கைம்மண் அளவு



இந்த வயதிலும் மாதம் மூவாயிரம் கிலோ மீட்டர் சராசரியாகப் பேருந்துப் பயணம் எமக்குப் பிழைப்பு. சென்னையும் சென்னை கடந்த ஊர்களும் என்றால் ரயில் மார்க்கம். நம்மையும் இலக்கியவாதி என்று எவரும் கருதினால், தூர தேசப் பயணங்களுக்கு வான்வழி. சொந்தச் செலவில் எங்கு போவதானாலும் பேருந்துதான்.

 சொகுசுப் பேருந்துக்கு மாற்றாக, சற்று காசு மிச்சமாகுமே என்பதால் அரசுப் பேருந்துதான் பிடிப்பேன். இடை நில்லாப் பேருந்தே என்றாலும், இடர் வந்து இடையே தடைப்பட்டு நின்றால் அதற்கு அரசு பொறுப்பல்ல, ஈசன் பொறுப்பு.

சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை ஆரப்பாளையம். அங்கிருந்து நகரப் பேருந்தில் மாட்டுத்தாவணி. மறுபடியும் தொடரும் பயணம் நாகர்கோயிலுக்கு. ஒரு மணி நேரம் தாமதமாகும். ஆகிவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன ‘ஷாட் ரெடி’ பண்ணி வைத்திருக்கப் போகிறார்களா... போய் ‘ஃபைட் சீன்’ எடுக்க? முன்பு பல சமயம் பம்பாயில் இருந்து சோலாப்பூர், அக்கோலா, நாசிக், கோலாப்பூர், அகமத் நகர் என்று மராத்திய மாநில அரசுப் பேருந்துகள் பயன்படுத்தி இருக்கிறேன்.

இரவுப் பேருந்துகளை அங்கு ‘ராத் ராணி’ என்பார்கள். தமிழில் ‘இரவு ராணி’ என்றால் விபரீதமாகப் பொருள் கொண்டு பழகிவிட்டோம். அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாளிதழ் நடத்திய அற்பணிப்பு. அதுபோன்றே கற்பழிப்பு என்ற சொல்லும். நாமோ ‘கற்பெனப் படுவது’ என்று கட்டுரை எழுதுகிறோம். ‘சொல் திறம்பாமை’ என்கிறாள் தமிழ் மூதாட்டி.

கோவை சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து எனக்கு நேரடியாகவும் அரசுப் பேருந்து கிடைக்கும். 3+2 இருக்கை அமைப்பு. ஐந்நூறு கிலோ மீட்டர் தூரத்தை எட்டு மணி நேரத்தில் கடந்து விடுவார்கள். எந்த நகரையும் தொடாமல், தங்க நாற்கரச் சாலையில் திண்டுக்கல்லில் ஏறினால் வள்ளியூரில் இறங்கினால் போதும்.
இரண்டு, மூன்று நாட்கள் சேர்ந்தாற் போல விடுமுறை நாட்கள் எனில் ஊருக்குப் போகும் மாணவர் கூட்டம் நிரம்பித் ததும்பும். மாணவர் என்பது இங்கு இருபாலருக்கும் பொதுச் சொல். பேருந்தில் சினிமா இரைச்சலும் காதலும் காமமும் வழியும் இசை முழக்கமும் தாண்டியும் மாணாக்கரின் உற்சாகமான பேச்சரவம் பயணம் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருக்கும்.

கோவை நகரக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்-மாணவியர் விகிதம் தலைகீழாகவே இருக்கிறது. பெண்கள் இன்று அதிகம் பயில்வதில் எனக்குப் பெரிய உற்சாகம் உண்டு. அதிகாலை மூன்றரை அல்லது நாலு மணிக்கு எமது பேருந்து திருநெல்வேலி பேருந்து நிலையம் சேரும். ‘திருநெல்வேலிக்காரர்கள் தினமும் மூன்று வேளைக்கும் இடையில் பருகும் தேநீருக்கும் அல்வாதான் தின்பார்களோ’ என்ற ஐயம் எழுப்பும் ஒரிஜினல் லாலா அல்வா கடைகள் பேருந்து நிலையம் முழுக்க... எங்கெங்கு காணினும் அல்வா அடா! ஏழு கடல் அதன் வண்ணமடா!

