அழியாத கோலங்கள்



என் தாய்வழிப் பாட்டனார் பரமக்குடி பஞ்சாயத்து தலைவராக இருந்த நேரம். எனக்கு வயது நாலோ, ஐந்தோ இருக்கலாம். மாலை 6 மணிக்கு ஒரு விளக்கேற்றும் தொழிலாளி தாத்தாவின் வீட்டுக்கு வருவார். பின்பக்க மாடிப்படி அடியில் ஒரு பெரிய கூண்டில் இருக்கும் அரிக்கேன் விளக்குகளை தேய்த்து சுத்தம் செய்து, ஒவ்வொன்றிலும் மண்ணெண்ணெய் நிரப்புவார். இருட்டு வருமுன் 6 பக்க அறைகளுக்கும் இரண்டு அல்லது மூன்று நெடும்பாதைகளுக்கும் பத்து விளக்குகளை ஏற்றி மாட்டி விடுவார்.

பாட்டனாருக்கு ஒரு வக்கீல் ஆபீஸ் டேபிள். அதின் மேலே ‘பவர் லேம்ப்’ என்று அந்த நாளில் சொல்லப்பட்ட வட்டமான சுற்றுத்திரி எரியும் ஷேட் உள்ள விளக்கு மாட்டப்படும். தாத்தாவின் காலுக்கடியில் மரத்தில் செய்யப்பட்ட ஒரு பெடல் இருக்கும். அதை அவர் காலால் முன்னும் பின்னுமாக ஆட்டினால், தலைக்கு மேலே ஒரு பங்கா ஆடும். காற்றாட வேலை பார்ப்பார். தாத்தா பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆகவும் பரமக்குடி கோஆப்பரேடிவ் வங்கியின் தலைவராகவும் இருந்தார்.

 மாலை ஆறு மணிக்கெல்லாம் என்னை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு தெருவாகச் செல்வார். ஒவ்வொரு முக்கிலும் ஒரு கல்தூணின் உச்சியில் இருக்கும், நான்கு புறமும் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட விளக்குகள் எரிகிறதா என்று பார்வையிடுவார். 

தாத்தா வீடு சுமார் 800 அடி நீளமும் 25 அடி அகலமுமான நீண்ட உலகம். பரமக்குடி காந்திஜி ரோட்டில் ஆரம்பித்து பின்னால் வைகை ஆறு வரை செல்லும். தாத்தா கோபால அய்யங்கார் பிரபல வக்கீல். நென்மேனி என்ற கிராமத்தில் ஒரு ஆயிரம் ஏக்கருக்கு சொந்தக்காரர். மேல்வாரம், குடிவாரம் என்று வெள்ளையர் காலத்தில் இனாம்தாருக்குப் பாதியும் உழுபவனுக்குப் பாதியுமாக விளைச்சலைப் பகிர்ந்து கொள்வார்கள். அதற்கும் குத்தகைக்கு விடப்பட்ட நில உரிமைக்கும் ஒரு வித்தியாசம்...

விவசாயம் செய்பவர் குத்தகை காலம் முடிந்ததும் வெளியேற்றப்படலாம். ஆனால் குடிவாரம்தாருக்கு எக்காலத்திலும் உழும் உரிமையும், மேல்வாரம்தாருக்கு பாதி விளைச்சலை வாங்கும் உரிமையும் மட்டுமே உண்டு.  
 
தாத்தா வீட்டின் முன்புறம் நான்கு, ஐந்து கார்கள் நிறுத்தும் அளவுக்கு காலியிடம் இருந்தது. ஆனால் மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் முக்கு ரோட்டில் ஆஸ்பத்திரி முன்னால் நிற்கும் பஸ் தவிர, வேறு கார்களை அந்த நாட்களில் யாரும் பார்த்ததில்லை. ஆபீஸ் தவிர, தாத்தாவின் நீளமான வீடு, முதல் கட்டு, இரண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு என விரிந்திருக்கும்.

