ஃபேக் ஐ.டி இல்லாட்டி ட்ராஜெடி!



ஃபேஸ்புக் அடிமைகள் நாங்க

‘எவன்டி உன்னப் பெத்தான்... அவன் கைல கெடச்சா செத்தான்’ங்கிற ரேஞ்சுக்கு நாங்க இப்ப செம்ம கடுப்பா இருக்கறது, நம்ம மார்க் மேலதாங்க. நோ நோ... இது எக்ஸாம்ல போடுற மார்க் இல்ல. எக்ஸாமுக்கே போக விடாம பண்ற மார்க். அதாவது, மிஸ்டர் மார்க் ஸுக்கர்பெர்க். ஃபேஸ்புக்கை பெத்த ‘பெத்த’ மனுஷன் இவருதான்!

 ஃப்ரெண்ட் கேமரால மூஞ்சி பார்த்து தலை சீவிக்கிற தலைமுறை இது. இப்ப போயி, மனிதம், கலாசார வேர், பண்பாட்டு விழுமியம்னு நாங்க லெக்சர் கொடுக்க வரல. ஆனா, பேஸிக் லைஃப்னு ஒண்ணு இருக்கே... அதை பேயாட்டம் புடிச்சி ஆட்டுதுங்க இந்த ஃபேஸ்புக்.

சொன்னா நம்ப மாட்டீங்க... நானெல்லாம் ஒழுங்கா பல்லு வௌக்கியே ஒன்றரை வருஷம் இருக்கும். ஃபேஸ்புக் ஸ்மைலில கப்பு தெரியாதுங்கற தைரியம். சரியா சாப்பிட முடியல, தூங்க முடியல, யாரோடவும் சிரிச்சிப் பேச முடியல... 80ஸ் படங்கள்ல வர்ற லவ் சிம்ப்டம்ஸ் எல்லாம் எங்களுக்கு இருக்கு. நல்லாத்தான் பேசிட்டிருப்போம்... திடீர்னு போன்ல ‘டிங் டிங்’னு ஒரே ஒரு ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் வந்தா போதும்...

உலகத்துக்கும் எங்களுக்கும் கனெக்ஷன் கட். இப்ப எல்லாருக்கும் மினிமம் 2000 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனாலும், செல்லும் கையுமா தனித்தனியா சுத்துறதே தலையெழுத்தாகிடுச்சு. எதிர்ல வர்ற பைக்கை பாக்குறமோ இல்லையோ... நேத்து போட்ட ஸ்டேட்டஸ்க்கு லைக்கைப் பார்த்துக்கிட்டேதான் ரோட்ல நடக்குறோம். தெரியாம செய்யல... எங்களுக்கு வேற வழி இல்ல!

நாங்களும் ஆரம்பத்துல அழகான பொண்ணுங்களுக்கு ஆறேழு கமென்ட் போடுற அல்லக்கையா தான் இருந்தோம். ஆனா, எங்க போட்டோவுக்கும் லைக்ஸ் குவிஞ்சப்போதான் ‘பார்றா... பாசக்காரப் பயபுள்ளைகள’ன்னு இதுக்குள்ள ஆழமா இறங்கிட்டோம். ‘‘நேத்து சும்மா தூங்கி எழுந்த மூஞ்சோட ஒரு செல்ஃபி போட்டேன் மச்சான்...

நூத்தம்பது லைக்ஸு! அப்படி என்கிட்ட என்ன இருக்குன்னே தெரியல!’’னு இப்பதான் ஒரு மேகி தலையன் போனை போட்டு இம்சையக் குடுத்தான். கெட்ட கெட்ட வார்த்தையில திட்டணும்னு மனசுல தோணிச்சு. ஆனா, செய்யலை. ஏன் தெரியுமா? நாளைக்கே நானும் அவனுக்கு போனடிச்சி இதே மாதிரி இம்சை கொடுப்பேன். அப்ப அவன் என்னைக் கலாய்ச்சுடக் கூடாது பாருங்க.