பேருந்து நிலையம் வந்தவுடன், பின் தூங்கி முன் எழுந்த மாணாக்கியர் அனைவரும் முதல் காரியமாய் கைப்பையின் சீப்பு எடுத்து தலைவாரிக் கொள்வார்கள். அடுத்த முக்கியமான காரியம், அவரவர் செல்போன் எடுத்து சிம் கார்டு மாற்றுவது. அப்போது என் மந்த புத்திக்கு உறைத்தது, அவர்கள் வீட்டுக்கு என்று ஒன்றும், வெளிவேலைகளுக்கு என்று ஒன்றுமாக தனித்தனி சிம் கார்டு வைத்திருக்கிறார்கள் என்பது! என்ன விஞ்ஞானபூர்வமான காரணம் இருக்கும் என்று யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஊரிலிருந்து கோவை திரும்பும் எனது பயணத்தில் பெரும்பாலும் ஒரு கட்டைப் பை கூடவே பயணம் செய்யும். ஏழெட்டு நெற்றுத் தேங்காய், இரண்டு பக்கா சம்பா அவல், ஐந்தாறு நார்த்தங்காய், கொஞ்சம் தவிட்டு முருங்கைக்காய், இரணியல் கத்திரிக்காய், முதிர்ந்த சீமைச் சக்கை, பருத்த வாழைப்பூ, காட்டு நெல்லி, ஏத்தங்காய் வத்தல், முறுக்கு, முந்திரிக்கொத்து, மிக்சர், மட்டிப் பழச்சீப்பு எனச் சில, பருவகாலத்துக்குத் தகுந்தாற் போல.

அம்மை, சித்தி, தம்பி, தங்கைகள் எனத் தொடரும் பாசத்துக்கு விலைப்பட்டியல் போட இயலாது. சில சமயம் கொண்டு வரும் பொருட்களின் விலையைவிட, அவற்றை வீடு கொண்டு சேர்க்கும் ஆட்டோ கட்டணம் அதிகமாக இருக்கும். இருக்கட்டுமே! எந்த சித்திரை விஷுக் கணி காணலும் வெல்லமும் தேங்காயும் போட்டு விரவிய அவல் இல்லாமல் நடந்ததில்லை எமக்கு.

கட்டைப் பை காரணமாகவே வக்கீல் தம்பி, கோவை பயணத்துக்கு சொகுசுப் பேருந்தில் ஏற்றி அனுப்புவான். என் மனமோ கூடுதல் கட்டணத்தைக் கணக்குப் போடும். ஏறும் படிக்கட்டுகளையே அனிச்சையாக எண்ணிக் கொண்டு போகிறவன், இதை விடுவேனா? பெரும்பாலும் அன்று நான் விரும்புவது தாராபுரம் வழி, இன்று பொள்ளாச்சி வழி. எல்லாம் வீட்டுக்கான ஆட்டோ கட்டணம் கணக்கிடல்தான்.

ஞாயிறு இரவுகளின் திரும்புகால் பயணம் எனில், சொகுசுப் பேருந்து கல்லூரி மாணவ, மாணவியரால் நிறைந்திருக்கும். ஒரு சமயம் எனது இருக்கைக்கு முன்பக்கம் இரு மாணவியர் இருந்தனர். எனக்குப் பின்பக்கமோ இரு மாணவர்களும்.  அறிமுகமானவர்கள் எனக் காணத் தெரிந்தது. இரவு ஒன்பதுக்கு நாகர்கோயிலில் புறப்பட்ட வண்டி, அடுத்த நிறுத்தமான திருநெல்வேலியில் நின்றது, இரவு பத்தே முக்காலுக்கு. அங்கு பேருந்து நிரம்பிவிடும். பிறகு எங்கும் நிறுத்த மாட்டார்கள், இறக்கம் இருந்தால் ஒழிய.

