரசொலியின் முதல் பக்கத்தில் வந்தது அந்த கேலிச்சித்திரம்.
ஒரு ஆங்கில நாளிதழ் அதே கார்ட்டூனை அவர்களது தேசிய பதிப்பில் முதல் பக்கத்தில் வெளியிட, நாடெங்கும் பாராட்டு மழை. அதே வாரத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கர் பத்திரிகையும் அந்த கார்ட்டூனை மறு பிரசுரம் செய்ய, உலகமெங்கும் ‘யார் இந்த செல்லம்?’ என்ற கேள்வி எழத் தொடங்கியது. நாகர்கோவிலைச் சேர்ந்த செல்லப்பனை, திருவனந்தபுரம் - தமிழ்நாடு காங்கிரஸ் துவங்கப்பட காரணமாக இருந்த பி.எஸ்.மணி, தான் ஆசிரியராக இருந்த ‘கன்னியாகுமரி’ என்ற இதழில் ஓவியம் வரைய வைத்தார். தனது எல்லைகளையும் களத்தையும் விரிவுபடுத்த நினைத்த செல்லப்பன் நேராக சென்னைக்கு வந்து சந்தித்தது கலைஞரை! உடனடியாக ‘முரசொலி’யின் ஓவியரானார் செல்லப்பன். அப்போது ‘முரசொலி’யில் கலைஞர் ‘வெள்ளிக்கிழமை’ என்ற தொடரை எழுதி வந்தார். அதற்கு செல்லப்பன் வரைந்த உயிரோட்டமான ஓவியங்கள், இவரால் கேலிச்சித்திரங்கள் மட்டுமல்ல, அனைத்து வகையான ஓவியங்களையும் வரைய முடியும் என்பதை மக்களுக்குத் தெரிவித்தது. அறிஞர் அண்ணா எழுதிய ‘உன்னைத்தான் தம்பி!’ என்ற இளைஞர் எழுச்சித் தொடருக்கு இவர் வரைந்த முகப்பு ஓவியம் இன்றளவும் சிலாகித்துப் பேசப்படுகிறது.
அத்துடன் அப்போது விற்பனையின் உச்சத்தில் இருந்த அனைத்து வகையான பத்திரிகைகளிலும் வரைய ஆரம்பித்தார் செல்லப்பன். அந்தப் பெயர் செல்லம் என்று சுருங்கியதும் இச்சமயத்தில்தான். அரசியல் களத்திலும், வெகுஜனப் பத்திரிகைகளிலும் மட்டுமே வரைந்து வந்த இவரை, சித்திரக்கதைகளுக்கு ஓவியம் வரைய தூண்டியவர் முல்லை தங்கராசன். முழு மூச்சில் காமிக்ஸ் வரையத் தொடங்கினார் செல்லம். முல்லை தங்கராசனுக்காக இவர் வரைந்த மாயாவி காமிக்ஸ் கதைகள், ஜாம் ஜிம் ஜாக், கேப்டன் மோர்காக் என அனைத்தும் பெயர் பெற்று விளங்கின. மணிப்பாப்பா, ரத்னபாலா, மதி நிலைய வெளியீடுகள், முத்து காமிக்ஸ், வார மலர் என்று அனைத்து இடங்களிலும் செல்லத்தின் ஓவியங்கள் அழகூட்டின.
அதே சமயத்தில்தான் இவர் தமிழ் சித்திரக்கதை உலகின் தலைசிறந்த கதைசொல்லியான வாண்டுமாமாவைச் சந்தித்தார். இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல ஒரு சாகச ஜோடியானார்கள். வாண்டுமாமா அவர்களின் சித்திரத் தொடர் கதைகளான நந்து சுந்து மந்து, புலி வளர்த்த பிள்ளை, கனவா? நிஜமா?, பலே பாலு, திகில் தோட்டம், சிறுத்தைச் சிறுவன், சமத்து சாரு என்று பல கதைகளுக்கு இவரது ஓவியங்களால் மெருகூட்டினார்.
குறிப்பாக, ‘கனவா? நிஜமா?’. சிறுவர் ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1979ம் ஆண்டு வெளியான இந்தக் கதையில் இருந்துதான் செல்லம் ‘ஸ்டிப்ளிங்’ என்கிற ஒரு தனி ஷேடிங் (புள்ளிகளை மட்டுமே கொண்டு நிழலூட்டும் பாணி) முறையை ஆரம்பித்து இருந்தார். அதற்கு முன்னரும் அதை முறையைப் பயன்படுத்தியிருந்தாலும் முதன்முறையாக முழுக் கதையிலும் இந்த ஸ்டிப்ளிங் ஷேடிங் முறை திறமையாக உபயோகப்படுத்தப்பட்டது இந்தக் கதையில் இருந்தே. அன்று, தமிழ் சித்திரக்கதை தொடர்கள் கருப்புவெள்ளையிலேயே இருக்கும். அதிலேயே இத்தனை வித்தியாச பாணிகளைக் கைக்கொண்டது செல்லம் அவர்களின் தனிச் சாதனை.
1997ம் ஆண்டு பக்கவாதத்தால் தாக்குண்ட செல்லம், அதன்பின்னர் முழுநேர ஓவியப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது சாதனைகளாக பலவற்றையும் சொன்னாலும், கலைஞர் கருணாநிதி அவர்களின் 60ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் இவர் வரைந்த ‘கலைஞர் 60’ என்ற காமிக்ஸ் பயோகிராஃபி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மொத்தம் 60 பக்கங்களில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அழகாக விளக்கி இருப்பார் செல்லம். இவரது இடத்தை இட்டு நிரப்ப இதுவரையிலும் யாருமே வரவில்லை என்பதே சமகாலத்திய சிறுவர் இலக்கியத்தின் ஆகப்பெரிய நகைமுரணும் கூட!
|