ஒரு உயிரைக் காப்பாற்ற 5 நிமிடமும் கொஞ்சம் அக்கறையும் போதும்!



தினமும் எத்தனையோ விபத்துகளைக் கடந்து போறோம். எத்தனை பேர் அடிபட்டவங்களைத் தூக்கி முதலுதவி செய்யறோம்? அப்படியே உதவி செய்ய நினைச்சாக் கூட, ‘என்ன செய்யணும்... எப்படிச் செய்யணும்’னு தெரியறதில்லை. இந்தியாவில ஒவ்வொரு நிமிஷத்திலும் 17 பேர் விபத்தால உயிரிழக்குறாங்க. விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ள முதலுதவி கிடைச்சா இதுல 12 பேரோட மரணத்தைத் தடுத்துடலாம். எல்லாத்தையும்விட உயிர் முக்கியமானது. அதனாலதான் வெளிநாடுகள்ல முதலுதவி பற்றிப் பள்ளிக்கூடங்கள்லயே சொல்லித் தர்றாங்க.  நாம அதை ஒரு பொருட்டாவே நினைக்கிறதில்லை...’’ - வருத்தம் தொனிக்கப் பேசுகிறார் கலா பாலசுந்தரம்.



கண்ணெதிரே நிகழ்ந்த விபத்துகளையும், அடிபட்டு வீழ்பவர்கள் மீதான புறக்கணிப்புகளையும், கொடூர மரணங்களையும் கண்டு மனம் பதைத்து ஒரு முதலுதவிப் பயிற்சிக்கூடத்தைத் திறந்திருக்கிறார் கலா. சகல வசதிகளும் நிறைந்த இந்தப் பயிற்சிக்கூடத்தில் இதுவரை 35 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் மூலம் பல நூறு மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. ‘அலெர்ட்’ என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்துகிற கலா, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை உருவாக்கியுள்ளார். அவர்கள் விடுமுறை நாட்களில் ஊர் ஊராகச் சென்று பயிற்சி அளிக்கிறார்கள்.



ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரியும் கலா, சென்னையில் நீலாங்கரையில் வசிக்கிறார். ‘‘உலகத்திலேயே இந்தியாவிலதான் அதிக விபத்துகள் நடக்குது. இந்திய அளவுல தமிழகத்துலதான் அதிக உயிரிழப்புகள்... விபத்துல இறக்கிறதுல 20 முதல் 40 வயசுக்காரங்கதான் அதிகம். விபத்து மரணம் மிகக் கொடுமையானது. ஒவ்வொரு மரணத்துக்குப் பின்னாலும் ஒரு குடும்பம், குடும்பத்தோட எதிர்காலம்னு பல விஷயங்கள் இருக்கு.  விபத்து நடந்து அடுத்த ஒரு மணி நேரத்தை ‘கோல்டன் ஹவர்’னு சொல்வாங்க. அடிபட்டு தலையில ரத்தம் ஒழுகும்போது, தலையை லேசா நிமிர்த்துற மாதிரி வச்சிருந்தாக்கூட ரத்த இழப்பைத் தடுத்து உயிரைக் காப்பாத்திட முடியும். ஆனா பலரும் வேடிக்கை பார்த்துட்டு போறாங்களே தவிர, உதவிக்குப் போறதில்லை.

சின்ன வயசுல இருந்தே விபத்து எனக்குள்ள பெரும் பதற்றத்தை உருவாக்கும். எங்க அம்மா ஸ்ரீபெரும்புதூர்ல ஒரு முதியோர் இல்லம் நடத்தினாங்க. பள்ளிக் காலங்கள்ல அடிக்கடி அங்கே போறதுண்டு. வழியில ஏதாவது ஒரு விபத்தைப் பார்க்க நேரும். ரத்தம் தோய உடல் சிதைந்து கிடக்கும். கூட்டமா பலர் வேடிக்கை பார்த்துக்கிட்டு நிப்பாங்க. போலீஸ் வர்ற வரைக்கும் யாரும் நெருங்க மாட்டாங்க. விசாரணை, சாட்சின்னு அலையணுமேங்கிற பயம். படிப்பு முடிஞ்சு வேலைக்குச் சேர்ந்த தருணங்கள்லயும் விபத்துகளும் மக்களோட மனநிலையும் எனக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்குச்சு. ஆனா, நானும் அவங்களை மாதிரி கடந்து போய்க்கிட்டுதான் இருந்தேன். அதுவே ஒரு குற்ற உணர்வா வளர்ந்து வதைக்க ஆரம்பிச்சிச்சு.

