ஆபீஸ் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து, பையில் போட்டு அதை மார்போடு அணைத்தபடி புறப்பட்டான் சண்முகம். ‘‘சார், உங்க பேன்ட் பாக்கெட் கிழிஞ்சிருக்கு!’’ - என்றான் வாசலில் நின்ற ஒருவன். உடனே சண்முகம் உஷாராகிவிட்டான். இப்படித்தான் எதையாவது சொல்லி நம் கவனத்தைத் திருப்பி பணத்தை அடிப்பார்கள். எவ்வளவு செய்திகளில் படித்திருக்கிறான். அந்த நபரை முறைத்துவிட்டு வேகமாக ரோட்டைக் கடந்து பைக்கை நோக்கி நடந்தான்.
‘‘சார், உங்ககிட்டருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கீழே விழுந்திருச்சு பாருங்க!’’ என்று இன்னொருவன் சொல்ல, ‘‘பரவாயில்ல சார்... எனக்கு வேண்டாம்!’’ என்றபடி வண்டியைக் கிளப்பினான். முதலாளியிடம் பணப்பையை பத்திரமாகக் கொடுத்ததும்தான் நிம்மதி வந்தது சண்முகத்துக்கு.உடனடியாக முதலாளி அவனுக்கு அந்த மாதச் சம்பளத்தை எண்ணிக்கொடுத்தார்.
அதை வாங்கி பேன்ட் பாக்கெட்டில் போட்டபோது தான் பாக்கெட் கிழிந்திருந்ததைக் கவனித்து அதிர்ந்தான். ‘சே... பேப்பர்ல தினம் தினம் திருட்டுப் பசங்களைப் பத்தி வர்ற செய்தியால உதவ வரும் நல்லவங்களைக் கூட இந்தக் காலத்தில் நம்ப முடியலையே!’ என்று நொந்துகொண்டான் சண்முகம்.மாதக்கடைசியில் அவன் நண்பரிடம் கைமாற்றாய் வாங்கி வைத்திருந்த ஐந்நூறு ரூபாயும் இதனால் போச்சு!
பா.வெங்கடேஷ்