அலற வைக்கும் ஆம்னி பஸ் அழிச்சாட்டியங்கள்!



தீபாவளி நாளில் பலர் நிம்மதியிழக்கக் காரணம், ஆம்னி பஸ். சொந்த ஊர் போய் தீபாவளி கொண்டாடுவதா, வேண்டாமா என்பதை பலர் வாழ்வில் தீர்மானிப்பதாக இது இருக்கிறது. ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது. அரசு பஸ்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


 34 சீட்டுக்கு 68 பேர் அடித்துப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். அப்படியே கிடைத்தாலும் ஊர் போய்ச் சேர்வதற்குள் பண்டிகை முடிந்துவிடும். இதனால் பலரது சாய்ஸ், ஆம்னி பஸ்தான். சென்னையிலிருந்து மட்டும் தினமும் 700க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் புறப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் ஆயிரங்களைத் தாண்டும். ஆனால் கட்டணம்?

மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றவே கூடாது. ‘ஒப்பந்த வாகனம்’ என்று தான் பதிவு செய்யப்படுகின்றன. ஒப்பந்தம் அல்லது வாடகை அடிப்படையில்தான் இயக்க வேண்டும். ஆனால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஓட்டுகிறார்கள். தமிழகத்தில் ‘பெர்த் பஸ்’களுக்கு அனுமதி இல்லை. ஆனால் 200க்கும் மேல் ஓடுகின்றன. பக்கத்து மாநிலங்களில் பதிவுசெய்து பர்மிட் வாங்கி இங்கே ஓட்டுகிறார்கள்.

*கட்டணம்?

கட்டணத்தை பஸ் உரிமையாளரும், இடைத்தரகர்களும்தான் தீர்மானிக்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசு கண்ணாமூச்சி விளையாடுகிறது. ‘அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை’ என்று அதிகாரிகள் அறிக்கை விடுவார்கள். ஆனால், எது சரியான கட்டணம் என்று எந்த அதிகாரிக்கும் தெரியாது. ஏனெனில் அரசால் கட்டணத்தையே தீர்மானிக்க முடியாது. காரணம், இவை ஒப்பந்த வாகனங்கள். பயணிகளை ஏற்றிச்செல்வதே குற்றம் என்ற நிலையில், அதற்கு கட்டணத்தை எப்படித் தீர்மானிப்பது?

*டிக்கெட் புக்கிங்


டிக்கெட் விற்பனை பெரும்பாலும் புரோக்கர்கள் கையில்தான். கிடைத்தவரை லாபம். பெரும்பாலான டிராவல்ஸ் நிறுவனங்கள்   க்ஷீமீபீதீus   என்ற இணையதளத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ளன. 10% கமிஷன், 1.24% சர்வீஸ் சார்ஜ் போக மீத பணத்தை டிராவல்ஸ்க்கு தருகிறது இந்த இணையதளம்.

எந்த அடிப்படையில் இவர்கள் கட்டணம் நிர்ணயிக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. டிமாண்ட் நேரத்தில் பெரும்பாலான பஸ்கள் முன்பதிவு செய்வதில்லை. கடைசி நேரத்தில் டிக்கெட் விற்று கூடுதல் காசு பறிப்பார்கள்.

ரெகுலர் பஸ்கள் போக, சீசன் பஸ்களும் உண்டு. பயணிகள் கூட்டம் சேர்ந்தால் எடுப்பார்கள். கிளம்பினால்தான் பயணம் நிச்சயம். பல பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பாது. 2 மணி நேரமாவது காக்க வைப்பார்கள். பெரும்பாலான ஆம்னி பஸ் நிறுவனங்கள் பார்சல் சர்வீஸ் நடத்துகின்றன. டூவீலர் முதல் கட்டில், பீரோ வரை, திணறத் திணற லக்கேஜ் ஏறும்.

*விபரீத வேகம்

வண்டலூர் வரை மிதவேகம் காட்டும் பஸ், செங்கல்பட்டை தாண்டியதும் காற்றில் பறக்கும். தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லவேண்டும். ஆனால், இவர்களுக்கு வேகக் கட்டுப்பாடே கிடையாது. 110 முதல் 140 கி.மீ வரை ஓட்டுகிறார்கள்.

