தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆர்யாவை சென்னை சிறைச்சாலைக்கு மாற்றுகிறார்கள். அங்கே வைத்து வெற்றிகரமாக தண்டனையை நிறைவேற்றுகிறார்களா? அதற்கு வருகிற பிரச்னைகள் என்ன? என்பதே ‘புறம்போக்கு’! பொதுவுடமை எனும் டேக் லைனுக்கு ஏற்ப கம்யூனிசத்தோடு கொஞ்சம் தொழிலாளிகளின் வாழ்வியலையும் பேசுகிறது படம்!
மூன்று ஹீரோக்களை (ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம்) வைத்து, ஜெயில் பின்னணியில் கதை சொல்லி, அதோடு மக்களின் எல்லா பிரச்னைகளிலும் புகுந்து வந்து சமூக அக்கறை விதைத்திருக்கிறார்கள். இவர்களை வைத்து கமர்ஷியல் கலாட்டா, மாஸ் மசாலா செய்யாமல் நிதர்சன அரசியலையும் பேச முயற்சித்த வகையிலும் ‘நறுக்’கென மக்களின் அவலங்களைச் சாடிய விதத்திலும் டைரக்டர் ஜனநாதனுக்கு முதல் வணக்கம்! வேடிக்கை, வக்கிர காமெடி, வகைதொகை இல்லாத வன்முறை எனப் பழகியிருக்கும் தமிழ் சினிமாவுக்கு கம்யூனிசம், குளோபல் வார்மிங், அரசுகளின் அராஜகம் இதெல்லாம் எஸ்.பி.ஜனநாதனிடமிருந்து மட்டுமே கிடைக்கும்.
இதில் தீவிர கம்யூனிசவாதியாக வரும் ஆர்யாவிடம் இதற்கு முன் பார்த்த கமர்ஷியல் ஆர்யாவைத் தேடக் கூடாது. ஆரம்ப கட்ட தயக்கத்துக்குப் பிறகு நிதானமாக கதைக்குள் போகத் தயாராகி விடுகிறார் ஆர்யா. ‘ஜெனிவா ஒப்பந்தப்படி கைதிகளை துன்புறுத்தக் கூடாது பிரதர்’ எனப் போகிற போக்கில் சொல்லிப் போகிற ஆர்யாவைப் பார்த்தால் ஆச்சரியம். ஆனாலும் ஆர்யா இன்னும் இந்தக் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றியபோது வாய் பிளந்து, கண்கள் வெறித்து, உடல் விறைக்க விழும் காட்சியில் ஆர்யா மனசைக் கரைப்பது உண்மை!
சிறை அதிகாரியாக ஷாமிடம் நுட்பமான நடிப்பு. பாதிக்கப்பட்ட சிறையின் அமைப்பு, கைதிகள், பாதுகாப்பு என்ற விதத்தில் கண்டிப்பும் கண்ணியமுமாக இடத்தோடு கச்சிதமாகப் பொருந்துகிறார் அவர்.
தூக்குப் போடும் தொழிலாளியாக விஜய்சேதுபதி புது வடிவம் தருகிறார். ஏற்றுக் கொண்டிருக்கிற கேரக்டருக்கெல்லாம் நியாயம் செய்யும் விஜய்சேதுபதிக்கு நிச்சயம் இன்னும் பெரிய இடம் காத்திருக்கிறது. ‘‘நீதிபதி தீர்ப்பை சொல்லிட்டு போயிடுறார்... அதிகாரி தண்டனையை நிறைவேத்துன்னு சொல்றார்... கடைசியாய் லீவரை இழுக்கும் என்னைப் போய் கொலைகாரன்னு சொல்றாங்க’’ எனப் புலம்பும் இடத்திலும், கடைசியில் ஆர்யாவின் உடலைக் கட்டிப் பிடித்துக் கதறும்போதும் விஜய்சேதுபதி நடிப்பை கலை வடிவமாக்கி விடுகிறார். பாத்திரத்தை உணர்தலே நடிப்பு என்பது அங்கே நிரூபணமாகிறது.
கார்த்திகா அடர்த்தியான கம்யூனிசம் பேசி கவர்கிறார். வழக்கமாக அவரை பெரிய விழி குளோஸப்பும் கவர்ச்சி லுக்குமாக காண்பது மீறி அவருக்கு இந்தக் கேரக்டர் புதுசு. தடித்தோல் கொண்ட சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்பதை ஜனநாதனின் உரையாடல்கள் உணர வைக்கின்றன. இருந்தாலும் ஆங்காங்கே கதையோடு ஒட்டாமல் பிரசாரம் தலை தூக்குவதைத் தவிர்த்திருக்கலாம்.
வர்ஷனின் இசையில் பாடல்கள் கவனத்தில் வரவில்லை. என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு சிறைச்சாலையின் இண்டு இடுக்குகளிலும் பயணிக்கிறது. சிறைச்சாலையை உருவாக்கிய கலை இயக்குநர் செல்வகுமாருக்கு சல்யூட்! இப்படியொரு மரியாதையான படம்... அதில் போய் அழகிகளோடு(!) ரயில்வே பிளாட்பாரத்தில் விஜய்சேதுபதி போடும் ஆட்டம் எதற்கு? மக்களின் அக்கறை சார்ந்த படத்தில் குறைகள் இருந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
புறம்போக்கு - புதுப்போக்கு!
- குங்குமம் விமர்சனக் குழு