நயன்தாராவுக்கு டும் டும் டும்



ரீலா? ரியலா?

ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் ஆள் தெரிந்தால் சொல்லிவிடுங்களேன்... ‘நயன்தாரா’ என்ற சொல்லுக்கு ‘புரளி’, ‘வதந்தி’, ‘கிசுகிசு’ என்று அர்த்தம் போட வேண்டும். கரெக்ட்! இந்த முறையும் கல்யாண நியூஸ்தான். நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கொச் சியில் சர்ச் ஒன்றில் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கோலிவுட்டிலும் மல்லுவுட்டிலும் பரபரத்தது செய்தி. விஷயம் உண்மையா? யார் இந்த விக்னேஷ் சிவன்? கோடம்பாக்கம் முழுவதும் கொட்டுகின்றன தகவல்கள்.

விக்னேஷ் சிவனின் பூர்வீகம் கேரளா. எஞ்சினியரிங் முடித்தவர். குறும்படம் மூலம் அறியப்பட்டு ‘போடா போடி’யில் இயக்குநரானவர். சிம்புவுக்கு பால்ய நண்பர் என்கிறார்கள். சிம்பு - நயன்தாராவின் ‘ஒன்ஸ் அபான்எ டைம்’ கதை முழுவதும் தெரிந்தவர். நண்பரே ஆனாலும் ‘போடா போடி’ ஷூட்டிங்கிற்கே வராமல் சிம்பு இழுத்தடித்ததில் கடுப்ஸ் ஆனார் விக்னேஷ். படமும் ரிலீஸ் ஆகி சரியாகப் போகவில்லை என்பதால் ஒரு அறிமுக இயக்குநராக ஜொலிக்க முடியாத ஆதங்கம் அவருக்கு.

அந்நேரம்தான் ‘போடா போடி’யில் விக்னேஷ் எழுதிய பாடல்கள் அனிருத்திற்கு பிடித்துவிட ‘வணக்கம் சென்னை’யில் ‘எங்கடி பொறந்த எங்கடி வளர்ந்த...’ பாட்டெழுத வாய்ப்பு கொடுத்தார். அது செம ஹிட். சமீபத்தில் ‘தல’க்கு விக்னேஷ் சிவன் எழுதிய ‘அதாரு அதாரு’ பாட்டும் ஹிட் அடிக்க, பாடலாசிரியராக களத்தில் நின்றுவிட்டார் மனிதர். அனிருத் மூலம் விக்னேஷின் நண்பராகக் கிடைத்தவர் தனுஷ். ‘வேலையில்லா பட்டதாரி’யில் கூட விக்னேஷ் சிவன் சின்ன ரோலில் நடித்திருப்பார். இப்போது தனுஷ் தயாரிப்பில்தான் ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ். தனுஷிற்காக இதில் விஜய்சேதுபதியுடன் நடிக்க ஒப்புக்கொண்டார் நயன்தாரா.

இதெல்லாம் சரி, விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவிற்கு காதல் வந்தது எப்படி?

‘‘விக்னேஷ் - நயன் இருவருமே கேரளாக்காரர்கள். ‘நானும் ரவுடிதான்’ ஷூட்டிங் பிரேக்கில் எல்லாம் இவர்களின் பொது எதிரியான நடிகரின் வம்புகளைப் பேசிச் சிரித்திருக்கிறார்கள். இதில், ஹீரோயின் - இயக்குநர் என்பதைத் தாண்டிய நட்பு இருவருக்குள்ளும் மலர்ந்துவிட்டது. இந்தப் படத்துக்காக நயன்தாரா டாஸ்மாக்கில் பீர் வாங்கும் காட்சிக்கு எதிர்ப்பு வலுத்து, நயனின் உருவ பொம்மையெல்லாம் எரித்தார்கள்.

அப்போது அப்செட் ஆன நயனுக்கு பக்கபலமாக அறிக்கை விட்டு, பிரச்னைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் விக்னேஷ் சிவன். தனக்கு ஆறுதலும் தேறுதலும் தரும் நபராக விக்னேஷை நயன் நினைத்தார். இதனைத் தொடர்ந்தே ‘விக்னேஷை நயன் தனது பூர்வீக கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்’... ‘சொகுசுக் கார் பரிசளித்தார்’ என்றெல்லாம் செய்திகள் கிளம்பின. இதையெல்லாம் இருவருமே மறுக்கவில்லை. ஆனால் கல்யாணம் வரை எல்லாம் சான்ஸே இருக்காது!’’ என்கிறார் ‘போடா போடி’ யூனிட்டைச் சேர்ந்த ஒருவர்.

‘இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட்’ என்றும் சொல்கிறார்கள் சிலர். ‘‘ ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தில். ஸோ, நெகட்டிவ் செய்திகள் மூலம் பப்ளிசிட்டியை தேடிக்கொள்ள நினைக்கிறார்கள். ஏற்கனவே ‘ராஜா ராணி’யில் ஆர்யா - நயன்தாரா கல்யாணம் எனப் பரவிய நியூஸ்தானே படத்தை ஹிட் ஆக்கியது? அதே போல திட்டமிட்டுப் பரப்பிய வதந்தி இது!’’ என்கிறார்கள்.

நயனைப் பற்றி நெகட்டிவ் செய்திகள் குவியக் குவிய இன்னொரு புறம் அவரது மார்க்கெட்டும் சம்பளமும் கன்னாபின்னாவென்று எகிறுவதையும் இங்கே கவனிக்க வேண்டும். ‘‘தேவாலயத்தில் திருமணம் என்ற செய்தியே தவறு. பிரபுதேவா திருமணத்துக்கு ரெடியானபோதே நயன்தாரா இந்து மதத்திற்கு மாறிவிட்டார். விக்னேஷும் இந்துதான். சர்ச்சில் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?’’ என நயன் தரப்பில் கேள்வி கேட்கின்றனர்.

‘‘நயன்தாராவுக்கு தமிழில் ‘மாஸ்’ ரிலீஸுக்கு ரெடி. ‘மாயா’வும் கம்ப்ளீட் ஆகி காத்திருக்கிறது. கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஜீவா படங்களின் ஷூட்டிங் ஒரு புறம், தெலுங்கில் சீரஞ்சிவி படம், ரஜினி- ரஞ்சித் காம்பினேஷன் பட பேச்சுவார்த்தை என நயனின் கால்ஷீட் டைரி ஃபுல். சொல்லப்போனால் இன்னும் 3 ஆண்டுகள் நயன் ரொம்பவே பிஸி கேர்ள்.

இப்படியிருக்கும்போது அவர் அவசரக் கல்யாணம் பண்ணிக்கொள்ள சான்ஸே இல்லை!’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.‘‘திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெரிய விஷயம். அவசர அவசரமாக நடப்பதல்ல!’’ என்கிறது நயனின் தரப்பு. விக்னேஷ் சிவனிடம் கேட்டால், ‘‘இது போன்ற வதந்திகளால் வேலை பாதிக்கப்படுகிறது. மீடியாக்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்’’ என்கிறார். திருமணத்தை மறுக்கும் இவர்கள், தங்கள் இருவருக்கும் இடையே எதுவுமே இல்லை என சொல்லவில்லை. அதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்!

- மை.பாரதிராஜா