ரசிகர்களின் நாடியறிந்து கதையைப் பிடித்து திரைக்கான கதையாக உருமாற்றி, காட்சிகளாகப் பிரித்து எழுதி அதை மூன்று மணி நேரத்துக்குள் வாழ்க்கையாக உணரவைக்கும் சினிமா ‘செல்லுலாய்ட்’ என்றால், அதே உணர்வை போகிறபோக்கில் சில நிமிடநேரத்தில் பார்வையாளர்களின் மனதில் விதைப்பதன் மூலம் விற்பனைப் பொருளை நம்பகமானதாக ஆக்கும் விளம்பரத்துக்கான கான்செப்ட்டை ஒரு செப்படி வித்தை எனலாம். ‘‘உலகத்திலேயே கான்செப்ட்டுகளின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனையே இல்லாம நாலு நடிகைகளை ஆடவிட்டு விளம்பரப் படமெடுக்கிற அதிசயம் இங்கே மட்டும்தான் நடக்குது. எந்த ஒரு நேஷனல், இன்டர்நேஷனல் ப்ராடக்டுக்கும் இப்படி விளம்பரம் பண்றதை எங்கேயும் பார்க்கமுடியாது...’’ என்று சிரித்த tஷ்நீ விளம்பர நிறுவனத்தின் பாபுசங்கர், சமீபத்தில் சூர்யா, மாதவனை வைத்து உருவாக்கி கவனத்தைக் கவர்ந்த விளம்பரங்கள் பற்றிப் பேசினார்.‘‘தமிழ்ப்பட உலகில கே.பாலசந்தர் சார் அலாதியான இயக்குநர். அவர் சிந்தனை தொடாத புதுமைகளே இல்லைன்னு சொல்லலாம். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ல ‘சிப்பியிருக்குது... முத்துமிருக்குது...’ பாடல்ல ஸ்ரீதேவி சந்தம் சொல்ல, அதுக்கு கமல் பாடற பாடலை கான்செப்ட்டா வச்சிருப்பார். எம்.எஸ்.வியும், கண்ணதாசனும் பாடலை உருவாக்கும் இன்ஸ்பிரேஷன்ல அதை யோசிச்சதா அப்ப அவர் சொல்லியிருந்தார். அதே கான்செப்ட்டை வச்சு கோவை ஸ்ரீகணபதி சில்க்ஸுக்காக பயன்படுத்தினேன்.
ஆனா எம்.எஸ்.வி. ட்யூனை எடுத்துக்காம என் ஒரிஜினல் ட்யூனை வச்சு பாடலை உருவாக்கினேன். அன்னைக்கு இருந்த கமல் இடத்தில இன்னைக்கு மாதவன் சரியா பொருந்தி வந்தார். அவரோட தோற்றத்துக்கு கமல் போல தாடியெல்லாம் வைக்காம, இந்தி நடிகர் தேவ் ஆனந்தோட லுக் கொடுத்தேன். ஏன்னா இது வறுமைக்கு கான்ட்ராஸ்டா பகட்டான பட்டுச்சேலை பற்றி சொல்ல வர்ற விளம்பரம். அதனால அதுக்காக லொகேஷனும் பகட்டா வேண்டி ஸ்விஸ்ஸுக்கு இணையான லொகேஷனா சொல்லப்படற வாகமன்ல ஷூட் பண்ணினோம். ஸ்ரீதேவி இடத்தில மான்ஸி நடிச்சாங்க. அவங்க இன்னும் வெளியாகாத ‘லீலை’ படத்தோட ஹீரோயின்ங்கிறது ஒரு சுவாரஸ்யத் தகவல்.‘வானில் நிலவு அழகு... அழகு... வண்ணப்பூவும் அழகு... அழகு...’ன்னு ஆரம்பிக்கிற பாடல், ‘கட்டும் ஆடை அழகு... அழகு... கணபதி சில்க்ஸ் பட்டாடை அழகு...’