கெளரவம்



அந்த காஸ்ட்லி உணவகத்தில் கனிவான சர்வர் செய்த சேவையும் உபசரிப்பும் சரவணன் குடும்பத்துக்கு மிகவும் பிடித்துப் போனது. ‘‘அங்கிள், உங்க பேர் என்ன? என்ன படிச்சிருக்கீங்க?’’ எனக் குறும்பாகக் கேட்டாள் சரவணனின் சுட்டிப் பெண்.

‘‘பிஹெச்.டி!’’ என்ற பதிலில் மொத்தக் குடும்பத்தினரும் ஆடிப் போனார்கள். ‘‘என்ன தம்பி, டாக்டர் பட்டம் வாங்கிட்டு இங்கேயா வேலை செய்யிறது? கௌரவமா ஒரு டீச்சர் வேலை கூடவா ஏதாவது ஸ்கூல்ல கிடைக்கலை?’’ ஆதங்கமாய் கேட்டார் சரவணன்.சர்வர் பணிவாகச் சொன்னார்...

‘‘கிடைச்சுது சார். ஒரு காலேஜ்ல ப்ரொபசஸரா இருந்தேன். மாதச் சம்பளம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. ஆனா ஓயாத வேலை. கிளாஸ் ரூம்ல ஆசிரியர்னு மாணவர்கள் மரியாதை தந்தது எல்லாம் அந்தக் காலம். இப்ப வயசுக்குக் கூட மதிப்பு கிடையாது. நிம்மதி இல்லை. சம்பளமும் பத்தலை. இங்க முதலாளி கண்ணியமா நடத்தறார்.

பதினஞ்சாயிரம் ரூபாய் சம்பளம் தர்றார். இலவச உணவு, தங்குமிடம். வர்றவங்ககிட்ட கனிவா இருக்கறதால, அவங்களும் முகம் சுளிக்கறவிதமா பேசறதில்லை. சிலர் அன்பளிப்பா தர்ற டிப்ஸே தினம் ஐந்நூறு தேறும். அதுல என் தங்கச்சியைப் படிக்க வைக்கிறேன். வேலை நிம்மதியா இருக்கு!’’கௌரவம் எதுவென்று புரிந்தது அனைவருக்கும்!       

துரையரசன்