சுட்டகதை சுடாத நீதி





‘நாற்பத்தைந்து வயது வரை வெறியாக உழைத்து சம்பாதிக்க வேண்டும். அதன்பிறகு ஏதாவது ஒரு மலைப் பிரதேசத்தில் போய் செட்டிலாகிவிட வேண்டும்’ என்பது அந்தத் தம்பதியின் லட்சியம். சென்னையின் எந்திர வாழ்க்கையிலும் புழுக்கத்திலும் அவர்கள் வெறுத்துப் போயிருந்தார்கள். நினைத்தது போலவே கொடைக்கானல் மலையில் ஒரு பழைய வீடு கிடைத்தது. பெயின்ட்டை பார்த்தே வருடக்கணக்கான சுவர்களோடு இருந்தது வீடு. எழுபது வயதைத் தாண்டிய இரண்டு சகோதரிகள் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அழகிய தோட்டத்தோடு இருந்த வீடு பிடித்தது. வாங்கிவிட்டார்கள்.

வீட்டை காலி செய்து கிளம்பும்போது அந்த மூதாட்டிகள், ‘‘மத்த நாள்ல பிரச்னை இருக்காது. ஆனா குளிர் சீசன்ல...’’ என்று ஏதோ சொல்ல வர, ‘‘அதெல்லாம் பரவாயில்லை. நாங்க பார்க்காத குளிரா?’’ என்று இடைமறித்தார்கள் தம்பதிகள். அந்த மூதாட்டிகள் திரும்பவும் ஏதோ சொல்லவந்தனர். அதைக் கேட்கும் நிலையில் இல்லை தம்பதியர். அவர்களைத் துரத்திவிட்டு வீட்டுக்குள் நுழைவதிலேயே குறியாக இருந்தனர். குளிர் காலம் ஆரம்பித்தது. மற்ற நாட்களிலேயே நடுக்கும் குளிர், அந்த நாட்களில் எலும்புகளை ஊடுருவி வதைத்தது. ‘‘பல்லு போன பாட்டிகளே இதைத் தாங்கிட்டாங்க. நமக்கு என்ன இருக்கு?’’ என்று ஆரம்பத்தில் அலட்சியம் செய்தவர்களால், அதன்பிறகு தாக்குப் பிடிக்க முடியவில்லை. பழைய காலத்து வீடு என்பதால் பனியில் நனைந்த சுவர்கள், ஈரத்தை வீட்டுக்கு உள்ளேயும் இழுத்தன. வீடே ஏதோ தண்ணீர் ஊற்றி நனைத்தது போல இருந்தது. தாங்க முடியாமல் ஒருநாள் பாட்டிகளுக்கு போன் போட்டு, ‘‘நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?’’ என்று கேட்டார்கள்.

‘‘வீடு காலி பண்ணும்போது அதைத்தான் நாங்க சொல்ல வந்தோம். நீங்க காதுல வாங்கவே இல்லை. குளிர் காலத்துல நாங்க வீட்டைப் பூட்டிட்டு மதுரைக்கு வந்துடுவோம். நீங்களும் அப்படி எங்கேயாவது போயிடுங்க!’’ என்று அட்வைஸ் செய்தனர் மூதாட்டிகள். எதையும் முழுமையாகக் கேட்க வேண்டும்!