பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ அருண் 29

ஒலியின் வழியே...‘‘ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு துயரமான கதை இருந்தது. தெருக்களில் படுத்துறங்கியவர்களுக்கும், பரந்த   வெளிகளில் தங்கியிருந்தவர்களுக்கும், விலையுயர்ந்த   வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது. நடந்து செல்பவனும் மகிழ்ச்சியாக இல்லை.

 ஏனெனில் அவனுக்கு வசதியான புதிய செருப்புகள் இல்லை. காரில் செல்கிறவனும் திருப்தியாக இருக்கவில்லை. ஏனெனில், புதிய மோஸ்தர் கார் வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தான். உண்மையில் எல்லாப் புகார்களும் உண்மையானவை, நியாயமானவை.’’

- சதத் ஹசன் மாண்டோ


(தமிழில்: உதயஷங்கர்)

படம்: ராஜாங்கத்தின் முடிவு  இயக்கம்: டி.அருள் எழிலன் 
நேரம்: 25.28 நிமிடங்கள்      ஒளிப்பதிவு: விஜய் திருமூலம்
இசை: லக்ஷ்மி நாராயணன்   கதை: சதத் ஹசன் மாண்டோ
பார்க்க: http://arulezhilan.com/?p=177

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இரு மதத்தினரிடையே எழுந்த உரிமைப்போராட்டங்களும், மதக்கலவரங்களும் அதன் வழியே கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் எண்ணிலடங்காதவை. பலரும் தங்கள் மனிதத்தைத் தொலைத்திருந்த அந்தத் தருணத்தில், அவர்களிடம் மிச்சமிருக்கும் குறைந்தபட்ச மனிதத்தையாவது மீட்டெடுக்க வேண்டிய அவசியம் எல்லா கலை சார்ந்த ஊடகங்களுக்கும் இருந்தது. நேரடியாகவும், மறைமுகமாகவும் இதில் பாதிக்கப்பட்ட மக்களே, தங்களுக்குள் இருந்த படைப்பாளிகளைக் கண்டுணர வேண்டிய நேரமாக அது இருந்தது.

இந்தக் கலவரங்களின் பின் வழிந்த குருதியையும், அது விட்டுச் சென்ற குரூரத்தின் நீச்ச வாசத்தையும், தன்னுடைய கதைகளின் வழியே பதிவு செய்தவர் சதத் ஹசன் மாண்டோ. அவரின் முக்கியமான கதைகளில் ஒன்று ‘கிங்டம்’ஸ் எண்ட்’. தமிழில் யுவன் சந்திரசேகரால் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்தச் சிறுகதை, பின்னர் அருள் எழிலன் இயக்கத்தில் ‘ராஜாங்கத்தின் முடிவு’ என்கிற குறும்படமாக வெளிவந்தது.

தொடர்ந்து வாசிப்பதும், தேசாந்திரியாகச் சுற்றுவதுமாக இருக்கும் ரவி, எந்த வேலையிலும் விருப்பமற்றும், சராசரி வாழ்க்கையை வாழும் எண்ணங்களிலிருந்து விடுபட்டும் வாழ்கிறான். காரணம், எந்தக் கட்டுப்பாடுகளும் அவனுக்குப் பிடிப்பதில்லை.

நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, தெருவோரங்களில் இரவு தூக்கத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் ஊர் சுற்றத் தொடங்குவான்; அல்லது படிக்கத் தொடங்கி விடுவான். நண்பர்கள், உணவு, இருப்பிடம் என எதிலும் பிரச்னை இல்லை. ஆனால் அவனது வாழ்வில் ஒரு பெண் இல்லாதது குறித்த பரிதவிப்பு மட்டும் இருக்கிறது.

