கிச்சன் to கிளினிக்



நாம் காலையில் கண் விழிக்கும்போதே நம் உடலிற்குள் மோசமான ரசாயனங்களை அனுப்பிவைக்கும் முயற்சிக்கு பேஸ்ட்டுகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப் பார்த்தோம். எல்லா பேஸ்ட்டுகளும் ஃபுளூரைடு உட்பட உடலுக்கு ஊறு விளைவிக்கும் பலவிதமான ரசாயனங்களைக் கொண்டுள்ளன.அப்படியென்றால் பல் துலக்க என்னதான் செய்வது?

இந்த பேஸ்ட்டுகள் நம் கைகளுக்கு வருவதற்கு முன்னால் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்? ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்று மர விழுதுகளை - குச்சிகளை ஒடிக்கக் கிளம்ப வேண்டுமா என யோசிக்க வேண்டாம். நாம் வாழும் இன்றைய சூழலில், கிராமங்கள்கூட நகர்மயமாகிப் போன காலத்தில் மரங்கள் நம்மை விட்டு விலகி வெகுதூரம் சென்று விட்டன. நாமே மரங்களுக்கு விடை கொடுத்து விட்டோம்.

பெரிய நகரங்களைத் தவிர, சிறு நகரங்கள், கிராமங்கள் அனைத்திலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்ட் என்பது முழுமையான பழக்கத்திற்கு வரவில்லை. எண்பதுகளில் எல்லாம் பல் துலக்க பல் பொடி மட்டும்தான். அதே போல பல்பொடிகளைப் பயன்படுத்தி இப்போது பல் துலக்கலாம்.எந்தப் பல்பொடி மிகவும்
நல்லது?

மிகப்பெரிய நிறுவனங்களின் பல்பொடிகளை விட, உங்கள் ஊர்களில் கிடைக்கும் சாதாரண பல்பொடிகளே போதுமானவை. சர்வோதயா, காந்தி கிராமயோக் பவன் போன்ற கிராமத் தொழில் சார்ந்த அரசு நிறுவனங்களிலும் நல்ல பல்பொடிகள் கிடைக்கின்றன. பேஸ்ட்டுகளைத் தயாரிக்கும் அதே பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தேடிப் போக வேண்டும் என்றில்லை.

இங்கு நாம் ‘ரசாயனம்... ரசாயனம்...’ என்று பேசும்போது ஒரு சந்தேகம் எல்லோருக்குள்ளும் எழும். ரசாயனம் என்பது எது? அது எங்கு இருக்கிறது?
இந்த உலகில் நாம் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களுமே ரசாயனங்களின் கலவைதான். நம் கண் முன்னே தோன்றும் அத்தனையும் ரசாயனங்களால் ஆனவைதான். ஆனால் அவை இயற்கை படைத்து வைத்திருக்கும் ரசாயனங்கள். நாம் உருவாக்கியவை அல்ல. அதே போல, நாம் தயாரிக்கும் பொருட்களிலும் ரசாயனங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் முழுவதும் கெட்டவை என்று கூறி விட முடியாது!

அப்படியானால், ரசாயனப் பயன்பாட்டிற்கு என்னதான் அளவுகோல்?இயற்கையான ரசாயனங்களோ... அல்லது, நாம் தயாரிக்கும் ரசாயனங்களோ... எதுவாக இருந்தாலும் - அதன் தன்மையைப் பொறுத்துத்தான் அதன் பயன்பாடு முடிவு செய்யப்பட வேண்டும்.உதாரணமாக, நாம் பயன்படுத்தும் உப்பின் பெயர் ‘சோடியம் குளோரைடு’. அது உடலிற்குக் கேடு விளைவிப்பதில்லை. இதனை நாம் இயற்கையிலிருந்து பெறுகிறோம். எனவே, ரசாயனப் பெயர் தாங்கிய அனைத்துமே மோசமானவை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.

ஒரு ரசாயனம் நம் உடலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களின் தன்மையை வைத்துத்தான் அது நல்ல ரசாயனமா, கேடு விளைவிக்கும் கெட்ட ரசாயனமா என்பதை முடிவு செய்கிறோம். அப்படிப் பல ரசாயனப் பொருட்களை உணவு ஆய்வு நிறுவனங்கள் பட்டியலிட்டு, கட்டுப்படுத்தி இருக்கின்றன. சில ரசாயனங்களுக்கு அளவு நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள ரசாயனப் பொருட்களை உணவுப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்துவதும், அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரசாயனங்களை அளவை மீறி உபயோகிப்பதும்தான் நம் உணவை சிக்கலானதாக மாற்றுகிறது.

எனவே ரசாயனம் என்ற பெயரைக் கேட்டவுடன் ‘‘எல்லா உணவுமே ரசாயனமயமாகி விட்டது’’ என்று சலித்துக்கொள்ள வேண்டாம். உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்களை மட்டும்தான் நாம் பார்த்து, அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு வாழ்வது எப்படி என தீர்மானிக்கப் போகிறோம்.

உணவுக் கலப்படம் குறித்து நாம் அறிந்து கொள்வதற்கு முன்னால் கேரளா வரை ஒரு பயணம் போய் வர வேண்டும். ஏனென்றால், தென்னிந்தியாவில் உணவுக் கலப்படம் குறித்த விழிப்புணர்வு வேகமாகப் பரவிய இடம் கேரளாதான். உணவின் தன்மை பற்றி இரு மலையாளிகள் பேசிக்கொள்ளும்போது ‘‘இவர் பெரிய மோகனன் வைத்தியர். உணவைப் பற்றி பேச வந்துவிட்டார்’’ என்ற சொல்லாடலை நாம் கேட்க முடியும். அந்த அளவிற்கு உணவு பற்றிய விழிப்புணர்வுப் பணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் மோகனன் வைத்தியர்.

