தங்கையின் 5 வயது மகளிடம் தாய்மொழி கற்றேன்!



சிறந்த மொழிபெயர்ப்புக்காக 2014ம் ஆண்டுக்கான, ‘கனடா இலக்கியத் தோட்ட விருது’ பெற்றிருக்கிறார் கே.வி.ஷைலஜா. செழுமை வாய்ந்த மலையாள இலக்கியங்களை அதன் தன்மை குன்றாமல் தமிழுக்குத் தந்தவர். இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துத் தரும் வம்சி பதிப்பகத்தின் நிறுவனர்களில் ஒருவர். மலையாளச் சிறுகதை இலக்கியத்தில் புதியதொரு எழுத்து வகையைக் கட்டமைத்த ‘சிஹாபுதீன் பொய்த்தும்கடவு’வின் சிறுகதைகளை ‘யாருக்கும் வேண்டாத கண்’ என்ற பெயரில் மொழி பெயர்த்தமைக்காக ஷைலஜாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.



பூர்வீகம் கேரளா என்றாலும் பல வருடங்களுக்கு முன்பே திருவண்ணாமலையில் செட்டில் ஆன குடும்பம். ஷைலஜாவுக்கு வாசிப்பை அறிமுகம் செய்தது அம்மா. கல்லூரிக் காலத்திலேயே வெகுதீவிர வாசகியாகி விட்டார். தேர்ந்த ஆளுமைகளை அறிமுகம் செய்து எழுத்து நோக்கி ஈர்த்தது, கணவர் பவா.செல்லத்துரை. இதுவரை 10 மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.

‘‘அம்மா எல்லாவிதமான இலக்கியங்களையும் வாசிக்கக் கூடியவர். அந்த வாசிப்பு வாசனை சிறுவயதிலேயே எனக்கும் என் சகோதரி ஜெயஸ்ரீக்கும் ஒட்டிக்கிச்சு. எல்லாவிதமான படைப்புகளையும் வாசிப்போம். அந்த வாசிப்புதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அறிமுகம் செஞ்சுச்சு. பவா, அந்த அமைப்புல தீவிரமா இயங்கிக்கிட்டிருந்தார். அவரோட பரிச்சயம் கிடைச்சபிறகு, பாம்பு தோல் உரிக்கிற மாதிரி, தேர்ந்தெடுத்து படிக்கிற நுட்பம் புரிஞ்சுச்சு.  ‘முற்றம்’னு ஒரு இலக்கியச் சந்திப்பை தொடங்கினோம். ஜெயகாந்தன், அம்பை, பிரபஞ்சன் மாதிரி முக்கியப் படைப்பாளிகள் அந்த நிகழ்ச்சிக்கு வந்தாங்க. அந்தக் காலகட்டம் வரைக்கும் வெறும் வாசிப்பாளியா மட்டுமே இருந்தேன். எழுதணும்ங்கிற எண்ணம் வந்ததேயில்லை.

ஒருமுறை ஸ்ரீபதி பத்மநாபா நடத்தின ‘ஆரண்யம்’ இதழ்ல பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய கட்டுரையோட ஒரு பகுதி வந்திருந்துச்சு. அந்த எழுத்தில இருந்த உயிர்ப்பும், தனித்துவமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. நானும் பவாவும் எந்தப் படைப்பு எங்களைப் பாதிச்சாலும் அதுபத்தி பார்க்கிற நண்பர்கள்கிட்ட எல்லாம் பேசிக்கிட்டே இருப்போம். அதேமாதிரி பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி திலகவதி மேடம்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அவங்க அவரைப் பத்தி நிறைய செய்திகள் சொன்னாங்க. அவர் கேரள இலக்கியத்தோட அடையாளம். கேரளத்து ஜெயகாந்தன்னு பிற படைப்பாளிகள் அவரை அழைக்கிறதுண்டாம். 

