சமுத்திரக்கனியுடன் தன்ஷிகா நடிக்கும்`கிட்ணா’ படம், சு.தமிழ்ச்செல்வி எழுதிய `கீதாரி’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. ``எனக்கு `பரதேசி’க்குப் பிறகு குட் நேம் கொடுக்கும் படம் இது’’ என புன்னகைக்கிறார் தன்ஷி.

சோனியா காந்தி வீட்டுக்கு எதிரே இருக்கும் மாளிகைக்குக் குடி வந்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. ஏற்கனவே அந்த வீட்டில் ஒரு அலுவலகம் இருந்தது. அதன் பரந்து விரிந்த தோட்டத்தில் ஆர்கானிக் காய்கறிகள் விளைவித்து சோனியா வீட்டுக்கு பல ஆண்டுகளாக அனுப்பி வந்தார்கள். கட்கரி வந்தபிறகும் அது தொடர்கிறது.
தெலுங்கு நடிகர் கல்யாண்ராம் எடுத்த ‘பட்டாஸ்’ படம் அங்கே அதிரிபுதிரி வெற்றி. ஆர்.பி.சௌத்ரி பட உரிமையை தமிழுக்கு வாங்கிவிட்டார். அதில் தப்பான ஊழல் போலீஸ் அதிகாரியாக அனேகமாக ஜீவாதான் நடிக்கிறார்.

மொரீஷியஸ் தீவில் கமல் எடுக்கும் கதை ஒருநாள் மாலையில் ஆரம்பித்து, அடுத்த நாள் காலையில் நிறைவடைகிறது. ‘ஓர் இரவு’ என பெயர் வைக்கலாமா என்று ஆலோசிக்கிறார் உலகநாயகன்.
‘இந்தியா பாகிஸ்தான்’ ஹீரோயின் சுஷ்மா ராஜ், ஃபேஷன் டிசைனிங் படித்த பொண்ணு. கன்னடத்தில் ஒண்ணு, தெலுங்கில் 3 என படங்கள் பண்ணின சுஷ்மாவின் தாய்மொழி தெலுங்கு.
‘நெருங்கி வா முத்தமிடாதே’ ஹீரோயின் ஸ்ருதி ஹரிஹரன், கன்னடத்தில் பிஸி பொண்ணு. இப்போது பாலாஜி சக்திவேல் இயக்கி வரும் `ரா ரா ராஜசேகர்’ படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். `‘பாலாஜி சார்கிட்ட இருந்து முதல்தடவை போன் வந்தப்போ நான் கன்னடப் பட ஷூட்ல இருந்தேன். ஸோ, பண்ண முடியாமப் போச்சு. மறுபடியும் போன் வந்துச்சு. அப்போ நான் தாய்லாந்துல இருந்தேன். இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு ஓகே சொல்லிட்டேன்’’ என மகிழ்கிறார் ஸ்ருதி.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல்முறையாக இரு பெண்களுக்கு இடையிலான போட்டி நிகழக்கூடும் எனத் தோன்றுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் அநேகமாக ஹிலாரி கிளின்டன் போட்டியில் குதிப்பது உறுதி. குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பைக் கேட்டிருக்கிறார் கார்லி ஃபுளோரினா. டெக்னாலஜி நிறுவனமான ஹெச்.பி.யின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் இவர். ‘அமெரிக்க டெக்னாலஜி நிறுவனங்களில் மிக மோசமான நிர்வாகி’ தேர்தலில் எப்போதும் முதலிடம் பிடித்த ‘பெருமை’க்குரியவர் இவர்.
‘புலி’யின் ஓபனிங் பாடல் மட்டுமே நாலரைக் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. மும்பை, பெங்களூரு, கேரளாவிலிருந்து 600 டான்ஸர்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டார்கள். விஜய் படங்களில் இதுதான் மெகா பட்ஜெட்.
த்ரிஷா, தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்த `லயன்’ மே மாதம் ரிலீஸ் ஆகிறது. ஐதராபாத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, மூத்த அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்திருந்தது விழாவின் ஸ்பெஷல் என்றாலும், டிசைனர் சேலையில் ஜொலித்த த்ரிஷாவின் காஸ்ட்யூம் அங்கே செம அப்ளாஸை அள்ளியது விழாவின் ஹைலைட்.
ரஜினியும், ஷங்கரும் அடுத்து ஒரு படம் செய்வதற்காக பேசிக்கொண்டார்கள். அவர் சொன்ன கதையெல்லாம் ரஜினியை சற்று வேலை வாங்குவது போல இருக்கவே, அந்த விஷயத்தைத் தொடராமல் நிறுத்திக் கொண்டார்கள்.
சுசீந்திரன் டைரக்ஷனில் விஷால் நடிக்கும் `பாயும் புலி’யில் அவரது கேரக்டர் பெயர் ஜெயசீலன். அடுத்து லிங்குசாமியின் `சண்டக்கோழி2’வில் நடிக்க ரெடியாகி விட்டார் விஷால். மே மாதம் ஷூட்டிங் கிளம்பி, டிசம்பரில் ‘கோழி’யை ரிலீஸ் செய்கிறார்கள்.
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் குட்டிக் கிரகம் ஒன்றிற்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘4538 விஷிஆனந்த்’ என்பது அந்த கிரகத்துக்கு இப்போது பெயர். ‘மைனர் பிளாட் சென்டர்’ என்ற அமைப்பின் கமிட்டி உறுப்பினர் மைக்கேல் ருடென்கோ ஒரு செஸ் ஆர்வலர். அவர்தான் இப்படி பெயர் சூட்டினார். முதலில் இந்த விஷயத்தை ஆனந்த் நம்பவில்லை. காரணம், ஏப்ரல் முதல் தேதி செய்தி வெளியானதால்! அப்புறம் நாசாவிலிருந்து ஆதாரபூர்வ தகவல் வந்தபிறகே வாழ்த்துகளை ஏற்றார்.
சிம்புவின் தம்பி ‘இது நம்ம ஆளு’விற்கு மீதி இரண்டு பாட்டு போட்டுக் கொடுத்தபாடில்லை. அதனால் சிம்புவும் அனிருத்தும் சேர்ந்து இரண்டு பாடல்களைத் தயார் செய்யக் கூடி இருக்கிறார்கள்.
பாண்டிராஜ் டைரக்ஷனில் சூர்யா தயாரித்து, கெஸ்ட் ரோலில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்துவிட்டது. நகரத்து குழந்தைகள் பற்றிய கதை இது. ‘பசங்க’வில் சோபிக்கண்ணு கேரக்டர் போல இதில் பிந்துமாதவியின் கேரக்டர் பேசப்படுமாம்!