கேரளாவின் ஆலப்புழாவில் இருக்கும் மோகனன் வைத்தியர், ஒரு பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாத்தாவிடம் பயின்ற மருத்துவம் பற்றிய அறிவு ஒருபுறம் இருந்தாலும் கூட, இவருக்கு மருத்துவத்தில் ஆரம்ப காலத்தில் ஆர்வம் ஏற்படவில்லை. இந்தியா முழுவதும் தொழில் தொடர்பாக பயணம் மேற்கொண்ட மோகனன் வைத்தியர், பிற்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்திற்கு திரும்ப முடிவு செய்தார்.

தாத்தாவிடம் பயின்ற மரபுரீதியான முறையில் மூட்டு வலிக்கான ஒரு தைலத்தைத் தயாரிக்கிறார் மோகனன் வைத்தியர். அதனை ஒரு நோயாளிக்குக் கொடுக்கிறார். தன் தாத்தா காலத்தில், அப்பா காலத்தில் தயாரிக்கப்பட்ட அதே தைலம் - அதேமுறையில் இப்போது தயாரிக்கப்பட்டபோதும் அதன் குணப்படுத்தும் ஆற்றல் குறைந்திருப்பதை உணர்கிறார். தயாரிப்பு முறைகள், மூலப்பொருட்கள் என்று எல்லாம் சரியாக இருந்தும் வலி குறைக்கும் தன்மை மட்டும் மிகவும் குறைந்து போயிருப்பதை கண்டு குழப்பம் கொள்கிறார் மோகனன் வைத்தியர்.

மனித உடலின் தன்மை மாறியிருக்கிறதா? அல்லது தான் தயாரித்த மருந்தின் தன்மை மாறியிருக்கிறதா? என்று ஆய்வைத் துவங்குகிறார் மோகனன். சில ஆண்டுகள் முயற்சிக்குப் பின் ஒரு உண்மை அவருக்குப் புரிந்து விடுகிறது. அதுதான்  மூலப்பொருட்களின் கலப்படம்.ஒரு மருந்து தயாரிப்பதற்குத் தேவைப்படும் எண்ணெய், தேன், பால் போன்ற மருந்து துணைப் பொருட்களின் அடிப்படைத்தன்மை மாறியிருப்பதைக் கண்டு கொண்ட வைத்தியர் மோகனன், எந்தெந்த பொருட்களில் என்ன விதமான கலப்படங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று ஆய்வைத் தொடர்கிறார்.

ஆய்வு போகும் பாதை அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. நாம் அன்றாட உணவிற்காக நம் வீட்டு சமையலறையில் பயன்படுத்துகிற பெரும்பாலான பொருட்கள் மிக மோசமான கலப்படங்களால் தரங்கெட்டுப் போயிருக்கின்றன என்ற உண்மை அவரைப் புரட்டிப் போடுகிறது. இதை சமூகத்துக்குச் சொல்லவேண்டியதை தன் கடமையாக அவர் உணர்கிறார்.

அவர் தருகிற உணவுப் பட்டியலில் சிலவற்றை நாம் பார்க்கலாம். அதற்கு முன்பாக, இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது மிக முக்கியம். வருங்காலத் தலைமுறை கலப்படம் குறித்த உண்மைகளை அறிந்து, நல்ல உணவுகளைத் தேட வேண்டும் என்பது அவரது ஆசை. எனவே, உணவு குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தருகிறார். இன்னொரு புறம் அவருடைய கிளினிக்கில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் விளக்குகிறார்.

அவர் கிளினிக்கிற்கு முதன்முதலாகச் செல்லும் நோயாளி, ஒரு முழு நாளை அதற்காகச் செலவிட வேண்டும். புதிதாக வரும் நோயாளிக்கு நேரடியாக சிகிச்சை அளித்து விடுவதில்லை வைத்தியர். முதலில் நோயாளிகளிடம் உணவுக் கலப்படம் குறித்த தன் விளக்கத்தைக் கூறுகிறார். அப்புறம் அவருடைய பெட்டியைத் திறந்து ரசாயனங்களைக் கலந்து நாம் கேட்கிற உணவுப் பொருட்களைத் தயாரித்துக் காட்டுகிறார். அதுவும் நாம் கேட்கிற கம்பெனியின் பொருளைப் போன்றே.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் யாரும், அவர் தயாரித்துக் காட்டுகிற பொருட்களைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்த அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் அவர் ரசாயனத் தயாரிப்பு. யூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவருடைய உரைகள், செய்முறைகள் மலையாளத்தில் கிடைக்கின்றன.
எந்த விதமான உணவுகள் மிகவும் மோசமானவை? ரசாயனக் கலப்படம் குறித்து ஒரு சிறிய பயணத்தைத் துவங்கலாம்.

எந்தப் பல்பொடி மிகவும் நல்லது? மிகப்பெரிய நிறுவனங்களின் பல்பொடிகளை விட, உங்கள் ஊர்களில் கிடைக்கும் சாதாரண பல்பொடிகளே போதுமானவை.

(தொடர்ந்து பேசுவோம்...)
படங்கள்: புதூர்சரவணன்
மாடல்: தேவிகா

அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்