குழந்தை



‘‘ஒண்ணு போதும்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது மூணு வருஷம் வளர்ந்து விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு அடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தை  பெத்துக்கிறதிலும் விருப்பமில்லே. எனக்கும் அப்படி. நாம கடைசிவரை இப்படியே இருக்கணுமா?’’ - கேட்டு தன் மனைவியைப் பார்த்தான் ஆனந்த்.‘‘உங்க விருப்பம் எப்படி?’’ - நந்தினி கேட்டாள்.

‘‘கைநிறைய சம்பாதிக்கிற நாம ஏன் இப்படி வெறுமனே வாழ்ந்து மடியணும்? யாரையாவது தத்தெடுத்து வளர்க்கலாமே? அதுங்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும். நமக்கும் திருப்தி.’’  ‘‘நல்ல யோசனைங்க!’’‘‘சமீபத்துல ஒரு விபத்துல பெத்தவங்களை இழந்த குழந்தை ஒண்ணு இருக்கு. இவுங்கதான் விபத்துல இறந்த அந்த ஜோடி!’’ - தன் கையில் இருந்த  தினசரியைக் காட்டினான். பார்த்த நந்தினி அதிர்ந்தாள்.

‘‘உன் முன்னாள் காதலன். அவள் என் காதலி!’’ என்ற ஆனந்த் தொடர்ந்தான். ‘‘நந்தினி! காதலிச்சாலே பாதி கணவன் மனைவி. சந்தர்ப்ப சூழலால பிரிஞ்சாச்சு.
அந்தக் குழந்தையை மத்தவங்களை விட நாம ஈடுபாடா வளர்க்கலாம். ஆமாம் நந்தினி! என் சொல்படி அந்த குழந்தைக்கு ஏற்கனவே நாம பாதி அம்மா - அப்பா. வளர்த்தா  முழுமை ஆகிடுவோம். என்ன சொல்றே?’’ ‘எப்படி இவரால் இப்படி சிந்திக்க முடிகிறது!’ - நினைத்த நந்தினிக்குள் ஆனந்த் மடமடவென உயர்ந்தான்.                       

காரை ஆடலரசன்