இரவுப் பயணங்களில் பெரும்பாலும் எனக்கு உறக்கம் வராது. ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாய்த் தந்தாலும், கொட்டகையில் போய்ப் பார்க்கத் துணியாத திரைப்படங்களைப் பேருந்துப் பயணத்தில் கவனம் சிதையாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். கல்வி எப்போதுமே கடினமான வேலைதானே! இலக்கிய உலகில் எரிமலைக் குழம்பை வெறுங்கையால் அள்ளி மேல் தேய்த்துக் குளிப்பவர்கள் பங்கேற்ற திரைப்படங்களில், நாட்பட்ட புண்களை நக்கிக் கிடப்பதையும் காணவியலும்.
அந்தக் குறிப்பிட்ட இரவில், திருநெல்வேலித் தரிப்பில் அல்வா பொட்டலங்களுடன் ஆட்கள் ஏறினார்கள். ‘மக்கா போயிட்டு வா என்னா! போனதும் கூப்பிட்டுச் சொல்லு... மிஸ்டு கால் குடுத்தாப் போரும்... பிள்ளையைப் பார்த்துக்கோ... போட்டு கண்டமானிக்கு அடியாத!’ எனும் பிரிவு உபசாரச் சொற்கள் கடந்து, பேருந்து நகர்ந்து, தச்சநல்லூர் தாண்டியதும் விளக்கையும் அணைத்தார்கள். தச்சநல்லூர் எனும் சொல் பெய்யாமல் ‘திருநவேலி’த் தமிழைத் தாண்டுவது எப்படி?

விளக்கணைத்ததும் எனது பின்பக்க இருக்கையில் இருந்து எழுந்து ஒரு மாணவர் என் முன்பக்க இருக்கைக்குப் போனார். முன்பக்க இருக்கையில் இருந்து எழுந்த மாணவி ஒருத்தி பின்பக்க இருக்கைக்கு வந்தாள். சமன்பாடு சரியாப் போச்சா? என்ன செய்து விட முடியும் ஓடும் பேருந்தில், இருக்கையில் அமர்ந்து? இரவே ஆனாலும் இருளே செறிந்தாலும்? எப்படியும் பிள்ளை உண்டாக்கி விட இயலாது என்று உங்களைப் போலவே எனக்கும் தெரியும்! பிறகென்ன, கண்மூடி உறங்குவது போலப் பாசாங்கு செய்ய வேண்டியதுதான்.

வாழ்க்கையில் எண்ணிக்கையில் அடங்காத தவணைகள், படுக்கை வசதி ரயில் பயணங்கள் மேற்கொண்டிருக்கிறேன். கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஏறிப் பார்த்திருக்கிறேன் என்றாலும் இராத் தங்கியதில்லை. ரயில் பயணங்கள் 1972ல் நான் அனுபவித்தது போலில்லை இன்று. எல்லாம் நவீனப்பட்டுவிட்டது.1960களில் தொடங்கிற்று எனது அரசியல் கூட்டங்கள் கேட்பு. அன்று எனக்கு நாவலர், நடமாடும் பல்கலைக்கழகம் நெடுஞ்செழியன் மேடைப் பேச்சு பிடிக்கும்.

அவரது நையாண்டி பிடிக்கும். ‘ஐம்பது தமிழ்ப் பாட்டுக்கள் மனப்பாடமாகத் தெரிந்திருந்தால் அவரெப்படி நடமாடும் பல்கலைக்கழகம் ஆக முடியும்’ என்ற கேள்வி பின்னால்தான் எழுந்தது. ‘பல்கலைக்கழகம் என்பது எத்தனை துறைகள், எவ்வளவு ஆழ அகல விரிவு?’ நானே பிறகு அவரைக் கிண்டல் செய்திருக்கிறேன். என்றாலும் இன்றும் யோசித்துப் பார்க்கும்போது மிகவும் ரசிக்கத் தகுந்ததாக இருந்திருக்கிறது அவரது ேமடைப் பேச்சு.

