அடித்தவர்களுக்கு ஒரு அன்பு விளக்கம்...





‘‘தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை எடுக்க ஆரம்பிச்ச நேரம், ‘எங்க கதையை எடுக்கறியா... வேண்டாம் விட்ரு..!’ன்னு மிரட்டல் வந்தது. ஆனா நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. பிறகு குமரி மாவட்டத்தில வெட்டோத்தி சுந்தரம் வாழ்ந்த பகுதிகள்ல படம்பிடிக்க அனுமதி கேட்டப்பவும் ஏகப்பட்ட பிரச்னைகள் வந்து, எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கல. இத்தனைக்கும் பிறகுதான் என்மீது தாக்குதல் நடந்தது...’’ என்றார் படத்தின் இயக்குநர் வடிவுடையான். ‘‘நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். குலசேகரம் பக்கம் மங்கலம்ங்கிற சின்ன ஊர்ல ஷூட்டிங் நடந்தப்பதான் தாக்குதல் நடந்தது. என் சொந்த ஊரான ‘களியக்காவிளை’ அங்கேர்ந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலதான் இருக்கு. திடீர்னு வந்த கும்பல் யார் இங்கே டைரக்டர்னு கேட்டு, நான்தான்னு தெரிஞ்சதும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் பலபேர்கிட்ட பேசி அவங்களைக் கண்டுபிடிக்க முயற்சி பண்றேன். ஏன்னா இந்தப்படம் பற்றி அவங்களுக்கு விளக்கணும்...’’ என்ற வடிவுடையானிடம், ‘‘அப்படி தம்பி வெட்டோத்தி சுந்தரத்தோட கதைதான் என்ன..?’’ என்றபோது தொடர்ந்தார்.‘‘தம்பி வெட்டோத்தி சுந்தரம் நல்லவரா, கெட்டவரான்னு விவாதிக்கிற கதை இல்லை இது.

இப்படி ஒரு மனுஷன் வாழ்ந்து மறைஞ்சார்னு சொல்ற வாழ்க்கைக் கதையும் இல்லை. இது குமரி மாவட்டத்தைப் பற்றிய முழுமையான ஒரு பதிவு. அங்கே இருக்க மக்கள்ல 90 சதவீதம் பேர் கல்வியறிவு மிக்கவங்களா இருக்க, குற்றங்கள்ல ஈடுபடறவங்களோட விழுக்காடும் அங்கேதான் அதிகமா இருக்குன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. கல்வியறிவு மிக்க ஒரு மாவட்டத்தில குற்றவாளிகளோட எண்ணிக்கையும் அதிகமா இருக்க காரணம் என்னங்கிற கேள்வி வருதா இல்லையா?தமிழ்நாடு & கேரள எல்லையிலிருக்க மாவட்டம் குமரிங்கிறது பூகோள ரீதியான முதல் காரணம். வேலையில்லாத் திண்டாட்டம் அடுத்த காரணம். ரெண்டும் கைகோர்க்கும்போது பிழைக்க வழி, குற்றப்பின்னணியா ஆயிடுது. நான் சிறுவனா இருந்தப்ப என் கண்ணெதிரே பார்த்து அதிர்ச்சியடைஞ்ச நிகழ்ச்சிகளைத் திரைக்கதையா அமைச்சிருக்கேன். தம்பி வெட்டோத்தி சுந்தரம் என் கண்ணெதிரே வாழ்ந்த கேரக்டர். அவர்கூட வாழ்ந்த கேரக்டர்கள் இன்னும் அங்கே இருக்காங்க. படத்தில கரண் அந்தக் கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவர் கூட வர்ற சரவணன் ஏற்றிருக்க ‘சாளை’ங்கிற கேரக்டரும், அஞ்சலி ஏற்றிருக்க ‘லூர்துமேரி’ங்கிற கேரக்டரும்கூட நிஜக்கேரக்டர்கள்தான். ஒரு மண்ணைப்பற்றிய உண்மையான பதிவுங்கிறப்ப அங்கே வாழ்ந்த மனிதர்களைப்பற்றியும் சொல்லணும். அதுதான் என் நோக்கம்.



ஆனா அது தனிப்பட்ட ஒரு மனிதனோட வாழ்க்கைக்கதை இல்லைங்கிறது, கரணை அந்தக் கேரக்டர்ல பார்க்கும்போது சம்பந்தப்பட்டவங்களுக்குப் புரியும். ஏன்னா உருவப்பொருத்தத்தில கரண் வேற மாதிரியானவர். ஆனா ரசிகர்கள் இதில வேற கரணைப் பார்ப்பாங்க. அதிலும் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க, பிரச்னைகளுக்குள்ள அவர் லாக் ஆகும்போது கரண்ங்கிற ஹீரோ காணாமல் போய், அந்தக் கேரக்டரா அவரோட வலியை எல்லோராலும் உணர முடியும். ‘பருத்திவீர’னுக்குப்பிறகு சரவணனுக்கும் முக்கியமான கேரக்டர். எல்லாரையுமே குமரித்தமிழ்ல பேச வச்சிருக்கேன். வித்யாசாகர் இசைல பாடல்களை எழுதியிருக்க வைரமுத்துவும் குமரி மாவட்டத்தில புழக்கத்திலிருக்க வார்த்தைகளைக் கவனமா கோர்த்திருக்கார். எல்லாப் பிரச்னைகளுக்கும் இடையில 93 நாள் அதே மண்ணில படமெடுக்க தயாரிப்பாளர் ஜே.செந்தில்குமார் தந்த ஒத்துழைப்பும், தைரியமும் முக்கியமானதா இருந்தது. எந்தத் தவறும் நேர்ந்திடாம இருக்கத்தான் கடைசில சென்சார்னு ஒரு அமைப்பு இருக்கு. என்னை அடிச்சவங்களுக்கு இப்பவும் அன்போட சொல்றேன், படத்தோட ஹீரோ தம்பி வெட்டோத்தி சுந்தரம் இல்லை. குமரி மாவட்ட மண்தான்..!’’

வேணுஜி