ஆபீஸ் வாசலில் இரண்டு பெரிய திண்ணைகள், ஒவ்வொன்றிலும் நான்கு குமாஸ்தாக்கள். ஒரு திண்ணையில் ராமநாதபுரம் சமஸ்தான கேஸ்கட்டுகளாக அடுக்கியிருக்கும். ராமநாதபுரம், பரமக்குடி இரண்டு தாலுக்காக்களிலும் மேல்வாரம்தார், ராமநாதபுரம் ராஜாதான். அவருக்கு பரமக்குடி வக்கீல், என் தாத்தா தான். 

தாத்தாவின் பெரிய குமாஸ்தா சின்னையா பிள்ளை என்பவர் எனக்கு இன்றும் நினைவில் நிற்கிறார். என் பாட்டிகூட எது வேண்டுமானாலும் சின்னையா பிள்ளையின் காதில் போட்டு வைத்தால், அவர் சூசகமாக வக்கீலய்யாவிடம் கேட்டு ஏதாவது வகை செய்வார். இரண்டாம் ஆபீஸில் மற்ற கட்சிக்காரர்களின் கேஸ்கட்டுகள் மட்டும் இருக்கும். ஒரு நீளமான உள்ளடங்கிய சந்துப் பாதை, மேல்மட்ட சீலிங்குக்கு அடியில்  இரண்டாங்கட்டு முடிவு வரை போகும்.

மூன்றாம் கட்டில் ஒரு முத்தம். (இது கொடுக்கும் வகை அல்ல... வீட்டின் சிறிது சரிவான அமைப்பு!) அதை ஒட்டிய ஒரு தண்ணீர் டேங்க். அதில் ஒரு அடி நீள குழாயின் முடிவில், மூடித்திறக்கக் கூடிய டாப். பெரியவர்களுக்கு மட்டுமே எட்டும். எங்கள் பாட்டி ‘ஹும்... ஹும்...’ என்று முனகிக்கொண்டே வந்து, அவர் பிள்ளைகள் மூன்று பேருக்கும், பேரன்மார்கள் மூன்று பேருக்கும் குளிப்பாட்டி விடுவார்.

அவருடைய கடைசிப் பிள்ளை, என்னைவிட ஒரு வருடம் பத்து மாதம் இளையவர். என் கடைசி தாய் மாமன்! விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்று, ஊட்டி யில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸில் எஞ்சினியராகப் பணிபுரிந்து, இன்று 82 வயதில் கொடைக்கானல் எஸ்டேட் மானேஜராக இன்னும் காட்டு மனிதனாக வாழ்கிறார்.  
 
1935ம் ஆண்டில் - என்னுடைய ஐந்து வயதில் - பரமக்குடியில் மின்சாரம் இல்லை. சினிமா என்பது கேள்விப்படாத விஷயம். பம்பாயில் வசித்த என் பெரியம்மா வீட்டுக்குப் போனதும், மும்பையின் வானுயர்ந்த கட்டிடங்களும் என் நினைவில் இன்னும் நிற்கின்றன. மின் தூக்கிகள் அக்கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்ததா என்று நினைவில்லை. பெரியம்மா வீட்டு சுவற்றில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு விசை; அதை மேலே தூக்கினால் விளக்கு அணைந்தது; கீழே இறக்கினால் ஒளி மிளிர்ந்தது.

ஒரு நாள் முழுதும் ஒரு ஸ்டூலில் நின்று இந்த அதிசயத்தை ரசித்துக் கொண்டு இருந்தேன். மாலையில், ‘‘வாடா... சினிமாவுக்கு போகலாம்’’ என்று பெரியம்மா அழைத்தபோது ‘சினிமா’ என்ற பெயரை முதல்முறையாகக் கேள்விப்பட்டேன்.

 சிறிது நேரத்தில் எங்கள் பள்ளிக்கூடம் போன்ற ஒரு அறையில், மாணவர்கள் போல உட்கார்ந்திருந்தோம். எல்லோரும் தாழ்ந்த குரலில் கசமுசவென பேசிக்கொண்டிருந்தார்கள். நான் சிறிதே சோர்வுற்று, ‘‘ஏன் இந்த ஊரிலே பிளாக் போர்டு வெள்ளையாக இருக்கிறது?’’ என்றேன். 

