இதுவரை பார்க்காத இரட்டை விஐய்!



ஏ.ஆர்.முருகதாஸ் எப்போதும் ஓர் ஆச்சரியம்! தமிழ்கூறும் நல்லுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆனால், ‘கத்தி’யின் இறுதிப் பரபரப்பில் சாந்தமாய் உட்கார்ந்திருக்கிறார் முருகதாஸ். இந்தியாவின் டாப் டைரக்டர்களில் ஒருவர். தமிழின் நம்பர் 1 இயக்குநர். கோடிகளில் அதிரும் சம்பளம், கொஞ்ச காலம் முன்பு வரை இந்தத் தலைமுறை எதிர்பாராதது. நம்மவர்களை நிராகரித்த இந்தித் திரையுலகம், இவரின் கால்ஷீட்டிற்காக காத்துக் கிடக்கிறது. ‘கத்தி’ பற்றி நீண்டது இந்த உரையாடல்...

‘‘இப்படியொரு பரபரப்பை ‘கத்தி’தான் தூண்டியிருக்கிறது...’’‘‘ ‘கத்தி’ முடிந்துவிட்டது. எனக்கு எதிர்பார்ப்பு புரிகிறது. ‘துப்பாக்கி’யை விட அதிக உழைப்பு. அதற்கான பலனை அனுபவிக்க முடியும்னு நினைக்கிறேன். ஏதோ நாலு வார்த்தை படத்தைப் பற்றி சொல்லியாகணுமே என்பதற்காக நான் சொல்லலை. நான் நேரடியாக, ‘கத்தி’யை மக்கள் பார்வைக்கு வச்சிடணும்னு நினைச்சேன். மக்களுக்கு இது ஒரு நல்ல படமா இருக்கும்!’’‘‘ ‘கத்தி’ன்னா ஏதோ வன்முறை, பயங்கரம், ஆக்ஷன்னு பல விதங்களில் பயமுறுத்துதே?’’

‘‘அப்படியெல்லாம் பயப்பட வேண்டாம். ‘கத்தி’ மனித நாகரிகத்தின் முதல் கண்டுபிடிப்பு. ஆதி மனிதர்கள் அதை உணவு தேட பயன்படுத்தி இருக்காங்க. பாதுகாப்புக்குக் கூட அது மனிதனுக்குத் துணையா இருந்திருக்கு. இன்னும் சரியாச் சொன்னால், ‘துப்பாக்கி’க்கு மாஸ் ஃபீல் வந்தது. ‘கத்தி’க்கு ஒரு க்ளாஸ் ஃபீல் வரும். நான் சினிமாவுக்கு வந்து 12 வருஷமாச்சு. நிறைய படங்கள் செய்திருக்கேன். அதில் கணிசமான வெற்றி கூட இருக்கு.

ஆனாலும் எங்கே பார்த்தாலும் மக்கள், ‘ ‘ரமணா’தான் உங்க பெஸ்ட்’னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. அந்த உயரத்தில் நானே ஏன் அடுத்த படம் செய்யக் கூடாதுன்னு நினைச்சேன். அதுதான் ‘கத்தி’. நீங்க வந்து கேட்டதுக்கு நிறைய சொல்லலாம்... இப்ப எதுவும் சொல்ல முடியலை. சொன்னா, ஏதோ ஒண்ணைப் புடிச்சுக்கிறாங்க. என் பெயரைச் சொல்லி ‘முருகா’ன்னு கூட சொல்ல முடியலை.

‘முருகனை அவமானப்படுத்துறார் முருகதாஸ்’னு சொல்லிடுறாங்க. ‘எங்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டு’ன்னு பத்து பேர் வந்துடுறாங்க. அப்படியெல்லாம் ஒரு சினிமாவை எல்லாரும் பாக்கறதுக்கு முன்னாடி பந்தி வைக்க முடியாது!’’‘‘நீங்க இதுவரை டபுள் ரோல் படம் பண்ணினதில்லை...’’

‘‘எஸ். எனக்கே இது புதுசு. ஆனா, இதில் விஜய் மெனக்கெட்டு இருப்பதும் புதுசு. குரல், தோற்றம், மேனரிசங்களில் ரொம்பவும் அக்கறையோடு மின்னுகிறார். இதில் ஒரு விஜய் காமன் மேன்... இன்னொரு விஜய் ரொம்ப ஸ்பெஷல். ‘துப்பாக்கி’, ஃபாஸ்ட் த்ரில்லர்... வேகவேகமாக நகரும். ‘கத்தி’, கனமான கதை. விழிப்புணர்வை அடிப்படையா வச்சிருக்கோம். ஒரு பத்து வருஷத்துக்காவது ‘கத்தி’யோட நினைவு எல்லாருக்கும் இருக்கும். இதுவரை விஜய்யை இப்படி நீங்க பார்த்திருக்க முடியாது.

