கோவக்கார அய்யனார்



சிலிர்க்க வைக்கும் கர்ண பரம்பரைக் கதை

பாரததேவி

மதுரை மீனாட்சி அம்மனுக்கு இரண்டு ‘கொடி மரங்கள்’ தேவைப்பட்டன. அவளுக்கு எப்போதும் வலது கையாயிருக்கும் அண்ணன், தம்பியான சின்ன ஓட்டக்காரனையும், பெரிய ஓட்டக்காரனையும் அழைத்து, அடர்ந்து கிடக்கும் வனங்களிடையே தேடிப் பார்த்து நல்ல ‘கொடி மரமாக’ இரண்டை வெட்டிக்கொண்டு வர உத்தரவிட்டாள்.

 தைரியமிக்க பலசாலிகளான சின்ன ஓட்டக்காரனும், பெரிய ஓட்டக்காரனும் கட்டுச் சோறு மூட்டையுடன் விடியும் முன்பே மதுரையை விட்டு புறப்பட்டு விட்டார்கள். வழியெங்கும் காடுகள்தான். அதனிடையே ‘கொடி மரத்தை’த் தேடி அலைந்தார்கள். தேடிய இடமெல்லாம் கோணல் மாணலான மரங்களும், உளுத்துப் போனவையும்தான் இருந்ததே தவிர, நல்ல மரம் கிடைக்கவே இல்லை.

பொழுது உச்சிக்கு வந்திருந்தது. அண்ணனுக்கும், தம்பிக்கும் பசி பொறுக்க முடியவில்லை. ஆறுகளிலும், ஓடைகளிலும் தண்ணீரை அள்ளி அள்ளிக் குடித்துக்கொண்டே நடந்தார்கள். எப்படியும் கொடி மரத்தைக் கண்டுபிடித்த பிறகுதான் சாப்பிடுவது என்ற வைராக்கியத்தோடு நடந்தார்கள், நடந்தார்கள், நடந்துகொண்டே இருந்தார்கள்.

ராஜபாளையத்திலிருந்து சுமார் எட்டு மைலில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அய்யனார் கோயில் பக்கமாக வந்தபோது அதிசயித்தார்கள். இதுவரை கடந்து வந்த வனங்களில் இல்லாத பசுமையும், அடர்வும், அழகும் இந்த வனத்தில் இருந்தது. அண்ணனுக்கும், தம்பிக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இப்படி அணுக் குறையாமல் இருக்கும் இந்த வனத்திற்கு அங்கே குடியிருக்கும் அய்யனார் சாமிதான் காரணம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

சின்ன ஓட்டக்காரன், ‘‘அண்ணே... ஆள் நுழைய முடியாத இந்தக் காட்டுக்குள்ள எப்படியும் உறுதியா கொடி மரம் கெடச்சிரும்ணே’’ என்று சொல்ல, பெரிய ஓட்டக்காரனும், ‘‘ஆமடா தம்பி... வா, ஒரு எடம் பாக்கி இல்லாம தேடுவோம்’’ என்று சொல்லிக்கொண்டு தேட ஆரம்பித்தார்கள்.

வனக்காடு மொத்தம் சுற்றி அலைந்து களைத்துப் போகும் நேரத்தில், பெரிய புதரின் அடர்வில் இரண்டு கொடி மரங்கள் எந்த முண்டும் முடிச்சுமில்லாமல் வேர் விட்டுக் கிளைத்திருந்தன. பெரிய, பெரிய மரங்களையெல்லாம் புறம் தள்ளி விட்டு வானத்தை நோக்கி நேராக நிமிர்ந்து வளர்ந்திருந்தன. அதைப் பார்த்த உடனே அவர்களுக்கு உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. இத்தனை நேரமும் அலைந்த அலைச்சலும், களைப்பும் காணாமல் போயின.

‘‘தம்பி, இந்நேரம் வரையில நாம அலஞ்ச அலச்சலுக்கு, அந்த மீனாட்சி அம்மனே நெட்டுக்குத்து நேரா இருக்கிற வைரம் பாஞ்ச கொடி மரத்த நம்ம கண்ணுல காமிச்சிட்டா... இந்த மரத்தப் பாத்த சந்தோஷத்துல எனக்கு வவுத்துப் பசியே அத்துப் போச்சு. அதனால, கொடி மரத்த வெட்டிப் போட்டுட்டு சாப்பிடுவோம்’’ என்று சொன்னான் பெரிய ஓட்டக்காரன்.

