உடனடி வேலைவாய்ப்பு தரும் மருத்துவ படிப்புகள்!



இந்திய மருத்துவத்துறை பெரும் வளர்ச்சியை எட்டிவரும் தருணம் இது. குறிப்பாக தமிழகம் உலகின் மருத்துவத் தலைநகராக வளர்ந்து வருகிறது. வளர்ந்த நாடுகளில் இருந்தும் கூட சிகிச்சைக்காக பலர் சென்னை வரும் அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் இங்கு வலுப்பெற்றுள்ளது. தரமான சிகிச்சை, செலவு குறைவு, நிறைவான போக்குவரத்து வசதிகள், மனதுக்கு இதமான சூழல்... போன்ற காரணங்களால் பலர் தமிழகத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

இந்தத் தேவையை ஈடுகட்டும் வகையில் இங்கு ஏராளமான கார்ப்பரேட் மருத்துவமனைகளும் முளைத்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 1 மருத்துவருக்கு தொழில்நுட்பம் அறிந்த 8 உதவியாளர்கள் தேவை. மருத்துவத்துறையில் ஏராளமான உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் திறம்பட இயக்க டெக்னீஷியன்கள் தேவை. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவுக்கு சுமார் 25 லட்சம் மருத்துவ உதவியாளர்கள், டெக்னீஷியன்கள் தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. முறையாகத் தேர்ந்தெடுத்துப் படித்தால் அந்த 25 லட்சம் பேரில் ஒருவராக நீங்கள் ஆகலாம்!

மருத்துவத்துறை கார்ப்பரேட்டாக மாறியபிறகு, அனைத்துப் பணிகளும் வரன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன. முறையான ஊதியம், மரியாதை கிடைக்கிறது. அதேபோல், முறையான கல்வித்தகுதி பெற்ற உதவியாளர்கள், டெக்னீஷியன்களையே நிர்வாகங்கள் தேர்வு செய்கின்றன. மருத்துவத்துறையின் இந்த பிரமாண்ட வளர்ச்சி, துணை மருத்துவத்துறையான பாரா மெடிக்கல் துறை மீது கவனத்தைக் குவித்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் இத்துறையில் ஏராளமான பட்டப் படிப்புகள் வந்து விட்டன. பல கார்ப்பரேட் மருத்துவமனைகளே இப்படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்களையும் தொடங்கியுள்ளன. கார்டியாலஜி, டயாலிசிஸ், அனஸ்தீசியா என மருத்துவத்தின் ஒவ்வொரு பிரிவு சார்ந்தும் சிறப்பு படிப்புகள் வந்து விட்டன.

படிப்பு முடித்ததும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும், மருத்துவத் துறையில் பணிபுரிய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர்களுக்கும் இந்த பாரா மெடிக்கல் படிப்புகள் புதிய கதவுகளைத் திறக்கின்றன.‘‘நம் நாட்டில் மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. புதிது புதிதாக நோய்கள் உருவாகும் நிலையில், மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியிடமும் அதிக நேரம் செலவு செய்யவும் முடிவதில்லை. நோயாளியை சோதித்தல், முன் தயாரித்தல்கள், மருந்து தருதல், பரிசோதனை செய்தல், அறுவை சிகிச்சைக்கு உதவுதல், உபகரணங்களை இயக்குதல் போன்ற பணிகளில் திறனுள்ள உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை உருவாக்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் பல படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், பிட்ஸ் பிலானி போன்ற கல்வி நிறுவனங்களோடு இணைந்து மருத்துவமனைகளே இதுபோன்ற படிப்புகளை வழங்குகின்றன. பாரா மெடிக்கல் படிப்புகளைப் பொறுத்தவரை, நல்ல நிறுவனங்களைத் தேர்வு செய்து படித்தால் 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி. படிப்பு முடிவதற்கு முன்பாகவே ஆன்லைன் கேம்பஸ் மூலம் நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு செய்துவிடுகின்றன.

ரூபாய் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தொடக்க சம்பளமே கிடைக்கிறது. இதே பிரிவுகளில் முதுகலை படிப்பவர்களுக்கு மேலும் வெளிச்சம் கிடைக்கிறது. இம்மாணவர்களுக்கு வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பு உண்டு. குறிப்பாக அரபு நாடுகள் கைநிறைய சம்பளத்தோடு வரவேற்கின்றன...’’ என்கிறார் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் நிறுவனத்தின் முதல்வர் கிஷோர்குமார்.

‘‘பி.எஸ்சி. நர்சிங் படிப்பைப் பற்றி எல்லோரும் அறிவார்கள். தரமான கல்வி நிறுவனத்தில் நர்சிங் படிப்பவர்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு. அரசுப்பணி வாய்ப்பும் இருக்கிறது. இதுதவிர, புதிதாக பல படிப்புகள் வந்துள்ளன. ‘பி.எஸ்சி பிசிசியன் அசிஸ்டென்ட்’ படித்தவர்கள் மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் பணிபுரிய முடியும். பி.எஸ்சி. அனஸ்தீசியா டெக்னீஷியன், டயாலிசிஸ் டெக்னீஷியன், கிரிட்டிகல் கேர் டெக்னீஷியன், நியூக்ளியர் மெடிசின், ரேடியோ இமேஜிங், கார்டியோ பல்மனரி அண்டு பியூரிஃபிகேஷன் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னீஷியன் போன்ற மூன்றாண்டு பட்டப் படிப்புகள் மிகுந்த வேலைவாய்ப்பு தருபவை.

