க்ரூட் ஆயில் குளியல்!



விநோத ரஸ மஞ்சரி

நம்மூர் கூவம் ஆற்றில் யாரையோ தள்ளிவிட்ட மாதிரி இருக்கிறதா? இது ஒரு ஆயில் பாத் சிகிச்சை. சாதாரண ஆயில் இல்லை... பெட்ரோல் முதல் தார் வரை அனைத்துக்கும் ஆதாரமான க்ரூட் ஆயில் குளியல் இது!



ரஷ்யாவுக்கும்  ஈரானுக்கும் இடையில் இருக்கும் நாடு அசர்பைஜான். உலக அளவில் கச்சா எண்ணெய்க்குப் பெயர் போனது. இந்த நாடு முழுக்க எண்ணெய்க்கிணறுகள் உண்டு. இங்கிருக்கும் நஃப்தலன் எனும் நகரத்தில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மட்டும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உதவாது. காரணம், மற்ற எண்ணெய்களை விட இது திக்காக கொஞ்சம் அடர்த்தி மிகுந்து இருப்பதுதான்.

‘ஒன்றுக்கும் உதவாது’ என ஒதுக்கப்பட்ட இந்த நஃப்தலன் எண்ணெய்க்குள் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக போன நூற்றாண்டு முதலே மக்கள் நம்பத் துவங்கிவிட்டார்கள். அப்படியா என செக் பண்ணிப் பார்த்த ரஷ்ய விஞ்ஞானிகளும் ‘ஆமாம், இதில் ஆன்ட்டி பாக்டீரியல் குணம் இருப்பது உண்மைதான்’ என ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.

ஆன்ட்டி பாக்டீரியல் என்றால் அது சின்னச் சின்ன கிருமித் தொற்றுகளைத்தான் போக்க வேண்டும். ஆனால் இந்த ஆயிலில் குளியல் எடுத்துக்கொண்டால் அது சோரியாஸிஸ் தொடங்கி அனைத்து சருமப் பிரச்னைகளையும் போக்கும் என நம்புகிறார்கள் மக்கள். அதோடு இது மூட்டுவலியையும் விரட்டுவதாக பேச்சு இருக்கிறது. ஒரு பெரிய பாத் டப்பில் நஃப்தலன் கச்சா எண்ணெயை நிரப்பி அதில் பத்து நிமிடம் மட்டும் நம்மை ஊற வைத்து எடுக்க இந்த நகரம் முழுக்க எக்கச்சக்க ஸ்பாக்கள் இருக்கின்றன. இப்படி 15 நாட்கள் தொடர்ந்து தரும் சிகிச்சைக்கு சுமாராக 30 ஆயிரம் ரூபாய் கட்டணம். 40 டிகிரி சென்டிகிரேடில் இந்த ஆயிலை கதகதப்பாக்கி குளியல் போடத் தருவதால் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பலரும் ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன’ என்பார்களாம் கெஞ்சலாக. ஆனால் பத்து நிமிடத்துக்கு மேல் இந்த ஆயிலில் கிடப்பது ஆபத்து என ஸ்பா உரிமையாளர்களே சொல்கிறார்கள். ஆம், இந்த கச்சா எண்ணெயில் உள்ள சில ஆக்டிவ் இன்கிரீடியன்ஸ் கேன்சரைக் கூட வரவழைக்கக் கூடியதாம்! இதைத்தான் விஷப்பரீட்சைன்னு சொல்வாங்க!

- ரெமோ