‘‘நானும் அப்பிடித்தாண்ணே நெனச்சேன்’’ என்றான் தம்பி. உடனே இருவரும் கக்கத்தில் இருந்த சோத்து மூட்டையை அங்கிருந்த ஒரு மரக்கிளையில் மாட்டிவிட்டு, இவ்வளவு நேரமும் தோளில் சுமந்திருந்த கோடாலியை எடுத்தார்கள். இடுப்பிலிருந்த துண்டை அவிழ்த்து இன்னும் இறுக்கமாக ‘தார்ப்பாச்சி’க் கட்டிக்கொண்டார்கள்.

‘‘தம்பி, நானு கெழக்கு திக்கமா நின்னு வெட்டுதேன், நீ மேக்குத் திக்கமா நின்னு வெட்டு... அப்பத்தேன் மரத்த பொக்குன்னு (சீக்கிரம்) வெட்டலாம். அது மட்டுமில்ல, நாம இன்னைக்குப் பொழுதுக்குள்ள மீனாட்சியம்மன்கிட்ட போயி சேந்துரணும். அப்பிடித்தேன் அந்த ஆத்தாகிட்ட வாக்கு கொடுத்துட்டு வந்துருக்கோம்’’ என்றவாறே இருவரும் கோடாலியை ஓங்க, அங்கே பளீரென்று மின்னல் அடித்தாற்போல ஓர் ஒளி பாய்ந்தது. அண்ணனும், தம்பியும் திடுக்கிட்டுப் போனார்கள்.

‘‘என்ன ஒளி அது?’’ என்று இருவரும் பதற்றத்தோடு திரும்பிப் பார்க்க, கிழவர் ஒருவர் வெள்ளை வேட்டியும், நரைத்து வெளுத்துப் போன தலையுமாக அவர்களின் எதிரில் நின்றிருந்தார்.

‘நம்மாலயே வர முடியாத இந்த வனத்துக்குள் இந்தக் கெழவன் எப்படி வந்தான்? வந்ததுமில்லாம எம்புட்டுத் தெம்பா நம்ம எதுருல வந்து நிக்கான்’ என்று அண்ணனுக்கும், தம்பிக்கும் ஆச்சரியத்தோடு கோபமும் முட்டியது.

‘‘ஏ... கெழவா, நீ எப்படி இந்த வனத்துக்குள்ள வந்த?’’ என்று தம்பிக்காரன் கேட்டவுடன் கிழவர் சிரித்தார்.‘‘நான் கேக்க நெனச்ச கேள்விய நீ கேக்கியே மவனே. சொல்லுங்க... நீங்க ரெண்டு பேரும் எப்படி இந்த வனத்துக்குள்ள வந்தீக? வந்ததுமில்லாம எதுக்காவ இந்த மரத்த வெட்டதுக்கு கோடாலிய ஓங்குதீக?’’ அண்ணனுக்கு முந்திக்கொண்டு சின்ன ஓட்டக்காரன் பதில் சொன்னான்.

‘‘நாங்க மதுரையில குடிகொண்டிருக்கும் மீனாட்சி அம்மனோட சேவகர்கள். அம்மனுக்கு ரெண்டு ‘கொடி மரம்’ வேணுமாம். அதுக்காக விடிஞ்சதிலருந்து வனம் வனமா தேடி அலைஞ்சிக்கிட்டு வாறோம். எங்கேயும் கெடைக்கல. இந்த வனத்துக்குள்ளதேன் கெடைச்சது. அதேன் வெட்டி எடுத்துட்டுப் போவலாமின்னு...’’ என்றதுமே கிழவர் குறுக்கிட்டார்.

‘‘பேரன்களா... இந்த வனம் அய்யனாரோட காவல்ல இருக்கு. இந்த வனத்திலிருந்து சிறு துரும்பு போனாக்கூட அய்யனாரு பொறுத்துக்க மாட்டாரு. அதனால போயி வேற எங்கேயாவது கொடி மரம் இருக்கான்னு தேடிப் பாருங்க!’’கிழவர் சொன்னதைக் கேட்டதும் அண்ணனுக்கும், தம்பிக்கும் ஆத்திரத்தில் உச்சி மண்டையெல்லாம் எரிந்தது. ‘‘ஏ கெழவா... இப்ப மருவாதயா இந்த ரக்க விட்டுப் போறியா...

இல்ல, இந்த மரத்தோட உன்னையும் சேத்துப் போட்டுத் தள்ளிருவோம்’’ என்று சொல்ல, கிழவர் கோபப்படாமல் மறுபடியும் சிரித்துக்கொண்டே சொன்னார்... ‘‘மறுக்காவும் சொல்லுதேன்... இந்த வனம் அய்யனாரு காவல்ல இருக்கு. ஒரு சின்னச் சுள்ளி போனாக்கூட அவருக்குப் பொறுக்காது. அதனால பேசாம போயிருங்க!’’