ன்னு போய் முடியறவரை நடுவில சந்தத்துக்கான வார்த்தை கிடைக்காம யோசிச்சு, அதில கமல் சொல்றதைப்போல இதில மாதவனும் யோசிச்சு வார்த்தைகளைப் பிடிக்கிறதா எடுத்தது பாராட்டப்பட்டது. ஈகோ இல்லாத மாதவனோட இயல்பான சிரிப்பும், நடிப்பும் அவரை விளம்பரத்துறையிலயும் முக்கிய நடிகரா வச்சிருக்கு. யு டியூபில பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சது இந்த விளம்பரத்துக்கு. அதோட ஹைலைட்டா ஒரு கல்யாணத்தில கே.பி.சாரைப்பாத்து இந்த விஷயத்தைச் சொன்னப்ப ரொம்ப சந்தோஷப்பட்டு வாழ்த்தினார். நான் யார்னு அறிமுகம் இல்லாமலேயே என்னோட பல விளம்பரங்களை அவர் மேடைகள்ல பாராட்டியிருக்கார். விளம்பரங்களைக்கூட அவர் கூர்ந்து கவனிக்கிறக்குக் காரணம் இருக்கு. அவர் படங்களோட காட்சிகள்ல கூட ஒரு விளம்பர கான்செப்ட்டோட சுவாரஸ்யம் இருக்கும்.
சூர்யாவை வச்சு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு உருவாக்கிய விளம்பரத்துக்கும் பெரிய வரவேற்பு கிடைச்சது. அதை ‘சூப்பர் ஸ்டோர்’னே அழைக்கப்படற அளவுக்கு அந்த விளம்பரம் வெற்றியடைஞ்சிருக்கு. இன்னும் கேட்டா சூர்யா போல ஒரு பெரிய ஹீரோ நடிக்கிற விளம்பரமா இருந்தும், அதுக்கு ஜிங்கிள்ஸ் பயன்படுத்தாம, கலர்கள் கூட இல்லாத வெண்மையான செட்ல படமாக்கினோம். அதுதான் அதைக் கவனிக்க வச்ச விஷயம். எல்லாமே ஸ்பெஷலா அமைஞ்ச கடைல ஷாப்பிங்கைக் குறிக்க சர்வீஸ், அல்டிமேட், ப்ரைஸ், என்ஜாய்மென்ட், ரேஞ்ச்ங்கிற அஞ்சு விஷயங்களோட முதலெழுத்தை தனியா எடுத்தா சூப்பர்னு வரும். இந்த எழுத்துகளோட பின்னணியிலேயே சூர்யா வந்து பேசும்போது விளம்பரத்தில சொல்லப்பட்ட விஷயம் தெளிவா புரிஞ்சுபோச்சு. இந்த இடத்தில சூர்யாவோட இன்வால்வ்மென்ட்டை சொல்லணும். இன்னும் சொல்லப்போனா இதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததே சூர்யாதான். ஒரு நாள் கூத்துதான் இதுக்கான ஷூட். ஆனா அதுக்கான சூர்யாவோட டெடிகேஷன் சினிமாவைவிடப் பெரியது. பணத்துக்காக மட்டும் நடிக்கிற நடிகரில்லை அவர்ங்கிறது அதில தெரிஞ்சது. அவருக்கான வெள்ளை உடைக்காக இங்கே எதிலயும் திருப்தி வராம, மும்பைல சல்மான், ஷாருக்குக்கு காஸ்ட்யூம் பண்ற டிசைனரை வரவழைச்சு, அதை டிசைன் பண்ணினார். ஹேர்ஸ்டைலுக்காகவும் மும்பைலேர்ந்து ‘சபீனா கான்’ங்கிற முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்ட்டை வரவழைச்சு தன் முடியை மாற்றினார். முழு கமிட்மென்டுக்கு அடையாளமான அவரை விட்டா சூப்பர்னு சொல்ல வர்ற விளம்பரத்துக்கு வேற சூப்பரான நடிகர் கிடைக்கமாட்டார்..!’’