சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர்
ஏயெம்

ஏற்கனவே பார்த்த சூரிய நமஸ்காரத்தின் முதல் நிலை நினைவிருக்கிறதா?  சிலர், ‘ஏன் அடுத்த நிலைக்கு வராமல் வேறு எங்கெங்கோ போகிறீர்’ என்று உரிமையோடு புகார் எழுப்பி விட்டனர். சூரிய நமஸ்காரம் செய்து முழுப் பலனையும் பெறுவதற்கு அவசியமாகத் தேவைப்படும் வேறு சில விஷயங்களையும் இடையிடையே பார்க்க வேண்டியிருக்கிறது அல்லவா!



சூரிய நமஸ்காரத்தை எளிதாக முட்டியிட்டுச் செய்யக்கூடிய முறையை முன்பு பார்த்தோம். இந்த வாரத்தில் சமஸ்திதிக்கு அடுத்து உள்ள இரண்டு நிலைகளைக் காண உள்ளோம். முதல் நிலையிலிருந்து மூச்சோடுதான் இரண்டாம் நிலைக்கு வர வேண்டும். இந்த நிலைக்கு வரும்போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். உடல் அசைவோடு, மூச்சையும் ஒருங்கிணைத்துச் செய்யும்போது, மனமும் அதனோடு இணைந்து கொள்ளும்; அதனால் கவனம் கூடுதலாகும்.

இப்படி மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பு விரியும். அதற்கு ஏற்றபடி கைகள் சிறிய இடைவெளியுடன் முன்பக்கமாக மேலே போவது அதற்குத் துணை செய்யும். உள் மூச்சின்போது விரியும் உடல் அசைவு-மனம்-கால்களின் நிலை எல்லாமும் சேர்ந்து எப்படி ஒரு நிலைக்கு வளம் சேர்க்கின்றன என்பதைக் கூட இதில் அனுபவமாய் உணரலாம். இயற்கையான முறையில் மூச்சு உள்ளே வர எப்படியெல்லாம் கவனம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியலாம். கால் நிலைகளில் மாற்றம் இல்லாமல், மேல் உடல் மட்டும் இதில் வேலை செய்யும். சில யோகா மரபுகளில் கைகளை உடலின் பக்கவாட்டிலிருந்து மேலே உயர்த்துவார்கள். இது நுரையீரலை நன்கு விரித்து, உள் காற்றுக்கு இடம் தருவதாக இருக்கும். சிலர் கைகளை முன்புறமாக மேலே கொண்டு சென்று, உடலைப் பின்புறமாக நன்கு வளைத்து, பின்பு முன் குனியும் அடுத்த நிலைக்குப் போவார்கள்.

இந்த நிலை இப்படி ஒவ்வொரு யோகா மரபுக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டுள்ளது. உடலை நன்கு பின்புறமாக வளைப்பது என்பது உடலுக்கு மேலும் வலுவேற்றக் கூடியது.
ஆனால் உடல் இறுக்கம் இருப்பவர்களுக்கு இப்படி ஓரளவுக்கு மேல் வளைக்கும்போது வலி ஏற்படக்கூடும். சிறு வயதினர் இதைச் செய்வது எளிதாக இருக்கும் என்று சொல்ல ஆசைதான். ஆனால் இன்று அவர்களும் இறுக்கத்தோடுதான் உடலை வைத்திருக்கிறார்கள். சிறுவர்கள், இளைஞர்கள் நல்ல வளைவுக்கு தொடர்ந்து முயல வேண்டும். அப்படிச் செய்யும்போது மெல்ல மெல்ல உடலானது நெகிழ்வுத்தன்மையைப் பெறும். இளம் வயதிலேயே இப்படிச் செய்தால், வாழ்வில் ஆரோக்கியம் பெருகும்.

