குலதெய்வங்களின் குடியிருப்பு



‘தில்லியில பொறந்தாலும்
லண்டன்ல வளர்ந்தாலும்
விடுப்பு கிடைக்கையில
வீட்டோட கூட்டிக்கிட்டு
உறவுக்காரன் சகிதம்
ஒண்ணாக் கூடுமிடம்...
ஆத்தோர கிராமத்துல
அத்துவானக் காட்டுக்குள்ள
ஒத்தையாளா நின்னுக்கிட்டு
நித்தம் எம்மை பா(கா)த்திட்டிருக்கும்
அய்யனாரு சாமி கோயில்!’
- நம் கிராமங்கள் போற்றும் ‘குலதெய்வ வழிபாட்டின்’ மீதான பிரியத்தை, பிடிப்பைக் காட்டும் வரிகள் இவை.

நகரம், நாகரிகம், பரபரப்பு, பகட்டு, இயந்திரத்தனம் என வாழ்க்கைச் சூழல் எத்தனை மாற்றம் கண்டிருந்தாலும் இன்றைக்கும் ‘பையனோ, பொண்ணோ பிறந்தா... முதல் மொட்டை குலசாமிக்குத்தான்’ என்று கிளம்புகிற நம் மக்கள்தான் மேற்படி வரிகளுக்குச் சொந்தக்காரர்கள்.அய்யனார் மட்டுமில்லை... மாடன், மாடத்தி, முனியன், பரமன், கருப்பசாமி, இருளப்பசாமி, சுடலை, சாஸ்தா, அங்காளம்மன், பச்சைவாழியம்மன் என தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் எங்காவது கட்டாயம் இருக்கும் ஒரு குல தெய்வம். ஆனால் ஒரே இடத்தில் இவர்கள் அணிவகுக்கிற அதிசயத்தைப் பார்க்க முடியுமா? அந்தக் கொடுப்பினை மதுரை & தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கீழ ஈராலை அடுத்த செமப் புதூர் கிராம மக்களுக்கு வாய்த்திருக்கிறது. தமிழகத்திலேயே அதிக குலதெய்வக் கோயில்கள் இருக்கிற அந்தக் குட்டியூண்டு கிராமத்துக்கு ஒரு அதிகாலைப் பொழுதில் பயணமானோம்.மழை வந்தால் மகசூல் தருகிற வானம் பார்த்த பூமி. கரிசல் மண்ணும் கருவேல மரங்களும்தான் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு. ஊர் எல்லையை நெருங்கும்போதே ஆரம்பிக்கிறது குலங்காக்கும் சாமிகளின் அணிவகுப்பு.



‘‘எந்த சாமி கும்பிட வந்திருக்கீக?’’ & வழியிலேயே நம்மை வரவேற்ற அய்யம்பெருமாள், உள்ளூர் பூசாரி.‘‘தாத்தா, அப்பாவுக்குப் பிறகு இப்போ நான் பூசாரி. பதினெட்டு தலைக்கட்டு கும்பிடுற கற்குவேல் அய்யனார்தான் எங்க குலதெய்வம். இந்த ஊர்ல எங்க ஒரு வீடுதான். மத்த தலைக்கட்டுக்காரங்க மெட்ராஸ், மதுரை, கோயம்புத்தூர்னு அங்கங்க இருக்காக. சிவராத்திரி, பங்குனி உத்திரம் ரெண்டுக்கும் தவறாம வந்திடுவாக. மத்த நேரங்கள்ல அவங்கவங்க சௌரியப்படி வந்து கும்பிட்டுப் போவாங்க’’ என்றவர், ‘‘குலதெய்வக் கோயில்கள் இங்கு குடிவந்த கதை வேணும்னா, பெரிசுகளைக் கேட்டாத்தான் சரியா இருக்கும்’’ என வயது எழுபதைத் தாண்டியிருக்கும் ரங்கசாமியிடம் அழைத்துச் சென்றார்.‘‘நாடு சுதந்திரம் அடைஞ்ச காலத்துல, சின்ன தூத்துக்குடின்னு சொல்லப்பட்ட ஊருய்யா இது. எந்தவொரு பொருளும் தூத்துக்குடிக்கு கப்பல்ல வந்தா அடுத்து நேரடியா இங்க வந்து சேர்ந்திடும். வாழையும் கரும்பும் அமோகமா விளைஞ்ச பூமி. நெசவும் நல்லா இருந்திருக்கு. நாலா சாதியும் தாயா புள்ளையா செல்வச் செழிப்போட வாழ்ந்திட்டிருக்காங்க. இப்பப் பூட்டிக் கிடக்கிற அந்தக்காலத்துக் காரைவீடுகளே இதுக்கு சாட்சி. அப்படி வாழ்ந்திட்டிருந்த ஜனங்க, வளமான வாழ்க்கை தர்ற இந்த பூமியில வீடுகளுக்குப் பக்கத்துலயே சின்னச்சின்ன கோயிலா கட்டி தங்களோட இஷ்ட தெய்வங்களைக் கும்பிட ஆரம்பிச்சாங்க.

