எம்.ஆர்.பி



விலையே தேவையில்லை?

எம்.ஆர்.பி... அதாவது, ஒரு பொருளை அதிகபட்சம் இந்த விலைக்குத்தான் விற்கலாம் என நிர்ணயிக்கும் மேக்ஸிமம் ரீடெய்ல் ப்ரைஸ். ஒரு பொருளை எம்.ஆர்.பி விலைக்கு மேலே விற்பது நம் நாட்டில் தண்டனைக்குரிய குற்றம். ஆனால், ‘‘இந்த எம்.ஆர்.பி முறையே வேஸ்ட். இந்தியா தவிர வேறெங்கும் இது இல்லை. நாமும் இதைத் தூக்கிப் போட்டுவிடலாம்!’’ என குரல்கள் கிளம்பியுள்ளன இப்போது. அப்படி திடுதிப்பென்று முடிவெடுக்க முடியுமா? எம்.ஆர்.பி முறையின் சாதக பாதகங்களை இங்கே அலசுகிறார் நுகர்வோர் நலனுக்கான ‘கன்சர்ட்’ அமைப்பைச் சேர்ந்த எம்.ஆர்.கிருஷ்ணன்...



எம்.ஆர்.பி மீது ஏன் வெறுப்பு?

எம்.ஆர்.பி விலை என்பதே கேலிக் கூத்தாகிவிட்டது. யாரும் அதை மதிப்பதில்லை. தியேட்டர், பேருந்து, ரயில் நிலையங்களில் எம்.ஆர்.பி விலையை மீறி விற்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. அரிசி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எம்.ஆர்.பி முறைக்குள் வருவதே இல்லை. சில பொருட்களில் எம்.ஆர்.பி எனக் குறிப்பிட்டிருப்பதே அநியாய விலையாக இருக்கிறது (உ-ம்: பட்டாசுகள், ஆட்டோமொபைல் பார்ட்ஸ்). ஒரு பொருளை விலை குறைத்து விற்க முடிந்தாலும், எம்.ஆர்.பி விலையில்தான் விற்க வேண்டும் என சில்லரை விற்பனையாளர்கள் நினைப்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள். இதெல்லாம்தான் எம்.ஆர்.பி முறைக்கு எதிராகப் பொதுவாய் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்.



எம்.ஆர்.பியில் என்ன பிரச்னை?


இன்று எம்.ஆர்.பி முறை எல்லோருக்கும் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக எம்.ஆர்.பி என்ற முறையே தவறு எனச் சொல்ல முடியாது. முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்கு நுகர்வோர் பலியாகிவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்தியாவில் எம்.ஆர்.பி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு சோப் பவுடர் பாக்கெட் 100 ரூபாய் எம்.ஆர்.பி என்றால், அதை 110 ரூபாய்க்கு விற்கும் கடைக்காரர் மீது நாம் ‘டிபார்ட்மென்ட் ஆஃப் லீகல் மெட்ராலஜி’ துறைக்கு புகார் கொடுக்கலாம். நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், அந்த சோப் பவுடருக்கு 100 ரூபாய் என எம்.ஆர்.பி நிர்ணயித்தது சரியா? இதைக் கண்காணிக்க இங்கே எந்த சிஸ்டமும் இல்லை. அதுதான் பிரச்னை!

சந்தைப் பொருளாதாரம் சரியா?


‘எம்.ஆர்.பி முறை வேண்டாம்... பொருட்களின் விலையை சந்தையே நிர்ணயிக்கட்டும். அதுதான் மக்களுக்கும் நல்லது’ என்கிறார்கள் சில பொருளாதார நிபுணர்கள். அதாவது, 60 ரூபாய் அடக்க விலையுள்ள ஒரு குளிர்பான பாட்டிலை ஒரு கடைக்காரர் அதிக லாபம் வைத்து 80 ரூபாய்க்கு விற்றால், எதிர்க்கடைக்காரர் அதையே 70 ரூபாய்க்கு விற்று வாடிக்கையாளர்களை இழுப்பார். போட்டிக்கு இந்தக் கடைக்காரர் 65 ரூபாய்க்கு விலையைக் குறைப்பார். இப்படியே போட்டி போட்டு 61 ரூபாய் வரை அந்தக் குளிர்பானம் விலை குறைந்து மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதுதான் சந்தையே விலையைத் தீர்மானிக்கும் முறை. இதனால் நுகர்வோர் பயனடைவார்கள் எனச் சொல்லப்படுகிறது.