ரவியின் நண்பன் ஒருவன், வியாபாரத் தேவைக்காக வெளியூர் செல்ல நேர்கிறது. தான் திரும்பி வரும் வரை தன்னுடைய அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ளுமாறு ரவியிடம் சொல்கிறான். ஒருநாள் அலுவலக தொலைபேசி ஒலிக்கிறது. தொலைபேசியின் எண்ணைச் சொல்லிவிட்டு ரவி பேசுகிறான். ‘‘அய்யய்யோ... ராங் நம்பர்’’ என்று பதறுகிறாள் எதிர்முனையில் இருந்த பெண். ‘‘அதனால் என்ன? பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டு ரவி அழைப்பைத் துண்டிக்கிறான். மறுநாளும் தொலைபேசி ஒலிக்கிறது.

 அதே பெண் குரல். இந்த முறை இருவரும் சிறிது நேரம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு பேசத் தொடங்குகிறார்கள். எதிர்முனையில் பேசும் பெண், ரவியுடன் தொடர்ந்து பேசுவதற்கு விருப்பப்பட்டு, தினசரி அவனோடு உரையாடுகிறாள். ரவி தன்னைப் பற்றியும், தனக்கு வேலை இல்லாதது பற்றியும் அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறான். ஆனாலும், அந்தப் பெண் தினமும் பேசுவதைத் தொடர்கிறாள்.

‘‘பிளாட்பாரத்தை விட, இந்த அலுவலகம் எனக்குக் கொஞ்சம் வசதியாகத்தான் இருக்கிறது. மின்விசிறி இருக்கிறது, தொலைபேசி இருக்கிறது, ஒரு நீண்ட டேபிள் இருக்கிறது, படுத்துக்கொள்ள முடிகிறது’’ என்று வெள்ளந்தியாக ரவி தன் உரையாடலைத் தொடர்கிறான். அவளும் சோர்வடையாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். ரவிக்காக அவள் பாடவும் செய்கிறாள். பாடலைக் கேட்டு கொஞ்சம் இறுக்கமாக உணரும் ரவி, ‘‘அப்புறமா பேசலாம்’’ என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான். மறுநாள் அவளது அழைப்பிற்காக ஏங்கித் தவிக்கிறான்.

மாலை அவள் அழைக்கிறாள். ‘‘ஏன் காலையில இருந்து கூப்பிடவே இல்லை’’ என்று ரவி கோபப்படுகிறான். உரையாடல் தொடர்கிறது. வெளியூர் சென்றிருந்த ரவியின் நண்பன், இரண்டு நாட்களுக்குள் திரும்பி வருவதாக தொலைபேசியில் சொல்கிறான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள், உரையாடல் எல்லாம்தான் இதனை ஆகச் சிறந்த கதையாக மாற்றுகிறது. எதிர்முனையில் பேசும் பெண்ணின் உருவத்தை இறுதி வரை காட்டாமல், கடைசி வரை ஒரே ஒரு கதாபாத்திரம், ஒரு அறையில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை மட்டும் சினிமாவாக உருவாக்குவதற்கு நிறைய தன்னம்பிக்கை வேண்டும்.

Buried’ (புதைக்கப்பட்டவன்) என்கிற அமெரிக்கத் திரைப்படத் தில், முழுக்க முழுக்க ஒரே ஒரு கதாபாத்திரம், ஒரு சவப்பெட்டிக்குள் சிக்கிக்கொண்டு படும் அவஸ்தைகளை மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இடையூடாக, அமெரிக்க அரசின் கையாலாகாத்தனத்தையும், மனிதாபிமானமற்ற செயல் பாடு களையும் விமர்சிக்கவும் செய்கிறது   அந்தப்   படம்.

பரீட்சார்த்த முயற்சியாகவும், இதுபோன்ற சமூக அக்கறையையும் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது ‘ராஜாங்கத்தின் முடிவு’ குறும்படம். சிதைந்துபோன சமூகத்தின் இருவேறு பாலினங்களுக்குள்ளான ஆற்றாமைகளைக் குறியீடுகளின் வழியே வெளிப்படுத்துகிறது. புற வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இந்த உரையாடலின் வழியே பதிவு செய்கிறது.

