பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் 18 நாடுகளை வலம் வந்திருக்கிறார் நம் பிரதமர் மோடி. வழக்கமாக பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தில் இடம்பெறும் பத்திரிகையாளர்கள் இல்லை. உடன் பயணிக்கும் பலரும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள். வரிசையில் நின்று வரவேற்கும் மக்களைப் பார்த்து பரவசமாவதும், பாரம்பரிய உடைகளை உடுத்துவதும், செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவேற்றுவதுமாக சுற்றுப்பயணத்தை வண்ணமயமாக்குகிறார் மோடி.
இந்தியாவின் அடிப்படையான விவசாயமும், சிறு - குறு தொழில்களும் தக்க ஆதரவில்லாமல் நசிவுக்குள்ளாகி, பல கோடி இந்தியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துவரும் நிலையில், பிரதமர் தொழிலதிபர்கள் புடைசூழ அடிக்கடி வெளிநாடு செல்வதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ‘வெளிநாடு வாழ் இந்திய பிரதமர்’ என்கிறார்கள் அவரை! இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் மேற்கொள்ளாத அளவுக்கு மோடி செய்யும் பயணங்களால் என்ன லாபம்?
‘‘பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்வதும், உறவை வளர்த்துக் கொள்வதும், தலைவர்களைச் சந்திப்பதும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம்தான். ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களும் கூட கேலி பேசும் அளவுக்கு மோடியின் பயண ஆர்வம் இருக்கிறது...” என்கிறார் இடதுசாரி சிந்தனையாளரும் எழுத்தாளருமான அருணன்.
‘‘இந்தச் சுற்றுப்பயணங்களுக்கு 2 நோக்கங்கள் இருப்பதாகக் கருதுகிறேன்.
2002ல் குஜராத்தில் நடந்த கலவரம் உலகமே அறிந்தது. அதன் காரணமாகவே அமெரிக்கா மோடிக்கு விசா தர மறுத்தது. இப்போது, வெளிநாடுகளுக்குச் செல்வதன் மூலம், உலகத் தலைவர்களைச் சந்தித்து தன் குற்ற உணர்வைக் குறைத்துக்கொள்வதோடு, இந்தியாவின் முகமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் முயல்கிறார்.
அடுத்த காரணம், செல்லும் நாடுகளில் தொழிலதிபர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவது. ஆஸ்திரேலியாவுக்கு அதானியை அழைத்துச்சென்று சுரங்க ஒப்பந்தம் போடுகிறார். அதேபோல வெளிநாட்டுக் கம்பெனிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து நாட்டை அடகு வைப்பதையும் செய்கிறார். வெளிநாடுகளில் போய், அங்குள்ள மக்கள் மத்தியில் உள்ளூர் அரசியலையும், இதற்கு முன் ஆட்சி செய்தவர்களையும் பற்றி தவறாகப் பேசுகிறார். இதுவரை எந்த பிரதமரும் இதைச் செய்ததில்லை. வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு, பிரதமரின் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்வதுதான் பிரதான வேலையாக இருக்கிறது.
ஒரு விவசாயி பல்லாயிரம் பேருக்கு மத்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். செய்திகளுக்கு வராத விவசாயிகளின் தற்கொலைகள் ஏராளம். சிறு, குறு தொழிலாக அறிவிக்கப்பட்ட 800 தொழில்களை கடந்த ஆட்சியில் 20 தொழில்களாகக் குறைத்தார்கள். இவர்கள் அந்த இருபதையும் பட்டியலில் இருந்து அகற்றி விட்டார்கள். இனி, தீப்பெட்டி, பட்டாசு, ஊதுபத்தித் தொழில்களைக் கூட பெருமுதலாளிகள்தான் செய்வார்கள்.
பெரிய தொழில்கள் வேண்டும்தான். ஆனால் நாட்டின் அடிப்படையாக இருக்கும் விவசாயத்தையும் சிறு, குறு வணிகர்களையும் அழித்து அதன்மேல் பெரும் தொழில்களை நிறுவக்கூடாது. நிலம் பிடுங்க சட்டம் கொண்டு வந்தாயிற்று. தொழிலாளர்களை முடக்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றன. இனி முதலாளிகளின் கையில் நாட்டைக் கொடுத்துவிடலாம்” என்கிறார் அருணன்.