 ஆனால், இதில் வேறுவிதமான ஒரு ஆபத்தும் இருக்கிறது. அந்தக் குளிர்பானத்தின் இருப்பு மிகவும் குறைந்து போனாலோ, அதிக மக்கள் அதை வாங்கப் போட்டி போட்டாலோ, ஸ்டாக் வைத்திருக்கும் கடைக்காரர் அதை யானை விலைக்கு ஏற்றி விற்பார். பதுக்கல், கடத்தல் என மோசமான முறைகேடுகளுக்கு இது வழிவகுக்கும். சந்தைப் பொருளாதாரத்தின் மைனஸ் பாயின்ட் இது. இதன் மூலம் நுகர்வோர்கள் நசுக்கப்படுவார்கள். இது தவிர, சிமென்ட் விலையில் எப்போதும் நடப்பது போல சிண்டிகேட் கூட்டணி அமைந்தால் வம்பு. எல்லா முதலாளிகளும் கூட்டு சேர்ந்து சிமென்ட் மூட்டை விலையை அநியாய வேகத்தில் உயர்த்துவது போல, ‘90 ரூபாய்க்குக் குறைவாக இந்த குளிர்பானத்தை விற்கக் கூடாது’ என கடைக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து தீர்மானம் போட்டுவிட்டால் போச்சு. நுகர்வோரின் பணப்பைக்கு மொட்டைதான்!

சாதகங்கள் நுகர்வோருக்கு!


எம்.ஆர்.பி விலை ஒரு பக்கம் இருந்தாலும் இப்போதும் சில சில்லரை விற்பனையாளர்கள் ஒரு பொருளுடன் இன்னொரு பொருளை இலவசமாகக் கொடுப்பது, ஒன்று எடுத்தால் இன்னொன்று இலவசம் என்பது, பண்டிகை தினங்களில் தள்ளுபடி தருவது என சந்தைப் பொருளாதாரத்தின் பயனை மக்களுக்குத் தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். முதலில் ‘எம்.ஆர்.பி என்பது ஒரு பொருளின் அறுதியிட்ட விலை அல்ல... அதிக பட்ச விலை’ என்பதை மக்களும் சில்லரை விற்பனையாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்.ஆர்.பிக்குக் கீழே எவ்வளவு விலை குறைத்தும் ஒரு பொருளை விற்கலாம். தடையில்லை. அதிக விலைக்கு விற்கத்தான் தடை!

அநியாய எம்.ஆர்.பி!

எம்.ஆர்.பி முறைக்கு எதிராக 90களிலேயே கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வந்தது. மத்திய அரசே இதற்காக ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு நடத்தும் அளவுக்கு பிரச்னை வளர்ந்தது. ‘எம்.ஆர்.பி முறையில் நிறுவனங்களே விலையை ஏற்றி வைக்க மாட்டார்கள்’ என்றுதான் அந்தக் கமிட்டி கடைசியாக சுட்டிக்காட்டியது. ‘ஒரு பொருளின் எம்.ஆர்.பி விலையைக் கொண்டே அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் சென்ட்ரல் எக்சைஸ் டியூட்டி, வாட் வரி போன்றவை வசூல் செய்யப்படுகின்றன. அதிக எம்.ஆர்.பி என்றால் அதிகமான வரியை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும். ஆக, நிறுவனங்களே அநியாய எம்.ஆர்.பியை நிர்ணயிக்க மாட்டார்கள்’ என்றது அந்தக் கமிட்டி. இதனால்தான் இன்றுவரை எம்.ஆர்.பி முறை நடைமுறையில் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்தக் காலத்தில் இந்த வரிகளில் எல்லாம் ஏய்ப்பு நடக்கிறதோ அல்லது எப்படி சமாளிக்கிறார்களோ... கவலையே படாமல் எம்.ஆர்.பி விலையை வானளவு நிர்ணயிக்கின்றன நிறுவனங்கள்.

என்ன தீர்வு?

சென்ட்ரல் எக்சைஸ் டியூட்டி, வாட் வரி தவிர விற்பனை வரியையும் அரசு ஆயுதமாகக் கையில் எடுக்கலாம். பொருட்களின் எம்.ஆர்.பி விலையைக் கொண்டே விற்பனை வரி கட்ட வேண்டும் என இறுக்கிப் பிடிக்கலாம். இதனால், அதிக எம்.ஆர்.பி கொண்ட பொருட்களை வியாபாரிகளே வாங்க மாட்டார்கள். விலை கட்டுக்குள் வரும். இதைத் தவிர விலை நிர்ணயித்தலையும் அரசு சற்று சீரியஸாகப் பின்பற்ற வேண்டும். தற்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உணவுத் துறைகளில் ‘ப்ரைஸ் மானிட்டரிங் செல்’ எனும் விலை கண்காணிப்பு துறை இருக்கிறது. இந்தத் துறை அரிசி, பருப்பு துவங்கி அனைத்து நுகர்வோர் பொருட்களும் தினசரி சந்தையில் என்ன விலை போகிறது எனக் கணக்கெடுக்கிறது. இந்த விலைகளை அடிப்படையாக வைத்து ஒரு பிராண்டட் பொருளின் எம்.ஆர்.பி விலையை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்த அதிகாரம் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் பிரச்னை. இந்த முறையில் எம்.ஆர்.பி.யை கட்டுப்படுத்தும்போது பாக்கெட் பொருட்களின் எம்.ஆர்.பி அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாறும்!

"ஒரு பிராண்டட் பொருளின் எம்.ஆர்.பி  விலையை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்த அதிகாரம்  முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் பிரச்னை."

- டி.ரஞ்சித்