இளையராஜா ஞானி... எம்.எஸ்.வி இசையின் சாமி! ரஜினி
“சினிமா உலகம் பெரியது. பலரும் வந்தால் நிகழ்ச்சியின் போக்கும் சூழலும் மாறிவிடும் என்றுதான் நான் யாரையும் அழைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் உங்களுக்கு மட்டும் இங்கே வரத் தோன்றியது எப்படி?’’ - வராது வந்த சூப்பர் ஸ்டாரிடம் இப்படியொரு கேள்வியை இசைஞானி இளையராஜாவால்தான் கேட்க முடியும். மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவாக இளையராஜா நடத்திய ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி’ என்ற சிறப்பு இசை நிகழ்ச்சி அது. விழாவில் அள்ளி வந்த சுவாரஸ்யங்கள் இனி...
இசைஞானி இந்த விழாவிற்கு அழைக்காவிட்டாலும், ரஜினி, பிரகாஷ்ராஜ், விவேக், பார்த்திபன் என சில பிரபலங்கள் வந்திருந்த பண்பைக் கண்டு, இளையராஜாவே அதிசயித்தார். புதுமைப்பித்தனின் சின்னதொரு கவிதை அறிமுகத்தோடு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் பிரகாஷ்ராஜ். தனது 14வது வயதில் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’யைக் கேட்டு மயங்கியதையும் அக்காலம் தொட்டே மெல்லிசை மன்னரை மானசீக குருவாக ஏற்று இசைப்பித்தனாக மாறியதையும் குறிப்பிட்டு, அவரது மாட்டு வண்டி எம்.எஸ்.வியால் எப்படி பாட்டு வண்டியாக மாறியது எனவும் இசைஞானி சொன்ன விதம் அரங்கில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பொன்வானம் பன்னீர் தூவிக்கொண்டிருக்க, மாலை 7 மணிக்கு திருவாசகத்திலிருந்து சின்னதொரு பாடலுடன் ஆரம்பித்து, அப்படியே ‘நெஞ்சம் மறப்பதில்லை...’ கோரஸில் ரசிகர்கள் மெய்மறக்கத் தொடங்கினர். கறுப்பு வெள்ளை காலத்து பாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்த ராஜா, எம்.எஸ்.வியுடன் சேர்ந்து இசையமைத்த ‘மெல்லத் திறந்தது கதவி’லிருந்து ‘ஊரு சனம்...’ பாடலையும் பாடினார். 25 பாடல்கள் பாடப்பட்டன.
பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ரஜினியை வம்புக்கு இழுத்து கலாய்த்தார் இளையராஜா. ‘‘ ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ பாடல் மாதிரி உச்ச ஹீரோ படங்களுக்கு பாட்டு அமைக்க முடியுமா? ஆனாலும் ரஜினிக்கு நான் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ கொடுத்தேன்’’ என இசைஞானி சொல்ல, அழகான புன்முறுவல் பூத்தார் ரஜினி. தனது மனைவியுடன் விழாவிற்கு வந்திருந்த யுவன், இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்றார். ‘இந்த நிகழ்ச்சிக்கு நான்கு டிக்கெட் வேண்டும்’ என பவதாரிணியிடம் அவர் தோழிகள் கேட்டிருக்கின்றனர். அவர் கேட்டதற்கு, ‘‘ஆன்லைன்ல இருக்கு. விலை கொடுத்து வாங்கிக்கோ’’ என கறாராக மகளிடம் சொல்லிவிட்டாராம் ராஜா.
நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வந்துவிட்டார் ரஜினி. மேடைக்கு முன்புறம் பார்வையாளர் வரிசையில் இருந்த ரஜினியிடம் ‘‘சொல்லுங்க சாமி... சொல்லுங்க’’ என அடிக்கடி உரையாடிக்கொண்டே இருந்தார் இளையராஜா. ‘‘சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க’’ என இளையராஜா வேண்டுகோள் விடுக்க. உடனே மேடை ஏறிய ரஜினி, ‘‘இளையராஜா இசைஞானி. ஆனால் எம்.எஸ்.வி இசையின் சாமி. கடவுளைப் பற்றி இந்த ஞானிக்குத்தான் தெரியும்!’’ என்று ஆன்மிகம் கமழ பேச்சைத் துவங்கினார் ரஜினி.
‘‘எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்பட பலரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.வி. ராமருக்கு உதவிய அனுமன் போல் இருந்தாலும், ஒரு அணில் மாதிரி வாழ்ந்தார். அப்படிப்பட்ட மகானை நான் பார்த்ததில்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். திறமை என்பது கடவுள் தரும் பரிசு. தாய், தந்தையரிடமிருந்து வருவது கிடையாது. சரஸ்வதி கடாட்சம் எம்.எஸ்.விக்கு கிடைத்திருக்கிறது!’’ என்று அரங்கம் முழுவதையும் நெகிழ வைத்தார் ரஜினி. அவர் இவ்வளவு பேசுவார் என யாருமே நினைத்திருக்கவில்லை. இசைஞானிக்கு முகம் முழுக்க ஆனந்த ஆச்சர்யம்!
திரைப் பிரபலங்களைக் கூட அழைக்காமல், ‘டிக்கெட் வாங்கிட்டு வந்து பாருங்க’ என இளையராஜா கண்டிப்புடன் சொல்லக் காரணம், நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதி சிந்தாமல், சிதறாமல் எம்.எஸ்.வி குடும்பத்திற்குக் கிடைக்கவேண்டும் என்பதுதான். அதற்காகவே தனது அறக்கட்டளை மூலம் நிகழ்ச்சியை நடத்தினார். எம்.எஸ்.வி.யின் குடும்பத்தினரை மேடையிலேயே வரவழைத்து, நிகழ்ச்சியினால் கிடைத்த பெரும்தொகையை இளையராஜா கொடுக்க, ராஜாவைக் கட்டி அணைத்துக்கொண்டார் சூப்பர்ஸ்டார்.
நிகழ்ச்சியின் கடைசி பாடலாக ‘படகோட்டி’யிலிருந்து ‘பாட்டுக்கு பாட்டெடுத்து...’ பாட அரங்கில் அத்தனை பேரும் நெகிழ்ந்து கைதட்ட, அதுவே இசை போல் ஆனது. அந்தப் பாடலை முடித்த உடனேயே இசைஞானி அரங்கிலிருந்து வெளியே காருக்கு வந்துவிட, நிகழ்ச்சி முடிந்தது தெரியாமலேயே அரங்கில் ரசிகர்கள் பாடலில் லயித்திருந்தனர்.
- மை.பாரதிராஜா
|