ஆனால் வலதுசாரி சிந்தனையாளர்கள் இக்குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். “ஓராண்டு ஆட்சியில் குறைசொல்ல ஏதும் இல்லை என்பதால் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களை விமர்சிக்கிறார்கள்” என்கிறார் வலதுசாரி பத்திரிகையாளர் நம்பி நாராயணன். “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா என்றால் ஊழல் நாடு என்ற பெயர் வந்துவிட்டது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், மியான்மருடன் கூட சுமுகமான உறவு இல்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகளும் இந்தியாவை நம்பவில்லை. அந்த நாடுகளின் அவநம்பிக்கையைப் போக்கி, இந்தியாவின் மீது மரியாதையை உருவாக்குவதற்காகவே பிரதமர் திட்டமிட்டு இத்தகைய பயணங்களை மேற்கொள்கிறார்” என்கிறார் அவர்.
“ஒரு நாட்டின் உயிர்மூச்சு வர்த்தகம்தான். அது சீராக நடந்தால்தான் தேசத்தின் பொருளாதாரம் வலுவாக இருக்கும். வர்த்தகத்துக்கு நம்பிக்கையும் உறவும் முக்கியம். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், வணிக அடிப்படையில் அவை இணைந்து நிற்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் முதலீடு செய்ய எந்த நாடும் வரவில்லை. அந்த மனநிலையை மாற்றினால் மட்டுமே வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்குள் வரும்.
பிரதமரோடு தொழிலதிபர்கள் செல்வதை விமர்சிக்கிறார்கள். இந்திய தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டில் தொழில் தொடங்க உதவி செய்வதும் வளர்ச்சியின் ஒரு அங்கம்தான். நிறுவனங்களை நாட்டின் அடையாளமாகக் கருதும் காலம் இது. இந்தச் சூழலில் உள்நாட்டுத் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பிரதமரின் பயணங்களில் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு இந்தியாவுக்கு வரவிருக்கிறது. ஆக்கபூர்வமான திசையில் நாடு சென்று கொண்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் 24 சதவீதமாக இருந்த உள்நாட்டு சேமிப்பு இப்போது 34 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. சிறு, குறு தொழில்களை மேம்படுத்த முத்ரா பேங்க் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தவறான பிரசாரங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை’’ என்கிறார் நம்பி நாராயணன். “மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் ‘சூப்பர் பவர்’ நாடாகவே இருந்தது. 2008ல் உலகமே பொருளாதார பின்னடைவைச் சந்தித்த காலத்தில் கூட இந்தியா திடமாக நின்றது.
இந்த இமேஜை உடைத்து, ‘நான் அதை விடவும் சிறந்தவன், அடுத்த 10 ஆண்டுகளுக்கு என் ஆட்சிதான்’ என்ற செய்தியை உலகத்துக்குச் சொல்வதாகவே பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களை நான் கருதுகிறேன்’’ என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன். ‘‘இந்த ஓராண்டுப் பயணங்களுக்குப் பிறகு இனி பிரதமர் உள்நாட்டு வளர்ச்சிக்கான வேலைகளில் கவனம் செலுத்துவார் என்பதே என் கணிப்பு.
பிரதமரின் பயணத்தால் நாட்டில் எந்த பிரச்னையும் வந்துவிடவில்லை. நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடக்கம், காப்பீடு, சிறு தொழில்களுக்கு முத்ரா பேங்க் என ஆக்கபூர்வமான வேலைகள் நிறைய நடக்கின்றன. என்னைப் பொறுத்தவரை பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால் தொலைநோக்குப் பார்வையில் நிச்சயம் நிறைய பலன்கள் கிடைக்க வாய்ப்புண்டு...”
என்கிறார் நாகப்பன்.
மற்றவர்கள் எப்படி?
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 73 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இதுவரை இதுதான் சாதனை! சர்வதேசத் தலைவர்களாகப் புகழப்பட்ட நேரு, இந்திரா போன்றவர்கள்கூட இவ்வளவு பயணம் செய்ததில்லை. மன்மோகனின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.688.73 கோடி அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ளது.
ஒரு பிரதமர் போகும்போது, அவரது அலுவலகமும் விமானத்தில் போவதால் இத்தனை செலவு. வெளிநாட்டில் இருந்தாலும், அவர் அத்தியாவசியப் பணிகளைச் செய்தாக வேண்டும். சார்க் மாநாடு, ஆசியான், பிரிக்ஸ், ஜி-20 மாநாடு என ஆண்டுதோறும் அவசியம் சென்றாக வேண்டிய கட்டாயங்கள் அதிகரித்திருப்பதும் பயணங்களின் எண்ணிக்கை பெருக ஒரு காரணம்!
- வெ.நீலகண்டன்