இந்தியா வல்லரசு ஆகுமா?





ஒரு மஞ்சள் வெயில் மாலை. நானும் எனது நெடுநாள் நண்பன் கணேசனும் சாலையோரம் சந்தித்துக் கொண்டோம். ‘இந்தியா 2020’ என்ற நூலைக் கையில் வைத்திருந்தான் கணேசன். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமும் ய.சு.ராஜனும், 2020க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நூலை எழுதியிருக்கிறார்கள்.

‘‘நீ வேணா பாரேன்... இன்னும் எட்டு வருஷத்துக்குள்ள இந்தியா வல்லரசாயிடும்’’ என்றான் நண்பன். அழுக்கும் வியர்வையுமான பெண்ணொருத்தி ஒரு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு எங்களிடம் கை நீட்டினாள். ஐம்பது காசை அவளுக்குக் கொடுத்துவிட்டு, ‘‘ஒரு பைசா, இரண்டு பைசா, மூணு பைசா, அஞ்சு பைசா, நாலணா எல்லாமே செல்லாதுன்னு சொல்லி காணாமப் போயிடுச்சு. இந்த ஐம்பது பைசாவை அரசாங்கம் எப்போ செல்லாதுன்னு சொல்லுமோ தெரியலை’’ என்றான்.

‘‘இந்தச் சில்லறைகளைச் செல்லாதுன்னு அறிவிச்ச மாதிரி, ஏழைகளுக்கு இங்கே வாழத் தகுதியில்லைன்னு திடீர்னு ஒருநாள் இந்தியா அறிவிக்கும். அந்தச் சில்லறைகளைப் போலவே ஏழைகளும் காணாமல் போய்விடுவார்கள். அப்போ இந்தியா வல்லரசாயிடும்’’ என்றேன். நண்பனின் முகம் மாறத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் 80 கோடிக்கும் மேலான மக்கள் இருபது ரூபாய்க்குள்ளான வருமானத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி, மருத்துவம், சட்டப் பாதுகாப்பு எதுவுமே இவர்களுக்குக் கிடையாது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் சமூகக் கட்டமைப்பிலும் மேடு பள்ளங்கள் நிறைந்தது இந்தியா. தீண்டாமைதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு. இதனால் பெருந்தொகையான ஒரு சமூகம் நீண்ட எழுச்சியில்லாமல் அப்படியே அடங்கிப் போய்க் கிடக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகள். நமக்கு உணவளிக்கிறவர்கள். அவர்களிடம் சொந்தமாக நிலம் இல்லை. இந்த விவசாயிகள்தான் நமது மண்ணில் விதைகளையும் விளைச்சல்களையும் வளர்க்கிறவர்கள். நாம் அவர்களை வாழவே விடவில்லை.

இந்த தீண்டாமையின் அழுத்தத்திலிருந்து முட்டி முளைத்துப் படித்து முன்னேற நினைக்கும் புதிய தலைமுறையும் மீண்டும் மீண்டும் அவமானத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. ஐ.ஐ.டியில் படித்த தலித் மாணவரை, ‘‘ஏண்டா, நீ இங்கதான் படிக்கணுமா? வேற தொழில் செய்ய மாட்டியா?’’ என்று உயர் சாதிப் பேராசிரியர்கள் அவமானப்படுத்திய சம்பவங்களும் இங்கே நிகழ்ந்திருக்கின்றன. இதனால் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. சாதிகள் மட்டுமல்ல; இந்தியாவில் இன்று மறைமுகமாக - பூதாகரமாக பெருகிவரும் மதரீதியான வளர்ச்சிகளும் தாழ்த்தப்பட்டவர்களையும் பெண்களையும் சிந்திக்கவிடாமல், விதியின் பெயரால் கடவுளின் பெயரால் அவர்களை எழுச்சி கொள்ள விடாமல் உட்கார வைத்திருக்கிறது. மூன்று தலைமுறைக்குக் கனவில்கூட முன்னேற முடியாத ஒரு கட்டுண்ட மனப்பான்மையை இவை வளர்த்து வைத்திருக்கின்றன.

அடுத்து அதிகாரம் படைத்த ஊழல் பெருச்சாளிகளின் அரசியல் இந்தியாவின் ஈரலைத் தின்று கொண்டிருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் ஒரு அதிகாரியைப் பிடித்தால், அவரது ஓட்டுனரையும் கைது செய்ய வேண்டியிருக்கிறது. இது கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஒரு சங்கிலித் தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்பது பணநாயகம் என்று மாறிவிட்ட சூழலில் பணத்துக்கும் இலவசத்துக்கும் ஏங்கி, நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப் போடுகிற மக்கள் எதை விதைக்கிறார்களோ, அதைத்தான் அறுவடை செய்வார்கள். இந்தியாவில் விவசாயப் புரட்சி நடந்திருக்கிறது; தொழிற் புரட்சி நடந்திருக்கிறது. ஆனால் இந்தத் துறைகளில் கடுமையாக உழைக்கும் அடிப்படையான பணியாளர்கள் எப்போதும் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறார்கள். அவர்களது பிரச்னைகள் பேசப்படவே இல்லை. அவர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் கவனிக்கப்படவே இல்லை. அவர்கள் உழைத்து, வியர்த்து செய்த பணிகளுக்கெல்லாம் இன்று எந்திரங்கள் வந்து நிற்கின்றன. அடிப்படைத் தொழிலாளர்கள் இன்று இல்லாமலே போய்விட்டார்கள். மனிதர்களைப் பட்டினி போட்டு எந்திரங்களைச் சாப்பிடச் சொல்லும் ஒரு நாட்டை எப்படி வளர்ந்த நாடு என்று ஒப்புக் கொள்ள முடியும்? நாடு என்பது வெறும் மண்ணும் மலைகளும் நதிகளும் மட்டுமல்ல; மக்களும்தான்.