பெரிய ஓட்டக்காரன் ஓர் அடி எடுத்து வைத்து, கிழவரின் முன்னால் வந்து நின்றான். ‘‘அய்யனாரு, அய்யனாருங்கறீயே... எங்க இருக்காரு உங்க அய்யனாரு?’’
‘‘அதோ...’’ என்று அடர்ந்த வனத்துக்குள் சின்னதாய் இருந்த ஒரு கோயிலைக் காட்டினார் கிழவர். அந்தக் கோயிலைப் பார்த்த இந்த அண்ணனும், தம்பியும் இகழ்ச்சியாய் சிரித்தார்கள்.
‘சரி, உன் அய்யனார கும்புட ஆளுக வருவாகளா?’’

‘‘அதென்ன தம்பி அப்படி கேட்டுப்புட்டே... சுத்துப்பட்டுல இருக்க ஏழை, எளியவக... ஆடு, மாடு மேய்க்கிறவக... மொத்தப் பேரும் வருசம் ஒருக்கா அஞ்சாறு கெடாவோட வந்து பொங்க வச்சி, கெடா வெட்டி... பிள்ளைகளுக்கு மொட்டயெடுத்து, காது குத்தி, மருளாடி (சாமியாடிகள்) மேல என்ன வரவழைச்சி அவுக மூலமா என் வாக்குல என்ன வருதுன்னு... கேட்டுட்டுல்ல பக்தியோட போவாக’’ என்று சொல்ல, மீண்டும் இந்த அண்ணனும், தம்பியும் சிரித்தார்கள்.

‘வருசம் ஒருக்கா பூச நடக்குறதுக்கே உங்க அய்யனாரு இப்படி பொங்கிப் போயி திரியிதாரே... மதுரையில இருக்க எங்க மீனாட்சி நித்தப் பூசக்காரி. இருவத்தி நாலு பந்தமும், அறுவத்தி நாலு தீவமும், ராவுன்னு இல்லாம, பகலுன்னு இல்லாம எந்நேரமும் எரிஞ்சிக்கிட்டே இருக்கும். கோடான கோடி சனமில்ல அந்த அம்மன கும்புட்டுக்கிட்டு இருக்காக... பேச வந்துட்டான் பெருசா... போ, போயி போற காலத்துக்கு புண்ணியம் தேடு’’ என்று சொல்லி, அவரை விரட்டி விட்டு கோடாலியால் ஆளுக்கு ஒரு வெட்டு மரத்தை வெட்டினார்கள்.

இவர்களின் வெட்டு மரத்தில் விழுந்த உடன் அந்த வனமே அதிர்ந்தது. மரங்களெல்லாம் பெரிய புயல் காற்று வந்ததுபோல் ஆடின. மிருகங்கள் எல்லாம் ஆங்காரமாகச் சத்தமிட்டன. பறவைகளின் ஓலக்குரல் காதுகளைக் கிழித்தது. பூக்களின் வாசமும் அருவியின் குளிர்ச்சியுமாயிருந்த வனத்தில் இப்போது அனல் வீசியது.ஆனால், இவை எதையுமே கவனிக்காமல் அண்ணனும், தம்பியும் மரமே குறியாக வெட்டினார்கள்.

இவர்கள் வெட்ட வெட்ட... மரத்தில் ரத்தம் கொப்பளித்து ஆறாக ஓடியது. அதையும் கண்டுகொள்ளாமல் மரத்தை வெட்டிய சின்ன ஓட்டக்காரனுக்கும், பெரிய ஓட்டக்காரனுக்கும் காய்ச்சல் தீப்பொறியாய் பொறிந்தது. கண்கள் இரண்டும் நெருப்புத் துண்டங்களாகக் கனன்றன. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டி, முறுக்கு விட்ட கயிறாய் துவண்டு போக, ‘அங்கேயே விழுந்து விடுவோமோ?’ என்று அவர்களுக்கு பயமாக இருந்தது.

ஆனாலும், ‘கொடிமரத்தோடு இன்னிக்கு ராத்திரிக்குள் வந்து சேர்ந்து விடுவோம்’ என்று மீனாட்சி அம்மனுக்கு கொடுத்த வாக்குக்காக எப்படியோ சமாளித்து மரத்தை வெட்டிச் சாய்த்து விட்டார்கள். ஆனால், அவர்களால் அந்த மரத்தை அசைக்கக் கூட முடியவில்லை. அதனால் ‘இனியும் தாமதிக்க முடியாது’ என்று இருவரும் தள்ளாடியவாறே ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல நடந்தார்கள்.

பேச்சு மூச்சில்லாமல் தன் காலில் நெடுஞ்சாங்கிடையாக வந்து விழுந்து கிடந்த இருவரையும் பார்த்து மீனாட்சி அம்மன் அதிர்ந்துதான் போனாள். மலையே சரிந்து விழுந்தாலும்கூட தாங்கிக்கொள்கிற சக்தி படைத்த இவர்களுக்கு என்ன ஆனது? அவர்களை எழுப்பி ‘என்ன நடந்தது?’ என்று கேட்டாள். அவர்களும் நடந்த விஷயத்தை திக்கித் திணறி சொல்லி விட்டு மீண்டும் மயங்கிப் போனார்கள்.

