விநோத ரஸ மஞ்சரி
மரம் மாதிரி நிக்கிறீங்களே!’’ - கணவனைப் பார்த்து இப்படிக் கேட்காத மனைவிகள் நிச்சயம் இவ்வுலகில் இல்லை. ஆனால், ஆஸ்திரேலியப் பெண்ணான எம்மா மெக்கெப்பால் இப்படிக் கேட்க முடியாது. காரணம் அவர் மனப்பூர்வமாகக் காதலித்து மணம் புரியப் போவது ஒரு மரத்தையேதான்.``எனக்கு 31 வயதாகிறது. டீன் ஏஜில் தொடங்கி எத்தனையோ காதல்களைக் கடந்து வந்துவிட்டேன்.

ஆண்கள் மீதே வெறுப்பு வரும் அளவுக்கு எல்லாம் கசப்பான அனுபவங்கள்’’ என்கிற எம்மா, இப்படியான ஒரு சோக பிரேக்கப் தருணத்தில்தான் பூங்கா ஒன்றில் அந்த மரத்தைப் பார்த்திருக்கிறார். பாப்ளர் எனும் வகையைச் சேர்ந்த நெடிதுயர்ந்த மரம் அது. டிம் என அந்த மரத்துக்கு - சாரி, தன் பாய் ஃப்ரெண்டுக்கு - செல்லப் பெயர் வைத்திருக்கிறார் எம்மா.
``டிம் பக்கத்தில் இருக்கும்போது நான் என் கவலைகளை மறக்கிறேன். தனிமையில் அவனிடம் பேசுகிறேன். அவன் இலைகள் என் மீது உரசும்போது அது என்னைக் கிச்சுக்கிச்சு மூட்டுவது போல உணர்கிறேன்’’ எனத் தன் காதல் பற்றி ஃபீலிங் விடுகிறார் எம்மா. டிம்முடனான தன் திருமணத்தை ஒரு சின்ன குடும்ப நிகழ்ச்சி போல சிம்பிளாக முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் இவர்.`இது என்னங்க லூசுத்தனம்? கல்யாணம் என்றால் தாம்பத்ய வாழ்க்கை வேண்டாமா?’’ என்கிறீர்களா!
பேட்டி எடுத்த பத்திரிகைகள் அதையும் கேட்டு விட்டன. வாரம் ஒரு தரம் யாருமற்ற நேரத்தில் நிர்வாணமாக டிம்மைக் கட்டி அணைத்து, அதன்மீது தன் உடலைத் தேய்த்து செக்ஸ் உணர்வைத் தணித்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார் எம்மா. அந்த `சமாச்சார’த்தைப் பொறுத்தவரை எந்த ஆடவனும் தனக்குத் தராத திருப்தியை இந்த மரம் தருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார் இவர்.``தன்னைச் சுற்றியுள்ள பொருட்களை எல்லாம் கூடக் காதலிக்கிற ‘டென்ரோஃபீலியா’ எனும் உளவியல் சிக்கல்தான் இது!’’ என்கிறார்கள் நிபுணர்கள்.நம்ம ஊருன்னா `மர’மண்டைம்பாங்க!
- ரெமோ