விஜய்யோடு முதல் படம் பண்ணும்போது, ‘இவர் இப்படி இருப்பார், இப்படி அவரை வச்சுப் பண்ணலாம்’னு எதுவும் எனக்குத் தெரியாது. இப்ப அவரை நல்லா புரியும். அவரை எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. எனக்கு விஜய் படங்களிலிருந்து நிச்சயம் ‘கத்தி’ மாறுபடணும். குறிப்பா, ‘துப்பாக்கி’யை விடவும் நல்லா இருக்கணும்னு நினைச்சேன். அது நிறைவேறி யிருக்கு!’’‘‘சமந்தா, உங்க டைரக்ஷனில் முதல் தடவை...’’

‘‘சமந்தா அருமையான ஆர்ட்டிஸ்ட். அடுத்தடுத்து பிரபலமா வரும்போது, அடுத்த இடத்திற்கு முன்னேறும்போது நிறைய குணங்கள் மாறும். அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சமந்தாகிட்ட. இருக்கிற இடத்தை சுமுகமா வச்சிருக்கிறது ரொம்ப முக்கியம். அவங்க வொர்க் பண்ணுகிற விதத்தைப் பார்க்கும்போது இன்னும் அவங்க கேரக்டரை விசாலப்படுத்தணும்னு தோணுது. அதை நான் செய்திருக்கேன். சமந்தாவிற்கு இது மிகப்பெரிய வெற்றிப்படம்!’’‘‘அனிருத்துக்கு மாறிட்டீங்க?’’

‘‘எனக்குப் பழக்கப்பட்ட இசையமைப்பாளர், ஒரு காட்சிக்கு எப்படி இசையமைப்பார்னு எனக்குத் தெரியும். சும்மா மாத்திப் பார்ப்போமேன்னு செய்தேன். புது விதமான இசையும், கேமராவும் நம்ம படத்துக்கு வேற லுக்கை கொண்டு வந்திருக்கு. நான் வச்ச நம்பிக்கைக்கு நியாயம் செய்திருக்கிறார். துடிப்பான இசைன்னு சொல்வேன்!’’
‘‘ ‘ஐ’, ‘பூஜை’ வர்றாங்களேனு கவலைப்பட்டீங்களா?’’

‘‘நமக்குள்ளே ஒரு புரிதல் வேணும். ‘இந்த விடுமுறைக்கு நீங்க வாங்க, இந்த சனி, ஞாயிறை நாங்க எடுத்துக்கறோம்’னு பரஸ்பரம் செய்துக்கணும். சினிமாவில், ‘நானும் வருவேன்’னு அடம்பிடிக்கிறதெல்லாம் தேவையில்லாத விஷயம். முன்னாடியெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன்னு பத்து படங்களுக்கு மேல் ஒரே நேரத்துல வந்திருக்கு. ஒண்ணும் செய்ய முடியாது. நல்ல படத்தை ஜனங்க ரசிக்கப் போறாங்க. அவங்களுக்கு எல்லாம் தெரியும்!’’

‘‘அடுத்து சோனாக்ஷியை வைத்து களம் இறங்குறீங்க..?’’

‘‘எனக்கு ஹீரோ இல்லாம ஒரு படம் பண்ணணும்னு ஆசை. ஒரு படம் வெற்றி பெற்றதுமே, அடுத்த தடவை மறுபடியும் வேற ஒரு ஹீரோகிட்ட போயிடுவேன். இப்ப, ‘கத்தி’க்கு முன்னாடியே சோனாக்ஷி பட ஸ்கிரிப்ட் ரெடி. கொஞ்சம் சினிமா அப்ரோச்சை மாத்திக்கணும்னு ஆசை!’’‘‘நீங்க வெற்றிகரமான கமர்ஷியல் டைரக்டர்தான்... ஆனால், மிகச் சிறந்த இயக்குநர்னு பெயர் வாங்க ஆசைப்படலையா?’’‘‘ ‘கத்தி’ பார்த்துட்டு இந்தக் கேள்வியை கேளுங்க சார்!’’

நா.கதிர்வேலன்,
மை.பாரதிராஜா