அய்யனாரு, முன்னோடிக் கருப்பன், மருதுபாண்டியர், மாலையம்மன், சப்பானி மாடன், நாகம்மான்னு பேரு தெரிஞ்சதும் தெரியாததுமா... எண்ண முடியாது உங்களால! அத்தனை கோயில்கள் இன்னிக்கும் இருக்கு. இப்படி அவங்க கும்பிட ஆரம்பிச்சதுதான் பின்னாடி நிலைச்சு, இப்போதைக்கு சுமாரா 70 கோயில்களுக்கு மேல இருக்கு. காலத்தோட கோலம்... கோயில்கள் அப்படியே இருக்க, அதைக் கட்டி கும்பிட்ட மக்கள் இன்னிக்கு அங்கங்க இடம்பெயர்ந்து போயிட்டாங்க’’ என்கிறார் ரங்கசாமி.சுமார் மூவாயிரம் வீடுகள் இருந்த செமப்புதூரில் இன்றைக்கு வெறும் இருநூறு வீடுகளே. அதிலும் பாதிக்கு மேல் பூட்டிக் கிடக்கின்றன. விவசாயமும் நெசவும் கொழித்த காலங்கள் காணாமல் போக, தொடர்ச்சியாக நிலவிய வறட்சியைக் காரணம் காட்டுகிறார்கள் செமப்புதூர் மக்கள். ஆனாலும், பிழைக்க வழியில்லாமல் ஊரைக் காலிசெய்து போன மக்களை அப்படியே கைவிட்டு விடவில்லை அவர்களது குலசாமிகள். சென்ற இடங்களில் கிடைத்த வசதியான வாழ்க்கை, அவர்களை மீண்டும் குலதெய்வங்களை நினைத்துப் பார்க்க வைத்திருக்கிறது.‘‘வருசத்துக்கு பத்து நாள் அவங்கள்லாம் வந்து இங்கயே தங்கி, பொங்கிச் சாப்பிட்டு சந்தோஷமா கும்பிட்டுப் போறாங்க. வருஷத்துக்கு வருஷம் அவங்க வாழ்க்கையும் சிறப்பா இருக்கு. இந்த வருஷம் வாடகைக்கு கார் எடுத்து வர்றவங்க, அடுத்த வருஷம் சொந்தக் காருல வந்து போறாங்க.

தை முதல் ஆடி வரைக்கும் பாத்தோம்னா தினமும் எங்காவது ரேடியோ சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்கும். இன்னிக்கு நூத்தம்பது குடித்தனம் இருக்கிற இந்த ஊர்ல, போன சிவராத்திரிக்கெல்லாம் நின்ன கார்கள் மட்டும் முன்னூறுக்கு மேல இருக்கும்’’ & ஊர்ப்பெருமை பூரிக்க வைக்கிறது மூர்த்தியை.‘குலதெய்வம் என்று தனியாக ஒரு தெய்வம் இல்லை; தங்கள் இனத்தை, குடும்பத்தை ஆபத்திலிருந்து காத்துவந்த முன்னோர்களையே இப்படி வழிபடுகிறோம்’ என்கின்றன ‘குலதெய்வ வழிபாடு’ தொடர்பான ஆய்வுகள். அந்த வழிபாடு முழுக்க முழுக்க மக்களின் நம்பிக்கை சார்ந்ததாகத் திகழ்கிறது. செமப்புதூர் கண்மாயை ஒட்டியுள்ள ஆலமரத்தடி அய்யனார் பீடத்தில், விஜயாபுரி ராசு குடும்பத்தினர் தங்களது வீட்டில் நிகழ இருக்கும் ‘பூப்புனித நீராட்டு விழா’வுக்காக வைத்திருந்த முதல் பத்திரிகை, காற்றில் படபடத்தபடி அந்த நம்பிக்கையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

குருவிராஜன்