மக்களின் பண்பாட்டிற்கும் தட்பவெப்பநிலைக்கும் ஏற்ற தேவைகள் தீராமல் - அவர்களின் வாழ்க்கைத்தரம் உயராமல் - ஒரு நாடு முன்னேறிவிட்டதாக எப்படிக் கொள்ள முடியும்? கேரட், பீன்ஸ், பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் இங்கே வரத்தொடங்கியபோது அவற்றை ‘இங்கிலீஷ் காய்கறிகள்’ என்றுதான் அழைத்தார்கள். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து உள்ளதென்றும் கண்பார்வைக் குறைபாட்டை இது சரி செய்யும் என்றும் அலோபதி டாக்டர்கள் சொன்னார்கள். கேரட் பனிப்பிரதேசத்தில் விளைவது. முருங்கைக் கீரை நமது வெப்பநிலையில் வளர்வது. இன்று முருங்கைக்கீரைதான் கண்ணுக்கு நல்லது என்று மருத்துவ ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. நாம் முருங்கைக் கீரையைவிட கேரட்டைத்தான் அதிகம் நம் குழந்தைகளுக்குச் சமைத்து கொடுத்திருப்போம். கண்ணாடி அணிந்த முகங்கள் இங்கே குறைந்திருக்கிறதா என்று சொல்லுங்கள்! இது ஒரு உதாரணம்தான். இப்படித்தான் ஒவ்வொன்றும்.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இன்னுமொரு பின்னடைவு அதன் தேசியக் கொள்கை. அது இந்தியாவில் இருக்கிற பன்முகத் தன்மை கொண்ட இனங்களையும், பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. இந்தி என்கிற ஒரு மொழியின் மூலம் கோதுமை என்கிற ஓர் உணவின் மூலம் எல்லோரையும் கட்டிவைக்கப் பார்க்கிறது. இந்தியாவில் போக்ரான் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்ந்தபோது, அது குறித்து அருந்ததிராய் எழுதிய சில வரிகள் என் நினைவுக்கு வருகின்றன... ‘நடந்து முடிந்த சோதனைகள் அணு சோதனைகள் அல்ல; தேசியத்தின் சோதனைகள் என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறார்கள். அணுகுண்டுதான் இந்தியா; இந்தியாதான் அணுகுண்டு. வெறும் இந்தியா அல்ல. இந்துக்களின் இந்தியா. எனவே எச்சரிக்கையாய் இருங்கள். இது குறித்த உங்கள் விமர்சனம் தேசியத்துக்கு எதிரானது அல்ல; இந்துக்களுக்கு எதிரானது’. (‘கற்பனை முடிந்துபோனது’, சவுத் விஷன் வெளியீடு.)

தேசியம் என்கிற பெயரில் - பாதுகாப்பு என்கிற பெயரில் - ராணுவத்தை முன்னிறுத்தி, விவசாயத்தைக் கவனிக்காமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது நிலத்தையும் நீரையும் தாதுக்களையும் ஏகபோகத்திற்கு ஏலம் விடும் ஒரு நாடு எப்படி வல்லரசாக முடியும்? சுரங்கங்களுக்காகவும், அணைகளுக்காகவும், மின்சாரத்துக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் மக்கள் அவர்களின் சொந்த நிலங்களிலிருந்து துரத்தப்படுகிறார்கள். இருத்தலின் பிரச்னையில் - வாழ்வா, சாவா போராட்டத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தலை தூக்கியிருக்கிறார்கள். மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து இனங் காண்பது முடியாத காரியமாகி வருகிறது. மக்கள் பயந்து பயந்து வாழும் ஒரு நாட்டை வளர்ந்த நாடாக எப்படி ஒப்புக் கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

மக்கள்தொகையைப் போலவே கட்டுப்பாடில்லாமல் இங்கே வளர்ந்து நிற்பது நுகர்வோர் சமூகம்தான். அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வலைவிரித்து நிற்கின்றன. இங்குள்ள தேசிய முதலாளிகளும் அவர்களோடுதான் கைகோர்த்து நிற்கிறார்கள். மிளகாய் முதல் தேங்காய¢ வரை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் வருமானத்தை நமது தேசிய வருமானமாகக் கொள்ள முடியாது. அது அந்தந்த நாடுகளின் தேசிய வருமானம்தான். தமது செல்வத்தையும் வருமானத்தையும் அடுத்த நாடுகளுக்கு அள்ளித் தந்து, மக்களின் வறுமையை வேடிக்கை பார்க்கும் நாடு எப்படி ஒரு வல்லரசாக முடியும்? எனக்குள் இத்தனைக் கேள்விகளையும் அதிர்வுகளையும் அலசல்களையும் ஏற்படுத்தியது, லண்டன் பொருளாதாரக் கல்வி மையத்தில் உலகப் புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா ஆற்றிய உரைதான். ‘இந்தியா வல்லரசாக முடியாது’ என்பதற்கு அவர் பத்து காரணங்களை முன் வைத்துப் பேசியிருக்கிறார். இவரது இந்தப் பேச்சுதான் இன்று உலகெங்கும் வைரஸ் போல பரவிக் கொண்டிருக்கிறது... என்னிடமிருந்து இப்போது உங்களுக்கு.
(சலசலக்கும்)