ஒரு புதுமை
புடவை வாழ்க!’ என கோஷம்தான் போடவில்லை. மற்றபடி கலர்ஃபுல் போட்டோக்களும் கலந்து கட்டிய அனுபவங்களுமாக புடவை புராணம் பாடுகிறது அந்த இணையதளம். இணையத்தில் வைரலாகப் பரவி வரும் அந்தத் தளத்தின் பெயர் ‘100sareepact.com’. ‘இந்த வருடத்தில் நூறு நாள் சேலை கட்ட வேண்டும்’ என கங்கனம் கட்டிய இரண்டு பெண்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கலக்கல் வெப்சைட்!
பெங்களூரூவைச் சேர்ந்தவர்கள் அஞ்சு மட்கல் கதம், அலே மத்தன். இருவரும் நெருங்கிய தோழிகள். அஞ்சு, 12 வருடங்களாக தொலைக்காட்சித் துறையில் இருப்பவர். பிசினஸ் நிருபராக அவர், தொழில் நிறுவனத் தலைவர்கள் பலரை பேட்டி எடுத்திருக்கிறார். அப்போது, அவர் அணிந்து செல்லும் புடவைகள் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தனவாம். இதனால், புடவை மீது அதீத ஈர்ப்பு.
‘‘இப்போது பல பெண்கள் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகளில்தான் சேலை கட்டுகிறார்கள். மற்ற நேரங்களில் சேலைகள் பீரோவில் உறங்குகின்றன. அதைக் தட்டி எழுப்பவே இப்படியொரு வெப்சைட்!’’ என்கிறார் அஞ்சு உற்சாகமாக. ‘‘இதை மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கினோம். முதலில், எங்கள் ஃப்ரண்ட்ஸ் இணைந்தார்கள். அடுத்து, அவர்களின் ஃப்ரண்ட்ஸ்... பிறகு அவர்களின் ஃப்ரெண்ட்ஸ் என ஒவ்வொருவராக இணைய பாப்புலேஷன் பெருகி விட்டது. இதில், பெண்கள் தங்கள் அனுபவங்களையும், புடவை பற்றிய நினைவுகளையும் ஷேர் செய்யலாம்.
புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும். இது, அவர்களின் நினைவுகளை, கொண்டாட்டங்களை, வாழ்வின் அற்புதத் தருணங்களை உணர வைக்கும்!’’ என்கிறார் அலே மத்தன். முதலில் வாங்கிய புடவை, பணிபுரியும் இடம், விழாக்காலம், கைத்தறி புடவைகள், டிகிரி வாங்கும்போது கட்டியது, தோழிகளோடு சேர்ந்திருந்தபோது என 19 வகைகளில் புடவை உடுத்திய தருணங்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள் இந்தத் தளத்தில். இந்தப் பிரிவுகளில் பெண்கள் தங்கள் புடவை புராணத்தைப் பகிரலாம். இப்போது, இந்தியா முழுவதிலும் இருந்து குவிகின்றன இந்த அனுபவங்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளங்களிலும் வலம் வரும் இவர்களுக்கு அதிலும் எக்கச்
சக்க லைக்ஸ்!
லைக்ஸ் போடும் ஒவ்வொரு பெண்ணுமே, வருடத்தில் நூறு நாளாவது சேலை கட்டுவேன் என்ற உறுதிமொழியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாகப் பொருளாம்!
சூப்பர்ல!
- பேராச்சி கண்ணன்