நோய்த்தடுப்பு, விழிப்புணர்வு பற்றிய மெடிக்கல் சோஷியாலஜி படித்தவர்களுக்கான தேவையும் நிறைய இருக்கிறது. பி.பி.ஏ. ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் மருத்துவ நிர்வாகத் துறைகளுக்கு தேவைப்படுகிறார்கள். இப்படிப்புகளை முடித்தவர்கள் விரும்பினால் முதுகலையும் படிக்கலாம். ரீனல் சயின்ஸ், பிசிசியன் அசிஸ்டென்ட், மெடிக்கல் லேப் டெக்னீஷியன், அனாட்டமி, பிசியாலஜி, கிளினிக்கல் மைக்ரோ பயாலஜி போன்ற எம்.எஸ்சி. படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பி.பி.ஏ. ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் அதே துறையில் எம்.பி.ஏ. செய்தால் வேலைவாய்ப்பும், மரியாதையும் மேலும் உயரும்...’’ என்கிறார் கிஷோர்குமார்.

பி.எஸ்சி. மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி, இ.என்.டி. சர்ஜிக்கல் டிரெயினிங் போன்ற படிப்புகளையும் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவக் கல்வியாளர்கள். மனவளர்ச்சி குன்றியவர்களுக்குத் தரப்படும் பயிற்சிகள், மருத்துவ முறைகள் பற்றிப் படிக்கும் பேச்சிலர் ஆஃப் மென்டல் ரிடார்டேஷன் (Bachelor of Mental Retardation) படிப்புக்கும் மிகுந்த தேவை இருக்கிறது.

பிசியோதெரபி படிப்புக்கு என்றும் தேவை உண்டு. தனியாக மையம் தொடங்கி சிகிச்சை அளிக்கலாம். மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைத் துறைகளில் பணிபுரிய டி.பார்ம், பி.பார்ம் படித்தவர்கள் நிறைய தேவைப்படுகிறார்கள்.  சேவை மனம் இருப்பவர்கள், உடல் மற்றும் மனதால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் ஆக்குபேஷனல் தெரபி, காது கேட்காத மற்றும் வாய் பேசமுடியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் தெரபி போன்ற படிப்புகளைத் தேர்வு செய்யலாம். சேவை செய்த நிறைவும் கிடைக்கும்; கை நிறைய சம்பளமும் உத்தரவாதம்.

 ‘‘42 சதவீத இந்தியர்களுக்கு பார்வையில் பிரச்னை இருக்கிறது. கண் மருத்துவத்துறையின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்துறையில் சேவையாற்ற நிறைய டெக்னீஷியன்கள் தேவைப்படுகிறார்கள். கண் மருத்துவம் சார்ந்த பி.எஸ். ஆப்டோமெட்ரி, நியூரோ ஆப்டோமெட்ரி, டிப்ளமோ இன் ஆஃப்தால்மிக் நர்சிங் அசிஸ்டென்ட், பி.எஸ்சி. ஆப்டிக் டிஸ்பென்சிங் போன்ற படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்புகளுக்கு உதவித்தொகைகளும் கிடைக்கின்றன. இதே துறைகளில் உயர்கல்வியும் பெறலாம்...’’ என்கிறார் மருத்துவ சமூகவியலாளர் இருங்கோவேள்.

தமிழகத்தில் அப்பல்லோ மருத்துவமனை, சங்கர நேத்ராலயா, விஜயா மருத்துவமனை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் உள்பட பல்வேறு மருத்துவமனைகள் பாரா மெடிக்கல் படிப்புகளை வழங்குகின்றன. பெரும்பாலும் இம்மருத்துவமனைகளிலேயே பணி வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. மருத்துவக் கனவோடு உயிரியல் பிரிவைத் தேர்வு செய்து படித்தவர்கள், எதிர்பார்த்த கட்-ஆஃப்பில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவப்படிப்புகள் கிடைக்கவில்லையே என்று வருந்தாமல் இந்த ரூட்டுக்கு தாராளமாக மாறலாம். கைநிறைய சம்பளம், மனத் திருப்தி, சமூக மரியாதையைப் பெற்றுத் தரும் பாராமெடிக்கல் படிப்பு
களைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம்.

பாரா மெடிக்கல் கோர்ஸ்கள் படித்தால் 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி. படிப்பு முடிவதற்கு முன்பாகவே ஆன்லைன் கேம்பஸ் மூலம் நிறுவனங்கள்மாணவர்களைத் தேர்வு செய்துவிடுகின்றன.

- வெ.நீலகண்டன்