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சென்னை வந்திருந்தப்போ திலகவதி மேடம் எங்களை அழைச்சாங்க. நாங்க போய் ‘முற்றம்’ கூட்டத்துக்கு அவரை கூப்பிட்டோம். உற்சாகமாக வந்தார். உலகக் கவிதைகள், இந்தியக் கவிதைகள் பத்தி அவர் பேசின பேச்சு அற்புதமான ஆய்வு இலக்கியம். கூட்டம் முடிந்ததும் எங்கள் வீட்டிலேயே தங்கினார். மறுநாள் அதிகாலை, தன் சுயசரிதைப் புத்தகத்தை கையில வச்சுக்கிட்டு ஒரு குழந்தையின் குதூகலத்தோட சில பகுதிகளை வாசிச்சுக் காட்டினார். அவரோட கம்பீரமான குரல்ல அந்த வாசிப்பைக் கேட்கிறது அற்புதமான அனுபவமா இருந்துச்சு. ஊருக்குக் கிளம்பும்போது அந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசாக் கொடுத்தார்.

ஆனா, அந்த நிமிடம் வரைக்கும் எனக்கு மலையாளம் எழுதப் படிக்கத் தெரியாது. இத்தனைக்கும் என் தாய்மொழி அதுதான். இத்தனை வயசுக்கு அப்புறம், அம்மாகிட்ட போய் இதை வாசிச்சுக் காட்டுன்னு கேட்க அவமானமா இருந்துச்சு. என் சகோதரி ஜெய ஸ்ரீ யோட மகள் சுகானா கேரளாவில் இருந்து வந்திருந்தா. ஒன்றாம் வகுப்பு படிக்கிற பொண்ணு. அவகிட்ட மலையாளம் கத்துக்க ஆரம்பிச்சேன். படிப்படியா நானும் அவளும் சேர்ந்து அந்தப் புத்தகத்தில சில பகுதிகளை தமிழ்ல மொழிபெயர்த்தோம். அதை பவாகிட்ட காட்டினேன்.

பவா கறாரான விமர்சகர். ஒரு படைப்பு நல்லா இல்லைன்னா ‘பிடிக்கலே’ன்னு முகத்துக்கு நேரா சொல்லிடுவார். பிடிச்சா, கொண்டாடுவார். அவருக்கு எங்கள் மொழிபெயர்ப்பு பிடிச்சிருந்துச்சு. முற்றம் கூட்டத்துல பாலச்சந்திரன் பேசின பேச்சை நான் தமிழ்ல மொழிபெயர்த்தேன். அது ஒரு இதழ்ல வந்திருந்துச்சு. நிறைய நண்பர்கள் உற்சாகப்படுத்தினாங்க. பவாவோட பாராட்டும், நண்பர்களோட உற்சாகமும் பாலச்சந்திரனோட சுயசரிதையை முழுமையா மொழிபெயர்க்குற தைரியத்தைக் கொடுத்துச்சு.

உண்மையைச் சொல்லணும்னா பாலச்சந்திரனோட எழுத்து மந்திர எழுத்து. வாழ்க்கையை மாத்துற சக்தி அந்த எழுத்துக்கு உண்டு. அவரளவுக்கு நேர்மையா மனிதர்கள் வாழ்றது கஷ்டம். உச்சங்களை மட்டுமில்லாம சரிவுகளையும் வெளிப்படையா பேச ஒரு படைப்பாளிக்கு தைரியம் வேணும். அந்த எழுத்துல மூழ்கிப்போனேன். ஒரு வருடம் அந்த நூலை மொழிபெயர்த்தேன். கிட்டத்தட்ட என் இயல்பே மாறிப் போனது போலிருந்துச்சு. திடீர்னு அழுகை வரும்; உடம்பு சரியில்லாமப் போகும். அவ்வளவு பெரிய பாதிப்பை வேறெந்த பிரதியும் எனக்குள்ள ஏற்படுத்தினதில்லை. ‘சிதம்பர நினைவுகள்’ங்கிற பேர்ல அந்த நூல் தமிழ்ல வெளிவந்துச்சு.

