கவிதைக்காரர்கள் வீதி



வெகுநேரம் கவனித்துக்
கொண்டிருந்தேன்
சிறுமி விட்டுக் கொண்டிருந்த
நிறமற்றதொரு காற்றாடியை
விச்ராந்தியாய்

பொழுது கழிக்க
மொட்டைமாடிக்கு வந்த நான்
எதற்கு எது ஆதாரமென்ற
கேள்வியை எழுப்பியபடி
அசைந்தாடிக் கொண்டிருந்தது
காற்றின் கையில் காற்றாடியும்
சிறுமியின் கையில் நூலும்

கண்ணிமைக்கும் ஒரு கணத்தில்
காற்றாடி எங்கோ சென்றுவிட
அந்தரத்தின் அனுபவம்
சொல்வதுபோல
வளைந்து நெளிந்து விழுந்த

நூலைப் புறக்கணித்தபடி
நகர்ந்தாள் சிறுமி
`நூல் வேண்டாமா?
சுற்றி வைத்துக்கொள்
அடுத்த காற்றாடிக்குத் தேவைப்படும்’

என்றேன்.
`அய்யே! காற்றாடிக்குத்தான் நூல்
நூலுக்கா காற்றாடி’ என்றபடி
படியிறங்கிவிட்டாள்
நூலாய் நான் கிடந்தேன்
காற்றாடியாய் எங்கோ
பறந்து போயிருந்தது
என் அனுபவமெல்லாம்!

உள்ளீடற்ற தன் இருள்வெளியில்
நுழையும் காற்றை
நூதன இசையாய்
ஒப்பனை செய்து அனுப்பும்
எந்த மூங்கிலும்
தன்னை அழைத்துக் கொள்வதில்லை
தானொரு புல்லாங்குழலென!

கீர்த்தி