மறுநாள் விடியற்காலையிலேயே தீப்பறக்கும் செந்நிறக் குதிரையில், அய்யனாரின் சேவகன் மீனாட்சி தேவியின் முன்னால் வந்து நின்று இருகரம் கூப்பி வணங்கினான்.அப்போது ஊர்வலத்துக்காக புறப்பட்ட மீனாட்சி தேவி, தன் கால் கொலுசு மணிகள் குலுங்க, ஓர் அடி பின்வாங்கியவாறு, ‘‘யாரப்பா நீ?’’ என்று கேட்டார்.

அந்தப் பணியாளும், ‘‘தாயே, நேற்று கொடிமரம் வெட்ட வந்த தங்களின் சேவகர்கள், எங்களின் தெய்வமான அய்யனாருக்குரிய ‘கொடி மரத்தை’ சொல்லச் சொல்ல கேளாமல் வெட்டி விட்டார்களாம். இதனால் கோபம் கொண்ட அய்யனார் அவர்கள் இருவரையும் அங்கேயே காவு வாங்கி விட்டாராம்.

அதனால், அவர்கள் இங்கு இருப்பதில் இனி எந்த பிரயோசனமும் இல்லை. திரும்பவும் அவர்களை அங்கேயே கூட்டி வரும்படி அய்யனாரின் கட்டளை. அதை தங்களிடம் சொல்லிவிட்டு அந்த இருவரையும் கூட்டிப் போக அடியேன் வந்திருக்கிறேன் தாயே’’ என்றான்.

சேவகன் சொன்னதைக் கேட்டதும் மீனாட்சி அம்மன் ஆக்ரோஷத்தில் வெகுண்டாள். ‘‘அது யாரடா உங்க அய்யனார்? என் ஆட்களை இப்படி பலவீனப்படுத்தி அனுப்பியபோதே அவனுக்கு நேரம் சரியில்லையென்று நினைத்தேன்.

 இப்போது அவனுக்காக நீ வேறு வந்திருக்கிறாயா? போ, போய்ச் சொல்லு! இங்கிருந்து ஒரு ஈ, காக்கை கூட அங்கே வராது. அதுமட்டும் இல்லை... இவர்கள் அந்த வனத்தில் வெட்டிப் போட்ட கொடிமரம் இரண்டும் ஒரு நாழிகைக்குள் என் ஆலயத்துக்குள் வந்து சேர வேண்டும், போ’’ என்று அவனை அனுப்பி வைத்தாள் மீனாட்சி.

தன் சேவகன் வந்து சொன்ன விஷயத்தைக் கேட்ட அய்யனார் கோபத்தில் ஆடிப் போனார். ‘‘நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும்’’ என்று உறுமினார்.மறுநாள் மதுரை நகரத்தில் காலரா பரவியது.

குஞ்சு, குளுவானிலிருந்து பெரிய ஆட்கள் வரை கொத்துக் கொத்தாய் ஆட்கள் மடிந்து மண்ணில் கிடந்தார்கள். மீனாட்சி அம்மனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது, இது அய்யனாரின் வேலை என்று. ‘இதற்கு என்ன செய்யலாம்’ என்று யோசிக்கும் முன்பே அதற்கு மறுநாளும் காலராவில் நிறைய ஆட்கள் செத்து மடிந்தார்கள்.

மீனா ட்சி தேவி பதறினாள். அய்யனாரைப் போலவே அவளுக்கும் பழி வாங்கத் தெரியும். ஆனால், தான் ஒரு ‘தாய்’ ஸ்தானத்தில் இருப்பவள். உயிர்களைக் காத்து அருள வேண்டுமே தவிர, கொன்று குவிக்கக் கூடாது என்று நினைத்தாள். சின்ன ஓட்டக்காரனையும், பெரிய ஓட்டக்காரனையும் அய்யனாரிடமே திருப்பி அனுப்பி வைத்தாள்.

இந்த அய்யனார் கோயில் ராஜபாளையத்திற்கு மேற்கே 16 கி.மீ தொலைவில், முடங்கியாறு சாலையில் உள்ளது. அய்யனாரின் பக்கத்திலேயே இந்த அண்ணனும், தம்பியும் வீற்றிருக்கிறார்கள். அய்யனாரைக் கும்பிடப் போகிறவர்கள் இவர்களையும் கும்பிட்டு வருகிறார்கள்!

படங்கள்: டி.ஏ.அருள்ராஜ்