அதுக்குப்பிறகு ஓரளவுக்கு தைரியம் வந்துச்சு. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் கேரளாவோட மூத்த இலக்கியவாதியுமான என்.எஸ்.மாதவனோட 10 சிறுகதைகளை ‘சர்மிஷ்டா’ங்கிற தொகுப்பா மொழிபெயர்த்தேன். கே.ஆர்.மீராவோட சிறுகதைகளை ‘சூர்ப்பனகை’ங்கிற தொகுப்பா கொண்டு வந்தேன். அடுத்தடுத்து நிறைய வேலைகள் செஞ்சேன். தொடர்ச்சியா நடிகர் மம்மூட்டியோட சுயசரிதையான ‘மூன்றாம் பிறை’யும் வந்துச்சு.

சிஹாபுதீன் கேரளாவின் பன்முக ஆளுமை. அரூபம், அமானுஷ்யம் ததும்புற எழுத்து அவரோடது. அவருடைய எழுத்துக்களை மொழிபெயர்த்ததுக்கான அங்கீகாரம், கனடா இலக்கியத் தோட்ட விருது. இன்னும் உற்சாகமாவும் வேகமாவும் செயல்பட வேண்டிய அவசியத்தையே இந்த விருது உருவாக்குது. மொழிபெயர்ப்பு எனக்கு ஏகப்பட்ட படிப்பினைகளை கொடுக்குது. நிறைய தேடல்களைத் தருது. என்.எஸ்.மாதவனோட நாவல்கள்ல நிறைய யானைகள் வரும். அதுக்காக, உலகம் முழுவதும் உள்ள யானை வகைகள் பத்தி படிச்சேன். அதுல ஒரு பெரிய சுவாரஸ்யம்... இந்தியாவில எங்கே யானை வளர்த்தாலும், அதற்குத் தரப்படுகிற உத்தரவுகள் மலையாளத்துலதான் இருக்குமாம்.
மொழிபெயர்ப்பில நிறைய சவால்கள் இருக்கு. வாசகர்களுக்கு இது வேற்றுமொழிப் படைப்புங்கிற எண்ணம் வரக்கூடாது. அதேநேரம் மூல எழுத்தாளருக்கும் நேர்மையா இருக்கணும். மொழிபெயர்ப்பாளரோட குரல் அடங்கியே ஒலிக்கணும்.

60-70கள்ல இந்திய சினிமா, இலக்கியத்தில கேரளாவுக்கு தனித்த இடம் இருந்துச்சு. இன்னைக்கும் வித்தியாசமான தளங்கள்ல இளம் படைப்பாளிகள் எழுத வர்றாங்க. அதேநேரம், மற்ற எல்லா மொழிகளைக் காட்டிலும் தமிழ்ல நிறைய புதிய முயற்சிகள் நடக்குது. ஜே.பி.சாணக்யா, காலபைரவன், மனோஜ், எஸ்.செந்தில்குமார்,  ஸ்ரீராம் மாதிரி இளம் படைப்பாளிகள் புதுப்புது மொழிக்கட்டையும், களத்தையும் தேடி எடுத்து எழுதுறாங்க. சந்திரா, உமா மகேஸ்வரி மாதிரி பெண் படைப்பாளிகளுக்கும் தனி அடையாளங்கள் இருக்கு...’’ என்று நிதானமாக மதிப்பீடு செய்கிற ஷைலஜா, இப்போது அஷிதாவின் 6 குறுநாவல்களை மொழிபெயர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

"அந்த நிமிடம் வரைக்கும் எனக்கு மலையாளம் எழுதப் படிக்கத் தெரியாது. இத்தனைக்கும் என் தாய்மொழி அதுதான்!"

- வெ.நீலகண்டன்
படங்கள்: திவாகர்