அடையாளம்



‘‘வீட்டை அழகா மெயின்டெய்ன் பண்றீங்க மாமி...’’‘‘நன்றிம்மா... நீங்கதான் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்திருக்கீங்களா..?’’‘‘ஆமாம் மாமி... வீட்டைச் சுத்தி தோட்டம் இருக்கு  போலிருக்கே!’’‘‘ஆமா... சும்மா புல்லு மண்டிக் கிடந்துச்சு. நான்தான்  சுத்தம் பண்ணி வேலி அடைச்சு காய்கறி விதையெல்லாம் போட்டேன்... இந்த மண்ணுக்கு எது  போட்டாலும் உடனே முளைக்குதும்மா!’’‘‘சின்னதா இருந்தாலும் உங்க வீடு அழகா இருக்கு...’’

‘‘அட... இது என் வீடு இல்லேம்மா... நாங்களும் உங்களை மாதிரி வாடகைக்குத்தான் குடியிருக்கோம்.. மூணு மாசத்துக்கு முந்திதான் குடிவந்தோம்... இப்ப என் வீட்டுக்காரருக்குத்  திரும்பவும் வெளியூருக்கு ட்ரான்ஸ்ஃபர். அடுத்த மாசம் காலி பண்ணிடுவோம்!’’‘‘என்னது... வாடகையா? தோட்ட வேலையே பின்னி எடுக்கும்... நீங்க ஜன்னல் கம்பி வரைக்கும்  துடைச்சு கிளீனா வச்சிருக்கீங்க. காலி பண்ணப் போற வீட்டுக்கா இவ்வளவு மெனக்கெடுறீங்க?’’

‘‘எந்த இடமும் நாம வர்றப்ப இருந்ததைவிட போறப்ப நல்லா இருக்கணும். திருட வர்றவங்கதான் வந்ததுக்கு எந்த அடையாளமும் இருக்கக் கூடாதுனு நினைப்பாங்க.  நாமெல்லாம் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திட்டுப் போகணும்...’’‘பெற்றுக்கொள்வதால் அல்ல, விட்டுச்செல்வதால் கிடைப்பதே புகழ்’ எனப் புரிந்தது பக்கத்து வீட்டுப்  பெண்ணுக்கு.

தஞ்சை தாமு