‘‘சும்மா இருடா! அது ஸ்கிரீன்’’ என்றார் அவர். எனக்குப் புரியவில்லை. அடுத்து, ‘‘வாத்தியார் எப்ப வருவாரு?’’ என்று கேட்டேன். பெரியம்மா, ‘‘உஷ்! சும்மா இருடா... முட்டாள். சினிமா வந்ததும் பாரு!’’ என்றதும் இருக்கையில் சாய்ந்து மேலே பார்த்தேன். மேலே சுற்றும் காத்தாடியைப் பார்த்ததும்... ‘‘பெரியம்மா! சினிமா வந்துருச்சு’’ என்றேன். சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

பெரியம்மா தலையில் ஒரு தட்டு தட்டி, ‘‘பேசாமே இருடா’’ என்றார். அப்போது அழ ஆரம்பித்தவன், பெரியம்மா சமாதானம் செய்ததும் தூங்கி விட்டேன். பிறகு நடந்தவை நினைவில் இல்லை. ‘சினிமா என்பது என்ன’ என்பதையும் தெரிந்து கொள்ளவில்லை.

 பம்பாயிலிருந்து பரமக்குடி வந்ததும், என்னைச் சுற்றி தெருப் பையன்கள் இருக்க, நான் சினிமா பற்றி பெருமையோடு கூறினேன்... ‘‘சினிமா நம் தலைக்கு மேல் காத்தாடி போல சுற்றும். அதற்கு இரண்டு, மூன்று சிறகு இருக்கும். அதிலிருந்து ஜில் என்று காற்று வரும்!’’ பின்னால் எங்கள் ஊரில் இருந்த கருணாநிதி டாக்கீஸ் நினைவுக்கு வருகிறது. அதை ‘தகரக் கொட்டகை’ என்போம். மற்ற பிள்ளைகளுக்குக் கிடைக்காத ஒரு வக்கீல் தந்தை...

என்னை 9 அல்லது 10 வயதில் ஒரு வேலையாள் துணையுடன் வாரம் இரண்டு முறை சினிமா பார்க்க அனுப்பு வார். தரை டிக்கெட்டில் திரைக்கருகில் கழுத்து வலிக்க உட்கார்ந்து சினிமா பார்ப்போம். ‘மின்னல் கொடி’, ‘வீரரமணி’ போன்ற பெண் கதாநாயகிகளின் படங்கள் வெற்றிகரமாக ஓடின. ஒரு பெண் பத்து ஆண் வில்லன்களை அடித்துத் துரத்தும் காட்சிகள் வெகுவாக ரசிக்கப்பட்டன.

கொட்டகை வாசலில் கேட்டை ஒட்டி ஒரு டிக்கெட் கொடுக்கும் ஜன்னல் இருக்கும். வெளியே 10 அல்லது 15 பேர்தான் நிற்பார்கள். ஜன்னல் திறந்ததும் அந்த 15 பேரும் முண்டியடித்து, ஒருவர் மேல் ஒருவர் ஏறி, ‘நான் முந்தி... நீ முந்தி...’ என்று அரை மணி நேரத்தை வீணடிப்பார்கள். பின்னால் ஜெர்மனியில் ஹிட்லர் ‘க்யூ’ என்ற வரிசை முறையை ஏற்படுத்தினாராம். நம்மை ஆண்ட வெள்ளையர்கள் தங்களுக்கு ஹிட்லரைப் பிடிக்காத தால் ஒரு வேடிக்கைக் கதை சொல்வார்கள்... க்யூவை வெறுத்த ஒரு ஜெர்மானியன் ஹிட்லரை க் கொலை செய்ய துப்பாக்கியோடு போனானாம். அங்கேயும் ஹிட்லரைக் கொல்ல ஒரு க்யூ நின்ற தாம்!   
            
சாருஹாசன்

(நீளும்...)

படம்: புதூர் சரவணன்