அடிக்கடி அவர் சொன்ன ரயில் ஜோக் ஒன்று... என்ன, கோட்டாறு கம்போளத் தெருவில் சொன்ன ஜோக்கையே, வடசேரி வஞ்சி ஆதித்தன் புதுத்தெருவிலும் சொன்னார். அவருக்கே உரித்தான குரல் ஏற்ற இறக்க பாவனைகளுடனும் பாவத்துடனும்! ரயில் பயணம் செய்யும்போது கக்கூஸ் போக மூன்று கைகள் வேண்டும் என்பார். இரண்டு கைகள் தண்ணீர் வரும் குழாயை அமுத்தி அழுத்த, ஒரு கை கழுவ...

இரவின் படுக்கை வசதிப் பயணங்கள் தவிர்த்து ஒரேயொரு முறை படுக்கை வசதிப் பேருந்தில், வேறு மார்க்கம் இன்றி சென்னையில் இருந்து கோவைக்கு வந்தேன். பேருந்தின் நீளவாக்கில், ஓட்டுனர் பின்பக்கம், இரண்டு பேர் படுக்கும் வசதி. நடத்துனர் பின்பக்கம், ஒருவர் படுக்கும் வசதி. தரைத்தளமும் மேல்தளமும் என இரண்டு அடுக்குகள், பிரிவுகள் அடுத்தடுத்து.

எனக்கு வாய்த்தது இரண்டு பேர் படுக்கும் மேல்தளப் படுக்கை, உள்பக்கம். எனது படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் - நேரான அர்த்தத்தில் - அந்தகனின் வாகனம் போலிருந்தார். அதாவது காலதேவனின் வாகனம். பத்து புரோட்டா தின்று அரைக்குப்பி IMFL அருந்தியிருப்பார் போலும். கடுங்குறட்டை. சமயங்களில் கால் தூக்கி என் மேல் போட்டார். ஊடே ஊடே ஏப்பமும் எதுக்களிப்பும். வாந்தியும் எடுப்பாரோ என்ற அச்சம் எனக்கு. திருக்குறளில் 107வது அதிகாரம், ‘இரவச்சம்’. அது இரவு தோன்றும் அச்சமல்ல. இரத்தலில் தோன்றும் அச்சம். ஆனால் எனக்கு அந்த இரவு முழுக்க அச்சம்தான்.

அன்று தீர்மானித்தேன், பொடி நடையாக நடந்தே ஊருக்குப் போனாலும் படுக்கைப் பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று!அண்மையில் பொறுப்பான உயர் பதவி வகிக்கும் நண்பர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் கீழ் வேலை செய்யும் எவரும் தற்கொலைக்குத் தூண்டப்பட மாட்டார்கள். உடனே ‘பொைழக்கத் தெரியாத ஆளு’ என்பீர்தானே! விடுமுறையில் ஊருக்குப் போகும் காதலர்கள் இரவுப் பயணங்களில் படுக்கைப் பேருந்துகளில் பதிவு செய்து கொள்கிறார்களாம். இரட்டை மேல்தளப்படுக்கை. II AC SLEEPER வகுப்பு போலத் திரைச்சீலையால் மூடிக் கொள்ளலாம்.

கையோடு கொண்டு போகும் சேஃப்டி பின்னால் திரைச்சீலை ஜாயின்ட்களில் கொளுவிக் காபந்து செய்து கொள்கிறார்களாம். ‘என்னய்யா அத்தாட்சி?’ என்றேன். அவர் மேற்கொண்டு சொன்ன விவரங்களை இங்கு எழுத விரும்பவில்லை. நமது திரைப்படப் புரட்சிப் பூகம்பங்கள் எவரும் இதனை சீன் பிடிக்கலாம். நாம் காப்பீடு கோர மாட்டோம்!