இரண்டாம் நிலை எந்த வேகத்தில் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அடுத்தடுத்த நிலைகள் அமையும். இதுதான் சூரிய நமஸ்காரத்தில் அசைவோடு, மூச்சோடு செய்யப்படும் முதல் நிலை.  இதன் வேகம், கவனம், தரம், நிதானம் எல்லாமே ஓரிரு வினாடிகளில் செய்யப் போகிற மூன்றாம் நிலையில் இருக்காதா என்ன? இந்தப் பண்புகள் ஆளுக்கு ஆள் மாறும். அதிகாலை எனில் ஒரு மாதிரி இருக்கும்; மாலையில் எனில் வேறு மாதிரி இருக்கும். முன்தயாரிப்புகள் இருந்தால் ஒரு மாதிரி, ஏதோ அவசர கதியில் கணக்குக்காக செய்தால் ஒரு மாதிரி என்று வரும்.

இதைச் செய்வது என்பது, விதை முளைத்து வெளியே வருவது போன்றது எனலாம். ஒவ்வொன்றுமே விதைதான். எண்ணம் - உணர்வு - பேச்சு - நோக்கம் - பிற செயல்கள் - வாழ்க்கைத்தரம் என எல்லாம் எப்படி இருக்கிறதோ, அதற்கு ஏற்ப விளைவுகள் வெளிப்படும். எனவே, ‘சூரிய நமஸ்காரம் செய்யும்போது மட்டும் கவனமாக இருந்தால் போதும், பிற விஷயங்களில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்’ என நினைப்பவர்களுக்கு இது நிறைவேறாத ஆசையாகவே முடியும். இதையெல்லாம் நன்கு தெரிந்துதான் பதஞ்சலி முனிவர், யமம் மற்றும் நியமத்தை முதலிலேயே வைத்து, ‘நன்கு ஆளுமையைத் தயார் செய்து கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் போலும். அப்படி யமம், நியமத்தில் சிறந்து விளங்குபவர்கள் எதைச் செய்தாலும் யோகமாகிவிடும். எதிலும் அந்த குணம் வெளிப்படும். ஒவ்வொரு செயலும் பேச்சும், ஒரு நபரின் இயல்பைச் சொல்லும் சாட்சிகள். சிலர் இதை வைத்தே ஒருவரின் பின்புலம், எதிர்காலத்தில் அவர் எப்படியானவராக இருப்பார், என்னென்ன சாத்தியப்படும் என்ற ஆய்வுகளை நுட்பமாய் செய்துவிடுவார்கள்.

ஒரு சிறு சம்பவம்: யோகி கிருஷ்ணமாச்சாரியார் அவர்களிடம் அவரது மகனும் யோகா நிபுணருமான டி.கே.வி.தேசிகாச்சார் அவர்கள் ஓர் அமெரிக்கரை அழைத்து வந்தார். அவரது உடல்நலம் மற்றும் பிரச்னைளைப் பற்றி விசாரிக்கும்போது, ‘‘நீங்கள் சொன்ன உங்களது ராசி சரியானதாக இல்லையே?’’ என்றாராம் யோகி கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள். மேலும், ‘‘நீங்கள் இந்த ராசியாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று ஒரு குறிப்பிட்ட ராசியையும் சொன்னாராம். அந்த அமெரிக்கர் நம்பிக்கையில்லாமல், ‘‘இருக்கவே முடியாது’’ என்றாராம். அதோடு தன் அம்மாவிடமும் தொலைபேசியில் கேட்டாராம். அவரும், ‘‘மகனே! நீ சொல்வதுதான் சரி’’ என்றாராம். ஆனாலும் கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் சொன்னதை விட்டுவிடாமல், அமெரிக்கா சென்றதும், தான் பிறந்த மருத்துவமனையிலும், பிறரிடமும் தீவிரமாய் விசாரித்தபின்பு, ‘யோகி கிருஷ்ணமாச்சாரியார் சொன்னதுதான் சரி’ என்று அறிந்து வியந்தாராம். மறக்காமல் தேசிகாச்சார் அவர்களிடம் தொடர்பு கொண்டு, பெரியவர் கிருஷ்ணமாச்சாரியாரின் பார்வையை மெச்சி, தனது ஆச்சர்யத்தைப் பகிர்ந்து கொண்டாராம். இப்போது சூரிய நமஸ்காரத்தின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை செய்முறை:

