காதல் எத்தனைப் புனிதமானதாக இருந்தாலும் அதற்காக அழகான குடும்ப உறவுகளை இழக்கத்தேவையில்லை என்று சொல்லும் படம். இதில் காதலின் நியாயத்தை மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளின் மேன்மையையும் சரிவிகிதமாகக் கலந்து ஃபேமிலி ட்ரீட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவகர். நண்பர்களுக்காவே வாழும் பெரிய குடும்பத்து உறுப்பினரான தனுஷ் அந்தக் காரணத்துக்காகவே தனியாக ஹாஸ்டலில் தங்கிப்படிக்க நேர்கிறது. ஊரிலிருக்கும் காதலர்களுக்கெல்லாம் ஓடிப்போய் திருமணம் செய்துவைக்கும் அவரும் எதிர்பாராமல் ஜெனிலியாவுடன் பூத்த தன் காதலில் எப்படி ஜெயிக்கிறார் என்று விரிகிறது கதை. அந்த முயற்சியில் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் தன் காதலைப்புரிய வைத்து ஜெனிலியாவின் முரட்டுக் குடும்பத்தையும் வழிக்குக்கொண்டு வருகிறார்.தனுஷுக்கேன்றே எழுதப்பட்ட கதைபோல இருக்கிறது. சமயோசிதமாகத் திட்டங்களைத் தீட்டி அதில் ஜெயிக்கும் கேரக்டரில் அவர் பட்டையைக் கிளப்புகிறார். ஒட்டுமொத்த காமெடி ட்ரீட்மென்ட்டில் செல்லும் படத்தில் தனுஷின் பங்களிப்பும் சரிவிகிதமாக இருக்கிறது. அவர் உடல்வாகுக்கேற்ற சண்டைக்காட்சிகளும் இயல்பாக ரசிக்க வைக்கின்றன.
அதேபோல அவருக்கென்றே படைக்கப்பட்ட ஜோடியாக இருக்கிறார் ஜெனிலியா. தன்னைத்தான் தனுஷ் காதலிக்கிறார் என்று தெரியாத அப்பாவித்தனத்திலும், ஆனால் தனுஷ் வேறு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது என்ற தவிப்பிலுமாக ஜெனி நடிப்பில் ஹனி. உருவப்பொருத்தத்திலிருந்து நடிப்புப்பொருத்தம் வரை இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடியாக வலம் வருகிறார்கள். குடும்பத்தின் அக்கவுண்ட் பார்க்கிறோம் பேர்வழி என்று இருவரும் அடிக்கும் காதல் லூட்டியில் தியேட்டர் கலகலக்கிறது.அதேபோல தனுஷுக்கென்றே அமைந்த அன்பான குடும்பமாக இருக்கிறது கே.பாக்யராஜ் குடும்பத்தலைவராக இருக்கும் அவரது கூட்டுக்குடும்பமும். அவர்களிடம் தன் காதலைப்புரிய வைக்க தனுஷ் எடுக்கும் முயற்சிகள் முதல்பாதியிலும், ஜெனிலியாவின் முரட்டு மற்றும் முட்டாள் குடும்பங்களைத் தன் குடும்பத்தை வைத்தே சரிகட்டுவது பின்பாதிக்கதை.படத்தின் ஸ்கிரிப்ட் இன்னொரு ஹீரோ. காமெடி ட்ரீட்மெண்டுடன் அநேக கேரக்டர்களை வைத்து எழுதப்பட்ட கதைக்குப் பொருத்தமான நடிக நடிகையரின் தேர்வும் அசத்துகிறது. கே.பாக்யராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, ஜெயப்பிரகாஷ், ராஜலட்சுமி, அம்பிகா, ரேகா, உமா பத்மநாபன் என்று விரியும் நட்சத்திரப்பட்டாளத்தில் காமெடிக்கென்று மட்டும் விவேக், கருணாஸ், மயில்சாமி, ஸ்ரீநாத், ஆர்த்தி என்று ஒரு பட்டியல் நீள்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரே ஒரு சீனில் தனுஷ் குடும்பத்துப்பெண்ணாகத் தலை காட்டியிருக்கிறார் ஸ்ரேயா. படம் முழுதும் இப்படி இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களுக்கு எந்தக்குறையும் வைக்காமல் படத்தில் அனைவருக்கும் பங்கிருப்பது யானையைக் கட்டித்தீனி போட்ட சமாசாரம்தான். ஆசிஷ் வித்யார்த்தி, ஜெயப்பிரகாஷின் முரட்டுக்குடும்பங்களுக்குள் மாட்டிக்கொண்டு அல்லல்படும் ஆடிட்டர் 'எமோஷனல் ஏகாம்பர’மாக விவேக் வரும் காட்சிகள் அவரது காமெடிப்பயணத்தில் மைல்கல். அதுவும் பல காட்சிகளில் வசனமே இல்லாமல் மற்றவர்கள் பேசும் வசனங்களுக்கு ரியாக்ஷன் மட்டுமே கொடுத்துச் சிரிக்க வைப்பது ஸ்பெஷல் ஐட்டம். பொய்களெல்லாம் கண்முன்னே காட்சிகளாக விரிய விவேக் தடுமாறும் காட்சிகளிலெல்லாம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலின் ஹம்மிங் வருவது ரகளை. பிளேபாயாக வரும் மயில்சாமி சம்பந்தமில்லாமல் ஜெனிலியா குடும்பத்தினரிடம் அகப்பட்டு அவர்கள் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் செட்டிலாவது நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும்.பாலசுப்ரமணியெம்மின் கேமரா பழுதில்லாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறது. விஜய் ஆன்டனியின் இசையில் எல்லாப் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. அதிலும் ‘உசுமு லரசெ யோ யோ’, ‘கண்ணிரண்டில்’ பாடல்கள் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் ரகங்கள்.காதல், சென்டிமென்ட், காமெடியில் கலக்கும் உத்தமபுத்திரன், ஆல்கிளாஸ் என்டர்டெயினர்!
குங்குமம் விமர்சனக்குழு