ராசி கோயில்கள்



அவிட்ட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும், 3, 4 பாதங்கள் கும்ப ராசியிலும் இடம்பெறுகின்றன. கும்ப ராசியில் அவிட்டம் மூன்று மற்றும் நான்காம் பாதங்களில் பிறந்த நீங்கள், மகர அவிட்டத்தாரை விட கொஞ்சம் அமைதியாகவே இருப்பீர்கள். மகர அவிட்டம் உணர்ச்சிப் பிழம்பு எனில் கும்ப அவிட்டம் அறிவுக் கொழுந்தாக விளங்கும். எல்லா விஷயங்களிலும் நுனிப்புல் மேய்ச்சலாக இல்லாமல் ஆழமாக இருப்பீர்கள். சிறிய வயதிலேயே கொஞ்சம் அடிபட்டு, அனுபவப்பட்டு வந்தவராக இருப்பீர்கள். எல்லோருடைய கவனமும் தன்மீது விழவேண்டுமென்று இருப்பீர்கள். எல்லோரும் வேண்டுமென்று இழுத்துப் பிடிப்பீர்கள். அறிவுபூர்வமாக சிந்தித்து உணர்வுபூர்வமாக செயல்படுவதில் வல்லவர் நீங்கள். வாசனைத் திரவியங்கள், ஆடை ஆபரணங்களை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம் சுகவாசியான நீங்கள் எந்த செயலையும் உடனே செய்யாமல் இழுத்தடித்துதான் முடிப்பீர்கள்.அண்டமே சிதறினாலும் அஞ்சாநெஞ்சனாக இருப்பீர்கள். கால் வயிறு கஞ்சி குடித்தாலும் கௌரவமாக இருக்க நினைப்பீர்கள். சிறு வயதில் பலரால் ஏமாற்றப்பட்டு இளமையில் சாமர்த்தியமாக மாறுவீர்கள். முன்கோபம் அதிகம் இருக்கும். சிறிய அவமானங்களை உள்வாங்கிக் கொண்டு, நேரம் பார்த்து கொரில்லா தாக்குதல் நடத்துவீர்கள். உங்களை யாரும் வெளிப்படையாகப் பாராட்டாவிட்டால், நீங்களே உங்களைப் புகழ்ந்து கொள்வீர்கள். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் தனிமையைத்தான் அதிகம் விரும்புவீர்கள். எடுத்தவுடனேயே ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு முயற்சியும் செய்வீர்கள். ஆனால், பணம் என்னவோ தாமதமாகத்தான் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறுவீர்கள். செவ்வாயின் நட்சத்திரமாக இருப்பதால் எப்போதுமே யுத்த களத்தில் இருப்பதுபோன்ற ஒரு மனோநிலையில் இருப்பீர்கள். வெற்றிகளை குறிவைத்து அடிப்பீர்கள்.



புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் பிரச்னைகள் வந்து நீங்கிய வண்ணம் இருக்கும். ரோகிணி, கிருத்திகை, பூரம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் போன்ற நட்சத்திரக்காரர்கள் எப்போதும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சீனுவாசன், வேணுகோபால், ஏழுமலை, வெங்கடாசலம், கங்காதரன் போன்ற பெயருள்ளோர் தேடி வந்து உதவுவார்கள். மனோகரன், பாலா, இளம்பிறை, சந்திரமௌலி போன்ற பெயரை உடையவர்கள் வாழ்வை மடைமாற்றம் செய்வார்கள். இவை எல்லாமே கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்கள். நீங்கள் அவிட்டத்தில் எந்த பாதம் என்பதைத் தெரிந்துகொண்டு மேலே படியுங்கள்... அவிட்டம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுடைய பலன்களைப் பார்ப்போம். 3ம் பாதத்தின் அதிபதியாக சுக்கிரன் வருகிறார். பிறந்த இரண்டரை வருடம் வரை செவ்வாய் தசை நடைபெறும். செவ்வாயின் உஷ்ணத்தால் அடிக்கடி ஜுரம்போல வந்து நீங்கும். உங்கள் சொந்த ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்துவிட்டால் உடனடியாக தந்தை வீடு, மனை என்று வாங்கிப் போடுவார். 3 வயது முதல் 20 வரை ராகு தசை இருப்பதால் தாய், தந்தையின் வளர்ச்சி சட்டென்று மேலேறும். ராகு தசையின் ஆரம்பத்தில் ஏனோதானோ என்று இருந்தாலும் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி சாதிப்பீர்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைப்பீர்கள். உங்களின் கல்வியறிவைக் கண்டு பலரும் வியப்பார்கள். தோள் தொட்டு பாராட்டுவார்கள். ‘விழுந்து விழுந்து படிக்கலைன்னாலும், இவ்ளோ மார்க் எடுத்திருக்கானே’ என்பார்கள். எட்டாம் வகுப்பிலேயே காதல் வயப்படுவீர்கள். எச்சரிக்கையாக தள்ளிவைத்துவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் விஷுவல் கம்யூனிகேஷன், விஸ்காம் போன்றவை உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

இதையடுத்து உங்களின் வேகத்தை நெறிப்படுத்துவதுபோல குரு தசை வருகிறது. ஏறக்குறைய 21லிருந்து 36 வயது வரை நடைபெறும். குரு தசை வழக்கமான வளர்ச்சியாக இருக்குமே தவிர, பெரிய அளவில் ஒன்றும் சாதிக்கத் தூண்டாது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு மாறும்போது சாதனைகள் தொடரும். இருந்த இடத்திலேயே இருந்தால் கொஞ்சம் தேங்கிப்போவீர்கள். உங்களின் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னுக்கு வருவார்கள். ஏறக்குறைய 30 வயது வரைக்கும் அப்படியும், இப்படியுமாகத்தான் இருக்கும். உங்களில் சிலர், ‘சாதித்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறேன்’ என்பீர்கள்.
உங்களின் காத்திருப்பிற்கு பலன் வருவதுபோல 37 முதல் 55 வயது வரை சனி தசை நடைபெறப்போகிறது. சனி தசை நான்காவது தசையாக வரும்போது உயிருக்கு கண்டம் என பயமுறுத்துவார்கள். ஆனால், அஞ்ச வேண்டாம். ஏனெனில் உங்களின் ராசிநாதனாக சனி வருவதால் உயிருக்கு ஆபத்து இல்லை. உங்களின் 41 வயது வரை உறவினர் பகை, சிறு விபத்துகள் என்று இருக்கும். ஆனால், 42 வயதிலிருந்து வசதி வாய்ப்புகள் பெருகும். இந்த தசையே சிக்க வைத்தல், சிந்திக்க வைத்தல், சீராக்குதல் என்ற அமைப்பில் செல்லும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன், புதனின் சேர்க்கையோ, பார்வையோ இருந்தால் சனி தசை உங்களை உச்சிக்குக் கொண்டு செல்லும். மேலும் உங்கள் ராசிநாதனான சனி, புதனுக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதனாக இருப்பதால் நீங்கள் செட்டில் ஆகிவிடுவீர்கள். இந்த தசையில் ஜீரோ டூ ஹீரோவாக உச்சத்தில் அமர்வீர்கள். 42, 43, 44 வயதுகளில் சில சேர்க்கை நட்பால் தடம் மாறுவீர்கள். அதனால் உருவாகும் சங்கடங்களைத் தவிர்த்தால் வீட்டில் நிம்மதி தங்கும்.  56லிருந்து 72 வயது வரை புதன் தசை நடைபெறும். புதனும், உங்களின் ராசியாதிபதியான சனியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் பிள்ளைகளின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடுப்பீர்கள். வீட்டில் சுப விசேஷங்கள் ஏதேனும் நடந்த வண்ணம் இருக்கும். பூர்வீகத்தில் ஒரு இடமாவது இருக்க வேண்டுமென்று வாங்கிப் போடுவீர்கள். புதன் உங்கள் ராசியின் பூர்வ, புண்ணிய ஸ்தானாதிபதியாக இருப்பதால் புண்ணிய தீர்த்தங்கள், தலங்கள் என்று சென்ற வண்ணம் இருப்பீர்கள்.

