எந்திரனால் வந்த ஆசை!





சங்கீத சீசன் நெருக்கத்தில்...கச்சேரிக்கான ஒப்பந்தத்தில் சபாக்களும், ஒத்திகையில் கலைஞர்களும் இப்போதே பிஸி...கூடுதல் பரபரப்பில் சுதா ரகுநாதன். தனது குரு எம்.எல்.வி&யின் 80வது நினைவு தினத்தை ஒட்டி, தனது ‘சமுதாயா’ அமைப்பின் சார்பாக 15 பேர்களுடன் இணைந்து உறுப்பு தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார் சுதா!

‘‘திடீர்னு எடுத்த முடிவில்லை. ஹிதேந்திரன்னு ஒரு சின்னப்பையனோட இறப்பும், அதையடுத்து நடந்த விஷயங்களும் உண்டாக்கின தாக்கம் மனசுக்குள்ள இருந்தது. செய்யறதுக்கான வேகம்தான் வரலை. எம்.எல்.வி. அம்மாவோட 80&வது நினைவுநாள் அதுக்கான வாய்ப்பா அமைஞ்சது. தானத்துல எம்.எல்.வி. அம்மாவை மிஞ்ச ஆளே இருக்க முடியாது. கேட்கறதுக்கு முன்னாடியே வாரிக் கொடுக்கிற தாராள குணம் கொண்டவங்க. அவங்க நினைவு தினத்துல ஏதாவது நல்லது பண்ணலாமேனு யோசிச்சப்ப, உறுப்பு தானத்தைப் பத்தி நிறைய விஷயங்கள் தெரிய வந்தது. நான், கணவர், மகள் மாளவிகானு மூணு பேரும் உடனே முடிவு பண்ணிட்டோம். எங்ககூட 15 பேர் சம்மதம் சொல்லி நின்னாங்க. வாழ்க்கைக்குப் பிறகும் மத்தவங்க மூலமா வாழப்போறோம்ங்கிற அந்த நினைப்பே நிறைவா இருந்தது...’’ என்கிற சுதா, ‘சமுதாயா’ என்ற தொண்டு நிறுவனம் நடத்துகிறார். ஏழைக்குழந்தைகளின் கல்வி, உடல்நல மேம்பாட்டுக்கான விஷயங்களைச் செய்கிற இந்நிறுவனம், அடுத்தகட்டமாக அக்குழந்தைகளுக்கு சங்கீதத்தையும் கொடுக்கிற முயற்சியில் இருக்கிறது.அபூர்வ ராகங்கள் எத்தனையோ மக்களுக்குத் தெரியாமலேயே காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காணாமல் போவதன் காரணம்? ஒரு இசைக்கலைஞராக அவற்றுக்கு மறு உயிர் கொடுக்க இவர் என்ன செய்யப் போகிறார்?

‘‘உங்க வீட்டுக்கு ஒரு சவுத் இந்தியன் குடும்பம் விருந்துக்கு வர்றாங்கன்னு வச்சுப்போம். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல்னு அவங்களுக்குப் பிடிச்சதை சமைப்பீங்க. அதே ஒரு நார்த் இந்தியன் குடும்பம் வராங்கன்னா, சப்பாத்தி, சாலட்னு யோசிப்பீங்க. யாருக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு, அவங்களுக்கு அதைக் கொடுக்கிறதுதானே நம்ம வழக்கம்? சங்கீதத்துக்கும் அது பொருந்தும். இவங்க கச்சேரிக்குப் போனா, இன்னின்ன ராகங்களைக் கேட்கலாம்ங்கிற எதிர்பார்ப்புல வர்ற ஆடியன்ஸை திருப்திப்படுத்தவே ஒருசில ராகங்களைத் திரும்பத் திரும்பப் பாட வேண்டியிருக்கு. அபூர்வமான, அரிய ராகங்கள் காணாமப் போயிடக்கூடாதுங்கிற ஆதங்கம் எனக்கும் உண்டு. ஒரே நாள்ல அதை மாத்திட முடியாது. அதுக்காகத்தான் ஒவ்வொரு சீசன்லயும், அப்படி அபூர்வமான சில ராகங்கள்லயும் ஒண்ணு, ரெண்டு பாடல்கள் பாடறதை வழக்கமா வச்சிருக்கேன்...’’ என்கிறார்.‘இவன்’ தொடங்கி ‘வாரணம் ஆயிரம்’ வரை சுதாவின் திரையிசைப் பாடல்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம். ஆனாலும், சினிமாவில் அவரது குரலை அதிகம் கேட்க முடிவதில்லை. ஏன்?‘‘நேரமில்லைங்கிறதுதான் நிஜம். சினிமாங்கிறது அவசரமா இயங்கிக்கிட்டிருக்கிற ஒரு உலகம். அந்த வேகத்துக்கு என்னால ஈடுகொடுக்க முடியலை. சில சமயம் கை நழுவிப்போன சில பாடல்கள் வேற ஒருத்தர் பாடி பிரபலமாகிறப்ப, ‘நம்மால பாடமுடியாமப் போச்சே’ங்கிற ஏக்கம் வரும். ‘பார்த்திபன் கனவு’ல வர்ற ‘ஆலங்குயில்...’ மாதிரி ஒரு லிஸ்ட்டே இருக்கு. இப்பவும் எனக்கு வசதியான நேரத்துல வரக்கூடிய வாய்ப்புகளை நான் தவிர்க்கிறதில்லை’’ என்கிறவர், தினா, வித்யாசாகர், யுவன்சங்கர் ராஜா இசையில் பாடி, ரிலீசுக்கு காத்திருக்கிற பாடல்கள் ஆறுதல் அளிக்கின்றன.

தமிழ் பாடல்களைப் பிரபலப்படுத்துவது, மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் கர்நாடக சங்கீதம் என நீள்கிற இவரது எதிர்காலத் திட்டங்களில் உலகப் பயணமும் ஒன்று!‘‘ஒரு காலத்துல பயணம் என்ற விஷயமே எனக்கு அலுப்பா இருந்திருக்கு. ஒரு கட்டத்துல அதுவே விருப்பமா மாறிடுச்சு. வருஷத்துக்கொரு வெளிநாடு போறோம். பயணம் மூலமா நான் சம்பாதிச்சது நிறைய நல்ல நண்பர்களை... ‘எந்திரன்’ பார்த்தப்புறம், பிரேசில் போகற ஆசை வந்திருக்கு... எகிப்து போகணும்... போகாத இடங்கள் இப்படி நிறையவே இருக்கு... பயணம் கொடுக்கிற அனுபவங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...’’ - கண்களை மூடி கற்பனைகளில் ஆழ்கிறார் சுதா ரகுநாதன்!

ஆர்.வைதேகி