*நடுவழி தவிப்பு

பஸ் பாதி தூரம் கடந்திருக்கும். அசந்து தூங்கிக் கொண்டிருப்பீர்கள். திடீரென்று நிறுத்தி, ‘‘உங்கள் பஸ் பின்னால் நிற்கிறது. போய் ஏறிக் கொள்ளுங்கள்’’ என்பார்கள். இறங்கி ஓட வேண்டும். அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு பஸ்ஸை, சீட்டை மாற்றுவார்கள். வழியில் பஸ் பிரேக்டவுன் என்றால், ஏதேனும் ஒரு பஸ்ஸில் ஏற்றி விடுவார்கள். சீட் இருந்தால் ஓகே. இல்லாவிட்டால் நின்றபடிதான் பயணிக்க வேண்டும்.

*முறைப்படுத்தவே முடியாதா?

ஏற்கனவே உயர் நீதிமன்றம், ‘ஆம்னி பஸ்களை முறைப்படுத்த விதிமுறைகள் வகுக்க வேண்டும்’ என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எதுவும் நடக்கவில்லை. கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கட்டுண்டு கிடக்கிறார்கள். அறிக்கை வெளியிடுவதும், சில பஸ்களைப் பிடித்து ஃபைன் போடுவதும் தவிர வேறெதுவும் செய்வதில்லை. 

*என்னதான் தீர்வு?

போக்குவரத்துத் துறையில் இருக்கும் ஊழல்களைக் களைய வேண்டும். அரசு அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். தொலைதூர பஸ்களை தரம் உயர்த்த வேண்டும். ஊரை விட்டு உறவுகளை விட்டு, நகரத்தின் இடிபாடுகளுக்குள் நைந்து, வியர்வை சிந்தி உழைக்கிற அப்பாவிகளின் பணம் கொள்ளை போவதை பார்த்துக் கொண்டிருப்பது ஒரு நல்ல அரசுக்கு
அழகல்ல.

‘‘பண்டிகை நாட்களில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்களே, இது நியாயமா?’’ என அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அசோசியேஷன் தலைவர் பாண்டியனிடம் கேட்டோம். ‘‘வருடத்துக்கு 200 நாட்கள் மட்டுமே பிசினஸ். 165 நாட்கள் நஷ்டம்தான். ஒரு ‘மல்ட்டி ஆக்ஸல் வால்வோ பஸ்’ விலை 1 கோடியே 30 லட்சம் ரூபாய். மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரூ.1 லட்சத்து 8,000 வரி கட்டுகிறோம்.

பெர்த் பஸ்களை வேறு மாநிலத்தில் பதிவு செய்து ஆல் இண்டியா பர்மிட் வாங்கி ஓட்டுகிறோம். அதற்கு இங்கே ஒரு சீட்டுக்கு 3500 ரூபாய் வரி. தவிர, எங்கே பதிவு செய்கிறோமோ அங்கும் வரி... சென்னையிலிருந்து கோவை சென்று திரும்ப டோல்கேட்டுக்கு மட்டும் 2500 ரூபாய் கட்டணம்... இந்த செலவை எல்லாம் எப்படி
நாங்கள் ஈடு கட்டுவது?’’ எனக் கேட்டார் அவர்.

இது புது கொள்ளை

பஸ்சில் பயணி போல முன்பதிவு செய்து கொள்வார்கள். ஏறும்போதே நோட்டம் விட்டு ஆட்களை டார்கெட் செய்து விடுவார்கள். நள்ளிரவில் மோட்டலில் பஸ் நிற்கும்போது சத்தமில்லாமல் குறிவைத்த லக்கேஜ்களை கிளப்பிக்கொண்டு இறங்கிவிடுவார்கள். மோட்டலுக்கு அருகிலேயே தயாராக ஒரு வாகனம் காத்திருக்கும். அதில் ஏறி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இப்படி ஆம்னி பஸ்களைக் குறிவைத்து கொள்ளையடித்த வடமாநில கும்பல் ஒன்று, அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவுக் கட்டணம்அரசு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து, நான் ஏ/சி செமி ஸ்லீப்பர் ஆம்னி பஸ் -கட்டண ஒப்பீடு (சென்னையிலிருந்து)

                       அரசு பஸ்    ஆம்னி பஸ்
பட்டுக்கோட்டை    296    1100
மதுரை                     357    1300
கோவை                    429    1199
நாகர்கோவில்         260     1444
ஊட்டி                        459       1749
திருநெல்வேலி        475    1650

- வெ.நீலகண்டன்