குல தெய்வக் கோயிலுக்கோ அல்லது சொந்த ஊர் தெய்வத்திற்கோ கும்பாபிஷேகம் செய்வீர்கள். அதேசமயம் உங்களின் நட்சத்திர நாயகனான செவ்வாய்க்கு புதன் கொஞ்சம் பகைவராக இருப்பதால் தைராய்டு பிரச்னை, சர்க்கரை நோய், நரம்பு மண்டலப் பிரச்னை என சிறு தொந்தரவு வந்து நீங்கும். ஏனெனில், எமோஷனல் ப்ளானட் செவ்வாய், அமைதிக்குரிய புதனை கொஞ்சம் தூண்டிவிடும். மற்றபடிக்கு நன்றாக இருக்கும். அவிட்டம் 4ம் பாதத்திற்கான பலன்களை இனி பார்ப்போம். நட்சத்திர அதிபதி செவ்வாய், ராசியாதிபதி சனி, 4ம் பாதத்தில் அதிபதியாக செவ்வாயே வருகிறது. செவ்வாய் இரண்டு மடங்கு சக்தியோடு இந்த பாதத்தில் செயல்படுவார். இதனால் சின்ன சின்ன ஆசைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடுவீர்கள். ‘டாக்டர் ஆகணும்னு ஆசைப்படறியா’ என்று கேட்டால் மருத்துவமனை கட்ட வேண்டுமென்று பதில் சொல்வீர்கள். பிறந்தது குக்கிராமமாக இருந்தாலும் தலைநகரை ஆளவேண்டுமென்று பதில் சொல்வீர்கள். சொல்வதை செய்யவில்லையெனில் பதவியிலிருந்து தூக்கி எறிவீர்கள்.  ஏறக்குறைய ஒரு வயது வரை செவ்வாய் தசை நடக்கும். 2லிருந்து 19 வயது வரைக்கும் ராகு தசை இருக்கும். 4 வயதில் பாலாரிஷ்டம் என்று சொல்வதுபோல் உடம்பு படுத்தும். பொதுவாக ராகு தசை நன்றாகத்தான் இருக்கும். 3ம் பாதத்தினர் படிப்பில் கவனமாக இருந்தது போன்று 4ம் பாதத்தினரான நீங்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள். ஓட்டப்பந்தயம், கால்பந்து போன்றவற்றில் மாநில அளவில், தேசிய அளவில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளன. பள்ளிப் பருவத்திலேயே குழு அமைத்து எல்லா போட்டிகளிலும் பங்கெடுப்பீர்கள். எல்லோருடைய தவறுகளையும் சுட்டிக் காட்டுவதால் சிலர் உங்களை வெறுப்பார்கள். கோபமும், தீர்க்கமுமாக பேச்சு இருக்கும். பள்ளிப் படிப்பை உங்களில் சிலர் கொஞ்சம் தடையோடுதான் முடிப்பீர்கள்.
 
அடுத்து 20லிருந்து 35 வயது வரை குரு தசை நடைபெறும். மூன்றாம் பாதத்து அன்பர்களை கொஞ்சம் ஏமாற்றிய குரு, இங்கு பலன்களை வாரி வழங்குவார். ஏனெனில் இரட்டைச் சக்தியோடு விளங்கும் செவ்வாய்க்கு, குரு எப்போதும் நண்பர்தான். பள்ளியில் கொஞ்சம் தளரவிட்ட படிப்பை கல்லூரியில் பிடித்து விடுவீர்கள். சில நாசூக்குகளை கற்றுக் கொள்வீர்கள். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறை சம்பந்தமான படிப்பை எடுத்துப் படிப்பீர்கள். கண்ணால் பார்த்த, கேட்ட தவறுகளையெல்லாம் சுட்டிக் காட்டிய நீங்கள், இப்போது விவேகமாக அடங்கிப் போவீர்கள். ஆனால், ‘எங்கு வேட்டு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும்’ என்று தந்திரச் செயல்களில் இறங்கி எதிரிகளை திக்குமுக்காட வைப்பீர்கள். சீக்கிரமாக திருமணம் நடைபெறும். வீடு, மனையெல்லாம் வாங்கி செட்டில் ஆவீர்கள்.அடுத்ததாக 36 முதல் 54 வயது வரை சனி தசை நடைபெறும். கொஞ்சம் உடம்பு படுத்தும். ஏனெனில், உங்களின் ராசியாதிபதியான சனியும், நட்சத்திர நாயகனான செவ்வாயும் பகையாக இருப்பதால் மனப் போராட்டம் இருக்கும். ஆனாலும் எதிர்கொள்வீர்கள். . ஆறுதலுக்கும், உதவிக்கும் கைக்கு எட்டிய தூரத்தில் மனிதர்கள் எப்போதும் இருப்பார்கள். இந்த சனி தசையில் முதல் ஒன்பது வருடங்கள் மிகப் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் வேறு யாருடைய பேரிலாவது ஐந்தாறு வருடங்கள் தொழிலை தொடர்ந்து செய்து, 42 வயதுக்குப் பிறகு உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அடிப்படையாக நீங்கள் போராளிகள்தான். அதனால் வீரத் துறவிகளின் நூல்களைப் படிப்பது நல்லது. மனதை அமைதியாக்கிக் கொண்டால் நிறைய சாதிக்கலாம். உங்களின் 55லிருந்து 71 வயது வரை நடைபெறும் புதன் தசையில், பிள்ளைகளால் சிறு பிரச்னைகள் வந்து மறையும். அவர்களின் பிரச்னைகள் உங்களின் தலையீட்டால் தீரும். மற்றபடிக்கும் சாத்விகமான வாழ்க்கை தொடரும்.    பொதுவாகவே அவிட்டம், செவ்வாய் நட்சத்திரத்தில் வருகிறது. மேலும் ராசியாதிபதியான சனி, பகைவராகவும் இருக்கிறார். செவ்வாய்க்கு அதிபதியாக முருகக் கடவுள் வருகிறார். இந்த இரண்டு பாதங்களையுமே செவ்வாய் பெரும்பான்மையாக ஆளுகிறார். மூன்றாம் பாதத்தை மட்டும் புதன் ஆளுகிறார். சனி கடலுக்கு உரியதைப்போல சிறு குன்றுகளுக்கும் உரியவராவார். குன்றுகளுக்கு மேல் இருக்கும் முருகனை தரிசிக்கும்போது சனியும், செவ்வாயும் இணைந்த அம்சத்தில் அந்த தலம் விளங்கும். மேலும், மூன்றாம் பாதத்தை சுக்கிரன் ஆளுவதால், இயற்கை எழில் மிக்க தலமாகவும் இருந்தால் இன்னும் அதிக நன்மை தரும். அப்படிப்பட்ட தலமே சிவன்மலை ஆகும். இத்தலத்தில் மலை மீது முருகன் வீற்றிருக்கிறார். நான்கு யுகங்களுக்கும் முற்பட்ட தொன்மையான ஆலயமாகும். மக்களின் குறை தீர்க்கும் கடவுளாக இவர் வணங்கப்படுகிறார். சிவன்மலை சென்று வள்ளி, தெய்வானை சமேத முருகனை வணங்கி வாருங்கள். வெற்றியை உங்களின் நிரந்தர சொத்தாக மாற்றுங்கள். ஈரோட்டிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், காங்கேயத்திலிருந்து 4 கி.மீ. தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.

அடுத்த வாரம் சதயம் நட்சத்திர அன்பர்களுக்காக...