சரி, எங்களுக்கெல்லாம் விழுற லைக்ஸ் நிஜமான்னு கேட்டா, சான்ஸே இல்ல. ஃபேஸ்புக்ல இப்ப எல்லாமே கிவ் அண்ட் டேக் பாலிஸி தான். சொந்தக்காரங்க கல்யாணத்துல செய்முறை பிரச்னை வருமே... அதே மாதிரிதான் இங்கேயும். ‘உனக்கு நான் லைக் போட்டேன்ல... சூப்பர், வாவ், கலக்கல்னு கமென்ட் போட்டேன்ல... நீ ஏன் எனக்குப் போடலை’ன்னு பர்சனல் மெசேஜ்ல பிறாண்டுவானுங்க. இப்ப அந்த மேகி தலையனுக்கு வந்த நூத்தம்பது லைக்கும் தானா சேர்ந்தது இல்ல...

தினம் தினம் கண்ணு முழிச்சி கண்ணு மண்ணு தெரியாம லைக் போட்டு அவனா சேர்த்தது. அவன் மட்டுமில்ல... நாங்க எல்லாருமே ஆளுக்கொரு லைக் கூட்டத்தை அடியாள் மாதிரி வளர்த்துக்கிட்டிருக்கோம். அதுல யாராவது ஒரு ஸ்டேட்டஸ் போட்டா... அடுத்த நிமிஷம் படிக்காமலே அதுக்கு நாம லைக் கொடுத்தாகணும். இல்லாட்டி அடியாளுல ஒரு தடியாளை இழந்துடுவோம். அந்தப் பதற்றம்தான் எங்களை செல்லும் கையுமாவே அலைய வைக்குது.

நம்ம கதை இப்படின்னா, பொண்ணுங்க மத்தியில லைக்ஸ் ஒலிம்பிக், லைக்ஸ் தேர்தல்... ஏன், லைக்ஸ் போரே நடக்குது. இப்ப ஒரு பொண்ணுக்கு போரடிக்குதுன்னு வைங்க... அவ
ஃப்ரெண்ட்ஸுக்கு போன் போட்டு, ‘சே, இந்த பசங்களோட ஒரே டார்ச்சர். என் போட்டோவுக்கு எக்கச்சக்கமா லைக்ஸ் கொடுத்து ஜொள்ளு விடுறானுங்க பாரேன்... இதை எப்டி ப்ளாக் பண்றது?’ன்னு என்னவோ அது தனக்குப் பிடிக்காத மாதிரியே பீத்திக்குவா. இதுல மறுமுனை டென்ஷனாகும்.

‘எனக்கு எவ்ளோ லைக்ஸ் விழுதுன்னு காட்டறேன்டி’ன்னு அடுத்த நாளே அதுவும் ப்ரொஃபைல் பிக்சரை மாத்தும். அவளுக்கு விழுந்த 150 லைக்ஸ்ல ஒண்ணு இவளுக்கு கம்மியா விழுந்தாலும் போச்சு...   Cold warல   செருப்பு வார் அந்துரும். இந்த இடத்துலதான் ஃபேக் ஐ.டின்னு ஒரு கிருமி உள்ளே வருது!

ஃபேக் ஐ.டி பத்தி ஹாரி பாட்டர் ஸைஸுக்கு ஒரு புக்கே எழுதலாம்ங்க. ‘அடடே... இன்னிக்கு சண்டே’ங்க்ற மாதிரி மரண மொக்கையா ஒரு ஸ்டேட்டஸ் போட்டு, அதுக்கு எவனும் லைக் போடாட்டி ஒருத்தன் கையில எடுக்குற அல்டிமேட் ஆயுதம், ஃபேக் ஐ.டி. அதாவது, ஒரு கற்பனை பேருல யாருன்னே தெரியாம நாம உருவாக்குற இன்னொரு ஃபேஸ்புக் ஐ.டி.

 இதை வச்சி நம்மளை நாமே பாராட்டிக்கலாம், வாழ்த்த வயதில்லைன்னு வணங்கிக்கலாம், நம்ம ஃபிகருக்கு தெரியாம அவ ஃப்ரெண்ட்ஸை ‘லைக்’ பண்ணலாம், போக்கிரியாகி எல்லா பொண்ணுங்களையும் ‘போக்’ பண்ணலாம் (‘Poke’னா சும்மா டச் பண்றது). அது மட்டுமில்ல... நமக்கு லைக் போடாதவன் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் ‘அதில் பொருட்குற்றம் இருக்கிறது புலவரே’ன்னு புகை போட்டு பகை ஊதலாம்.

இப்படி ஃபேஸ்புக்ல கிளம்புற கமென்ட் பஞ்சாயத்து, சில சமயம் 300 கமென்ட்டையெல்லாம் கூட தாண்டும். எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு, ஒரு சண்டே காலைல 8 மணிக்கு, ‘இன்னிக்கு நான் எங்க வீட்டை க்ளீன் பண்ணப் போறேன்’னு ஸ்டேட்டஸ் போட்டா.

 வழக்கம் போல அதுக்கு லைக்ஸும், ஆல் தி பெஸ்ட் (பெருக்கித் துடைக்கிறதுக்கா?!) கமென்ட்ஸும் வந்து விழுந்துச்சு. திடீர்னு அவளோட எதிர்ப்புக் குழு ஒண்ணு கிளம்பிச்சி. ‘பொம்பளைங்க வீட்டை க்ளீன் பண்றது சரியா? இல்ல, பெண்ணடிமைத்தனமா?’ன்னு ஆரம்பிச்ச கமென்ட்ஸ் கடைசியில, ‘நீதான் நவீன காலப் பெண்களுக்கு எதிரி’ங்கறதுல போய் நின்னுச்சு.

ஒரு கட்டத்துல அவ ஆதரவுக் குழுவுக்கும் எதிர்ப்புக் குழுவுக்கும் பிரச்னை பத்திக்கிச்சி. பசங்க சில பேர் கேப்ல புகுந்து, ‘ஆமாண்டா, பொண்ணுங்கன்னா இப்படித்தாண்டா இருக்கணும். இப்ப என்னான்றீங்க?’ன்னு ஹீரோவாக ட்ரை பண்ணாங்க.

 இதுல நியூஸ் சேனல் மாதிரி, சம்பந்தம் இல்லாதவனெல்லாம் கட்டம் கட்டமா வந்து கருத்து சொல்றான். கடைசியா எல்லாத்துக்கும் சாஷ்டாங்கமா ஒரு வணக்கம் போட்டு அந்தப் பொண்ணு பிரச்னையை முடிச்சி வச்சப்போ மணி நாலு. அவங்க வீட்டை க்ளீன் பண்ணவே முடியல. ஃபேஸ்புக்கையும்தான்.

இந்த மாதிரி, ஆன்லைன் அட்ராசிட்டியை எல்லாம் சம்பந்தப்பட்டவங்க கவனிக்கிறாங்களோ இல்லையோ... எங்களை மாதிரி இளைஞர்கள் எல்லாத்தையும் ஃபாலோ பண்றோம். சொல்லப் போனா, இந்த ஆதரவு குரூப், எதிர்ப்பு குரூப் இதுல எதுலயாச்சும் நாம இருப்போம். இல்லாட்டி நமக்கு ‘வேண்டப்பட்ட’ பொண்ணு இருக்கும். ஸோ, ‘போங்கடா பொட்டேட்டோ சிப்ஸ்களா’ன்னு போக முடியாது. ‘ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்’ங்கிற மாதிரி, ஒவ்வொரு நோட்டிஃபிகேஷனும் தேவை.

ஆக்சுவலா இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சுன்னு நீங்கல்லாம் நினைச்சிக்கிட்டிருந்தா ரொம்ப சாரி. இப்ப என்னை மாதிரி இளைஞர்களோட சுதந்திரம் இந்த மார்க் மச்சான் கையிலதான் மாட்டிட்டிருக்கு.

‘நாயக்கரய்யா... எங்க புள்ள குட்டிகளையெல்லாம் காப்பாத்துங்கய்யா’ன்னு இந்நேரம் நம்ம பேரன்ட்ஸ் அவர் கால்ல விழுந்திருக்கணும். பாவம், அவங்களும் ‘ஹேப்பி தீபாவளி’ன்னு ஸ்டேட்டஸ் போட்டு லைக் பண்ணிட்டிருக்கறதுனால இதை கவனிக்க ஆளில்ல.

‘‘ஆமா, நாங்க நாங்கங்கறீயே... நீங்கல்லாம் யாரு’’ன்னு கேக்குறீங்களா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்கள்ல நானும் ஒருத்தன். டெம்ப்ரவரி அட்ரஸ், ஸ்கூல், காலேஜ், ஐ.டி கம்பெனி, பீ.பி.ஓ... பர்மனன்ட் அட்ரஸ், ஃபேஸ்புக். இவ்வளவுதான் எங்க ப்ரொஃபைல்!

-‘கமென்ட்’ கந்தசாமி