கவிதைக்காரர்கள் வீதி




சுட்ட செங்கற்களுக்கு
ஆயுள் தண்டனை,
சுவராக நிற்கக் கடவது!
- சந்திரா மனோகரன், ஈரோடு.

அடைப்பதற்காகப்
பிடித்துப் பழகிய கோழி
அமைதியாக இருந்தது,
அதை அறுப்பதற்காகப்
பிடித்தபோதும்!
- ச.மாரிமுத்து, கழனிவாசல்.

வலை தப்பிய
குளத்தின் கடைசி மீன்
உணரும்
தனிமையின் உண்மையான வலியை!
- கோ.பகவான், பொம்மராஜுப்பேட்டை.


மனிதனைத் தின்ன
நிழலைத் தின்று
ஒத்திகை பார்க்கிறது மண்!
- கவி கண்மணி, கட்டுமாவடி.

காற்றில் சருகு
புரண்டு படுக்கும்
அதன் நிழல்!
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

கைப்பேசியில்
ஆபாசப்படம்
மனம் கெடுத்த மகிழ்வில்
விஞ்ஞானம்!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

முத்தமிட்டுக் கரைப்பது
எப்படி என்பது
பெரும் பாறைகளில் மோதும்
அலைகளுக்குத்தான் தெரியும்.
- விகடபாரதி, திட்டச்சேரி.