காதலர் தினத்தன்று படுக்கைப் பேருந்துகளின் கட்டணம் மும்மடங்காகிப் பொலிகின்றன. காற்றுள்ளபோதுதானே தூற்றிக்கொள்ள இயலும்! Demand and Supply Theory. நண்பர் தொடர்ந்து ஆச்சரியங்கள் ஊட்டினார்... அண்மையில் சில சொகுசுப் படுக்கைப் பேருந்துகள் சோதனையிடப்பட்டன என்று! விடுதிகளில் குளிர்பதன அறை எடுப்பதைக் காட்டிலும் இது வசதி. போலீஸ் ரெய்டு இருக்காது. விடுதி வராந்தாக்களில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும், அறை மாறிப் போவோரைக் கண்காணிக்க!
இஃதோர் தொழிலாகவும் மாறி வருகிறதாம் பாலியல் தொழிலாளிகளுக்கு.

குறிப்பாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே வழித்தடங்களில்! விற்பனைப் பிரதிநிதிகள் போலப் பயணிக்கிறார்களாம். கூடலுக்குத் தோதாக உடைகள் வடிவமைக்கப்படுகின்றனவாம். மண் தின்னப் போவதை மகராசன் அனுபவிக்கட்டும் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். என்றாலும் நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாவிட்டால் நம்மை முற்போக்கு முகாமில் சேர்க்காமல் போகும் அபாயமும் இருக்கிறதல்லவா?

‘எல்லாம் காதல் படுத்தும் பாடு’ என்று பெருந்தன்மையாகவே எடுத்துக்கொள்ளலாம். 1958ல், விஜய பாஸ்கரன் நடத்தி, பொதுவுடைமைப் புறங்குத்தால் அகாலத்தில் நின்றுபோன சீரிய இலக்கியப் பத்திரிகை ‘சரஸ்வதி’யில் சுந்தர ராமசாமி ‘லவ்வு’ என்றொரு சிறுகதை எழுதினார். அவரது முழுத்தொகுப்பில் உண்டு. வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பார்க்கலாம்.

காமம் இல்லாமல் காதல் இல்லை பெரும்பாலும். ஆனால் காமம் என்பதையே காதல் என்றும் சிலம்பித் திரிகிறோம் இன்று. ‘பாரதி-அறுபத்தாறு’ என்ற பாடலில் பாரதியார் பாடுகிறார்.

‘காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்; சிற்பம் முதல் கலைகளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்;
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்;
கவலைபோம்; அதனாலே மரணம் பொய்யாம்’

இது கவிஞனின் இலக்கணம். கலவி எனில் புணர்ச்சி. புணர்ச்சி எனில் உடலுறவு. ஆனால் அதனைப் பேருந்துப் பயணம், விரைவு ரயிலின் பொதுக்கழிப்பறை எனும் தரத்துக்கு இறக்கி விடுவது காதலுக்குப் பெருமை அன்று.‘தேன், நெய், புளிப்பின் சுவை இன்னா’ என்கிறது இன்னா நாற்பது. தேனே ஆனாலும் நெய்யே ஆனாலும் புளித்துப் ேபானால் அந்தச் சுவை துன்பமானது என்பது பொருள்.

மாணவிகள் வீட்டுக்கு என்று ஒன்றும்,  வெளிவேலை களுக்கு என்று ஒன்றுமாக தனித்தனி சிம் கார்டு வைத்திருக்கிறார்கள். என்ன விஞ்ஞான
பூர்வமான காரணம் இருக்கும்?

இரண்டு பக்கா சம்பா அவல், கொஞ்சம் தவிட்டு
முருங்கைக்காய், இரணியல் கத்திரிக்காய்,
முதிர்ந்த சீமைச் சக்கை, காட்டு  நெல்லி,
ஏத்தங்காய் வத்தல், முந்திரிக்கொத்து,
மட்டிப்பழச்சீப்பு எனச் சில,
பருவகாலத்துக்குத்
தகுந்தாற் போல.

விடுமுறையில் ஊருக்குப் போகும்  காதலர்கள் இரவுப் பயணங்களில் படுக்கைப் பேருந்துகளில் பதிவு செய்து  கொள்கிறார்களாம்.

(கற்போம்...)

நாஞ்சில் நாடன்
ஓவியம்: மருது