தன் நண்பன் விரைவில் வரவிருப்பதால் இனி அலுவலகத்தில் நீண்ட நாட்கள் வசிக்க முடியாது என்ற உண்மையும், தனக்குள் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அந்தப் பெண்ணின் குரலை இனியும் தொடர்ந்து கேட்க முடியாது என்கிற பரிதவிப்பும், ஆரோக்கியமான வாழ்க்கையில்லாததன் விளைவாக ஏற்படும் உடல் உபாதைகளும் சேர்ந்து வதைக்க, மரணம் அவனைத் தழுவிக்கொள்ளும்.

பெரிய அளவில் எவ்வித தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலகட்டத்திலும், ரவியின் மரணத்தை அத்தனை நேர்த்தியாகப் படம் பிடித்திருப்பார்கள். ரவி இறந்த பிறகும் அவளின் குரல் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க, திரையோடு பார்வையாளனின் மனதையும் இருள் கவ்விக் கொள்கிறது.

முதல் காட்சியில், ரவிக்கு ஒரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அது தவறான அழைப்பாக இருக்கிறது. அடுத்த காட்சியில், ரவி யார்... அவன் எப்படிப்பட்டவன்... என்பதை வாய்ஸ் ஓவரில் விவரிக்கிறார்கள். தொடர்ச்சியாக, தொலைபேசி ஒலிப்பது, இருவரும் பேசுவது என்று இல்லாமல், இருவருக்குமான அழைப்புகளுக்கிடையில் நிகழும் சில சம்பவங்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். சினிமா ஒரு காட்சி ஊடகம்.

 ஆனால் சில தொடர் உரையாடல்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில், எப்படி சினிமாவை காட்சி ஊடகமாகவே இருத்தி வைப்பது என்பதற்கு இந்தக் குறும்படத்தில் சில காட்சிகளே சாட்சி. ஒரு இரவில் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்போது, ரவி மிகப் பொறுமையாக உடை மாற்றிக்கொண்டு, முகத்தைக் கழுவி விட்டு, தாகம் தீர தண்ணீர் அருந்தியபின்னர் தொலைபேசியை எடுக்கும் காட்சியும்,

அந்தப் பெண்ணின் அழைப்பை எதிர்பார்த்து நீண்ட நேரம் காத்திருக்கும்போது புகைபிடித்தபடி கோபத்தை தன்னுடைய முகத்தில் கொண்டுவரும் காட்சியும் மிக நேர்த்தியாக திரையில் வந்துள்ளன. இந்தக் காட்சிகள் மட்டும் இல்லையென்றால், குறும்படம் ஒருவகை நாடகத் தன்மைக்கு ஆட்பட்டிருக்கும். படத்தின் இறுக்கத்தை ஆங்காங்கே ஒலிக்கும் இசைதான் தளர்த்துகிறது.

பிளாட்பாரத்தை விட, இந்த அலுவலகம் எனக்குக் கொஞ்சம் வசதியாகத்தான் இருக்கிறது. மின்விசிறி இருக்கிறது, தொலைபேசி இருக்கிறது, ஒரு நீண்ட டேபிள் இருக்கிறது...தன் தந்தையின் ‘சொந்த மதத்திற்கு எதிரான நடவடிக்கை’யால், தொடர்ந்து தான் படித்த பள்ளியிலும் புறக்கணிப்பிற்கு உள்ளாகி யிருந்த அருள் எழிலனுக்கு சொந்த ஊர் நாகர்கோவில். பள்ளியின் புறக்கணிப்பால் படிப்பை மறந்தவர், தொடர்ந்து பல்வேறு நூலகங்களில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பள்ளிக் காலத்தில் ஒரு சிற்றிதழில் தான் படித்த இந்தச் சிறுகதையை பின்னர் குறும்படமாக எடுத்திருக்கிறார். பெரிய செலவுகள் எதுவும் இல்லாமல், ஐந்தாயிரம் ரூபாய்க்குள் எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம், பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பரிசுகளும் பெற்றிருக்கிறது. ஒரு பத்திரிகையாளராக ‘ஹியூமன் ஸ்டோரி’ வகையிலான கட்டுரைகள் எழுதுவதில் பெயர் பெற்றவர் அருள் எழிலன்.

(சித்திரங்கள் பேசும்...)

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி