வீடு





நீங்கள் வாங்கவிருக்கும் மனையின் லே அவுட் பஞ்சாயத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறுகிறார்களா? அப்படி ஓர் அங்கீகாரமே கிடையாது என்பதுதான் உண்மை! பஞ்சாயத்தில் கொடுக்கப்படும் கடிதத்தையே அவர்கள் அங்கீகாரம் என நினைக்கிறார்கள். எந்த இடத்தையும் வீட்டு மனைகளாகப் பிரித்து அதற்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பஞ்சாயத்து உள்பட எந்த உள்ளாட்சி அமைப்புக்கும் கிடையாது. ஆனால், அப்படியொரு கடிதத்தை வைத்துக்கொண்டே பல உரிமையாளர்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனால் ஏற்படும் பிரச்னைகளைக் கருதி, இதுபோன்ற அங்கீகாரங்களை உள்ளாட்சி அமைப்புகள் வழங்கக் கூடாது என அரசு அறிவித்தது.

 இருப்பினும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பதற்கு யார் அங்கீகாரம் அளிக்க வேண்டும்? அங்கீகாரம் பெற்ற லே அவுட்டுக்கும், அங்கீகாரம் பெறாததற்கும் என்ன வித்தியாசம்? விளக்குகிறார் ட்ரைஸ்டார் ஹவுசிங் நிர்வாக இயக்குனர் பா.ஜார்ஜ் பீட்டர் ராஜ். தமிழ்நாட்டில் சென்னை பெருநகரப் பகுதியில் வரும் லே அவுட்டுக்கு அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம் CMDA (Chennai Metropolitan Development  Authority) என்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு இருக்கிறது. இதுதவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம் DTCP (Directorate of Town and Country Planning)   என்ற நகர ஊரமைப்புத்துறைக்கு மட்டுமே உண்டு. சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள DTCP&க்கு தமிழ்நாடு முழுவதும் 8 மண்டல அலுவலகங்கள், 15 உள்ளூர் திட்டக் குழுமங்கள், 10 புதுநகர வளர்ச்சிக் குழுமங்கள் இருக்கின்றன. உள்ளூர் திட்டக் குழுமத்தின் எல்லையில் உள்ள இடங்களும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

1. குடியிருப்புப் பகுதி, 2. வணிகப் பகுதி, 3. தொழிற்சாலைப் பகுதி, 4. கல்வி நிறுவனங்கள் பகுதி, 5. மக்கள் பயன்பாட்டுப் பகுதி, 6. விவசாயப் பகுதி. குடியிருப்புப் பகுதியில் வரும் இடத்தை மட்டுமே மனைகளாகப் பிரித்து அங்கீகாரம் பெற முடியும். மற்ற பகுதியிலுள்ள இடங்களை மனைகளாகப் பிரிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்துக்கு மனுச் செய்து குடியிருப்புப் பகுதியாக மாற்றம் செய்ய வேண்டும். DTCP&ல் வீட்டுமனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க என்ன வழிமுறை? இதை அறிந்தால்தான் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளில் மறைந்திருக்கும் பிரச்னைகளை அறிய முடியும்.

1. லே அவுட் போடவிருக்கும் இடத்துக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும். மேற்கண்ட நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லை என்றும், நிலச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கை இல்லை என்றும், வெள்ளப்பெருக்கால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இல்லை என்றும் அச்சான்றிதழில் உறுதிப்படுத்த வேண்டும். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நேரில் நிலத்தை ஆய்வு செய்த பிறகு இச்சான்றிதழை அளிப்பார்கள்.

2. ஊராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளூர் அமைப்புகளின் மூலமே நகர் ஊரமைப்புத் துறைக்கு விண்ணப்பிக்க முடியும். கிரயப்பத்திரம், மூலப்பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கச் சான்றிதழ், வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ் மற்றும் சில ஆவணங்கள் தேவை. இவற்றோடு, இடம் சம்பந்தப்பட்ட விபரங்கள் அடங்கிய வினா விடைப் படிவத்தை உள்ளாட்சி அமைப்பில் பெற்று, பூர்த்தி செய்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே நகர் ஊரமைப்புத் துறை மண்டல அலுவலகத்திலோ, உள்ளூர் திட்டக் குழுமத்திலோ விண்ணப்பிக்க வேண்டும்.  நிலத்துக்கு அருகில் நீர்நிலைகள், இடுகாடு, ரயில் தண்டவாளம் போன்றவை இருக்கக்கூடாது. இதுபோன்ற சில நிபந்தனைகள் நேரில் ஆய்வு செய்யப்படும். இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களும் பரிசீலிக்கப்படும். இதற்குப்பின் அதிகாரிகளே ஒரு லே அவுட் வரைந்து  ஒப்புதல் அளிப்பார்கள். இதற்கு ‘தொழில்நுட்ப ஒப்புதல்’ எனப் பெயர். இதோடு, அங்கீகார எண்ணும் அளிக்கப்படும். அந்த லே அவுட்டில் விதிகளுக்கு உட்பட்டு பொது ஒதுக்கீடு, சாலை, கடைகள், பிளாட் அளவுகள் அமைந்திருக்கும். மனையின் எண்ணிக்கை, பொது உபயோகம், சாலை, கடைகள் முதலிய ஒதுக்கீடுகள் சதுர அடியிலேயே கொடுக்கப்பட்டிருக்கும்.  தொழில்நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்ட லே அவுட், இறுதி ஒப்புதலுக்காக உள்ளாட்சி அமைப்புக்கு அனுப்பப்படும். அதில் சில நிபந்தனைகளும் குறிக்கப்பட்டிருக்கும். உள்ளாட்சி அமைப்பானது அந்நிபந்தனைகளை மனுதாரருக்குத் தெரிவித்து, அவை நிறைவு செய்யப்பட்டவுடன் இறுதி ஒப்புதல் வழங்கப்படும். ஆனால், லே அவுட்டில் மாற்றம் செய்ய உள்ளாட்சி அமைப்புக்கு அதிகாரம் கிடையாது. அதென்ன நிபந்தனைகள்? அடுத்த வாரம்...

(கட்டுவோம்!)