இரண்டாம் நிலை

*உடலின் பக்கவாட்டிலிருந்தோ அல்லது கூப்பிய நிலையிலிருந்தோ, மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாகத் தூக்கி தலைக்கு மேலே கொண்டு செல்லவும். உள்ளங்கைகள் முன்புறம் பார்த்து இருக்கட்டும்.
*விரல்கள் இணைந்து இருக்கட்டும்.
*கைகள் காதுகளை ஒட்டி நேராக இருக்கட்டும்.
*பார்வை சற்று தாழ்ந்து, முகவாய் கீழிறங்கி, கண்கள் திறந்திருக்கட்டும்.
*கால்கள் இணைந்து நன்கு தரையில் பதிந்து இருக்கட்டும்.

இந்த நிலையில் மார்பு சற்று விரிந்து, நுரையீரல் முழுதும் காற்று நிரம்பி இருக்கும். உடலில் ஏதோ சக்தி கூடியது போல இருக்கும். உடல் சற்று மேலிழுத்தபடி இருப்பதால், சதைகள் மேல் நோக்கி சிறிது இழுக்கப்படும். அதனால் கொஞ்சம் வளர்ந்த அல்லது நீண்ட மாதிரியாக ஓர் உணர்வு வரலாம்.

மூன்றாம் நிலை

ஓரிரு வினாடிகள் இடைவெளிக்குப் பின் மூச்சை வெளியே விட்டபடி...
*கீழ் முதுகிலிருந்து அசைவைத் தொடங்கி இடுப்புக்கு மேல் உடலை முழுவதையும் முன்புறமாக நீட்டியபடி வளைத்து, கீழ்ப்புறம் கொண்டு சென்று, இரு கைகளையும் கால் பாதங்களின் பக்கவாட்டில் வைக்கவும்.
*கால் முட்டிகளை நெற்றியைக் கொண்டு தொட வேண்டும்.
*கால்கள் நேராக இருக்கட்டும்.

இந்த நிலையில் வயிறு முழுதும் அமுங்கி காற்று முழுவதுமாக வெளியேறியிருக்கும். மேல் உடல் கால்களை ஒட்டி நன்கு படிந்து இருக்கும். முகவாய் கழுத்துக்குக்கீழ் நன்கு அழுந்தியிருக்கும். முதுகெலும்பு நன்கு இழுக்கப்படும்.  ஓரிரு வினாடிகள் இந்த நிலையை உணருங்கள். இதற்கு முதுகெலும்பு சார்ந்த பகுதி இறுக்கம் இல்லாமல் இருக்கவேண்டும். இடுப்புப்பகுதி நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும். தோள்பட்டைகள் இயல்பாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாத நிலையில், இரு கால்களுக்கு இடையில் சற்று இடைவெளி விடலாம் அல்லது கால்களை சற்று மடித்துக்கொள்ளலாம். இது தழுவிய நிலையாகும். இதனால் சில பலன்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், வலிந்து கஷ்டப்பட்டு உடலை வருத்தினால் பிரச்னைகளும் வரலாம். ஆரம்பத்தில் இப்படித் துவங்கி, பின்னர் மெல்ல மெல்ல முழுமையை நோக்கிப்போகலாம். அதிலும் எந்த உடற்பயிற்சியும் செய்யாதவர்களுக்கு உடல் இறுக்கம் அதிகமாக இருக்கலாம். அவர்கள் சூரிய நமஸ்காரப் பயிற்சிக்கு முன்பு, வார்ம்-அப் பயிற்சியோ அல்லது வேறு சில எளிய ஆசனங்களோ செய்து விட்டு பிறகு தொடங்கலாம்.
(உயர்வோம்...)

மாடல்: கஸ்தூரி கோஸ்வாமி
படங்கள்: புதூர் சரவணன்