ஏதாவது செய்யணும்ங்கிற உந்துதல்ல, ஒரு மருத்துவமனையில முதலுதவி பயிற்சி எடுத்துக்கிட்டேன். அந்தப் பயிற்சி எனக்கு பெரிய தைரியத்தை உருவாக்குச்சு. போற வழிகள்ல எங்கே விபத்து நடந்தாலும் களத்துல இறங்கி முதலுதவி செய்ய ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச திருப்தி, மேலும் இதைப் பத்தி சிந்திக்கத் தூண்டுச்சு. ஒரே கருத்துடைய நண்பர்கள்கிட்ட பேசினேன். முதலுதவிப் பயிற்சியை எல்லாருக்குமானதா விரிவுபடுத்த என்ன வழின்னு யோசிச்சோம். டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார் எங்களை உற்சாகப்படுத்தினார்.

முதலுதவிங்கிறது சாதாரண விஷயமில்லை. பிரியிற உயிரை ஒரு உடலுக்குள்ள பிடிச்சி நிறுத்துற வேலை. பயம், பதற்றம் இல்லாம முறையா செய்யணும். முதலுதவி பண்ற திறன் மட்டுமில்லாம, சூழ்நிலையைக் கையாளுற திறமை, மத்தவங்களை அணுகுற திறமையும் கத்துக்கணும். ஓரளவுக்கு உடலின் செயல்பாடுகளைத் தெரிஞ்சுக்கணும்.

நாங்க இதுக்கு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க முயற்சி செஞ்சோம். சென்னையில இருக்கிற சிறப்பு மருத்துவர்கள் பலரைச் சந்திச்சோம். ‘எந்த எமர்ஜென்சிக்கு என்ன அறிகுறி இருக்கும், எப்படி முதலுதவி செய்யணும்’னு கேட்டு தகவல்களைத் தொகுத்து ஒரு பாடத்திட்டத்தை வடிவமைச்சு இந்திய மருத்துவக் கழகத்துக்கிட்ட கொடுத்தோம்.

அவங்க சின்னச்சின்னதா திருத்தங்கள் செய்து கொடுத்தாங்க. நல்ல மனதுடைய மருத்துவர்களை அழைச்சுக்கிட்டு பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள்னு சுத்த ஆரம்பிச்சோம். நிறைய தன்னார்வலர்கள் எங்ககிட்ட வந்தாங்க. அதுல பலர் விபத்துல உறவுகளைப் பறிகொடுத்தவங்க. அவங்க ரொம்ப தீவிரமா இந்தப் பயிற்சியை முன்னெடுத்துட்டுப் போனாங்க. இப்போ பெரிய இயக்கமா இது வளர்ந்திருக்கு. தினமும் நாலு பேர் போன் பண்ணி, ‘இன்னைக்கு ஒரு உயிரை மீட்டோம்’னு சந்தோஷமா பேசுறாங்க.

விபத்தோட உண்மையான கோரமுகத்தை, நெருங்கிய ரத்த உறவுகளுக்கு நேரும்போதுதான் உணரமுடியும். ஒவ்வொரு விபத்தும் ஒரு குடும்பத்தைக் குலைச்சுப் போடுது. நம்ம நேரத்துல ஒரு அஞ்சு நிமிஷத்தை ஒதுக்கினா அந்த இழப்பைத் தடுக்க முடியும். அந்தக் காலம் மாதிரி, ‘சாட்சிக்கு வா, விசாரணைக்கு வா’ன்னு போலீஸ் இப்போ அழைக்க முடியாது. முதலுதவி செய்யிறவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கு’’ உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் கலா.

நீலாங்கரையில் இருக்கிறது அலெர்ட் முதலுதவிப் பயிற்சி மையம். பொம்மைகள், எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் பயிற்சி கொடுக்கிறார்கள். இந்தியாவில் 18 இடங்களில் மட்டுமே இதுமாதிரி மையங்கள் இருக்கின்றன. அவற்றை மருத்துவப் பல்கலைக்கழகங்களே நடத்துகின்றன. ‘அலெர்ட்’ மட்டுமே சமூக ஆர்வலர்களால் நடத்தப்படுகிறது. 3 மணி நேரம் முதல், 2 நாள் பயிற்சி வரை தருகிறார்கள். பொதுமக்களுக்கு பயிற்சியும், சிறிய உபகரணங்களும் முற்றிலும் இலவசம். 20 பேர் ஒன்றிணைய முடிந்தால் 99440 66002 என்ற எண்ணை அழைக்கலாம். பயிற்சி யாளர் குழு உங்கள் களத்துக்கே வந்து பயிற்சி அளிக்கும். மரணத்தின் வாசலில் தவிக்கிற ஒரு உயிரைக் காப்பாற்ற 5 நிமிடமும், கொஞ்சம் அக்கறையும் போதும். மனம் இருந்தால் நீங்களும் தெய்வமாகலாம்!

"முதலுதவிங்கிறது சாதாரண விஷயமில்லை. பிரியிற உயிரை ஒரு உடலுக்குள்ள பிடிச்சி நிறுத்துற வேலை!"

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்