தோஷம்



வசந்திஅழுகையுடனே துணி துவைத்தாள். ‘‘என்னடி ஆச்சு..?’’ - பக்கத்து வீட்டு மாமி கேட்டாள்.‘‘அம்மாரொம்ப சீரியஸா இருக்காங்களாம் மாமி. அண்ணன் போன்  பண்ணினான்.’’‘‘கிளம்பிப்போக வேண்டியதுதானேடி..! அழுதுட்டு இருக்கே..? வழக்கம் போல உன் மாமியார்க்காரி அனுப்பமாட்டேன்னுட்டாளா?’’‘‘ஆமாம் மாமி.

‘உன்  அம்மாவுக்கு எப்பவுமே இப்படித்தான். அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீ வேலையைப்பாரு’ன்னுட்டாங்க. ஆனா, எப்பவும் மாதிரி இல்ல மாமி. ‘இந்த தடவை ரொம்ப சீரியஸ்   உடனே வா’ன்னுஅண்ணன் அழுதுட்டே சொன்னான்!’’ - விசும்பலாகச் சொன்னாள் வசந்தி.

‘‘ப்ச்...விடு, எல்லாம் கடவுள் பார்த்துப்பார்!’’ எனக் கடந்து போனாள் மாமி.சற்றுநேரத்துக்கெல்லாம் வசந்தியின் மாமியார் வந்தாள்.‘‘வசந்தி... ஏதோ நட்சத்திர தோஷமாம்.  பொண்ணுங்கள அவஅவ பிறந்தவீட்டுக்கு அனுப்பிடணுமாம்.

இல்லைன்னா வீட்ல இருக்கிற ஆம்பிளைக்கு ஆகாதாம். இப்பத்தான்பக்கத்து வீட்டு மாமி சொல்லிட்டுப் போறா.  உன் அம்மாவுக்கு வேற உடம்பு முடியலையே...உன் வீட்டுக்காரன்கிட்ட கூட நான் சொல்லிக்கறேன். நீ உடனே புறப்படு!’’ என்றாள் மாமியார்.வசந்தி மனதார நன்றி தெரிவித்தாள், கடவுளுக்கல்ல... பக்கத்து வீட்டு மாமிக்கு!

ச.மணிவண்ணன்