விஜயா டிச்சர்






இதுவரை...
முப்பதுக்கும் மேலான பெண் பார்க்கும் படலங்களைத் தாண்டியும், திருமணம் கை கூடாத முப்பது வயது ஆசிரியை நம் ஹீரோயின் விஜயா. அப்பா கோபாலகிருஷ்ணன் காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கிறார். போக்குவரத்துத் துறையில் வேலை பார்க்கும் அண்ணன் சோமசுந்தரம், அக்கா மங்கை, அவள் கணவர் ரத்னவேல், இரட்டைத் தங்கைகள் ராதா - சீதா, தம்பி ஆனந்த் என பெரிய குடும்பம். வீட்டில் அரவணைப்பு இல்லாததால், தன் ஆதங்கங்களை விஜயா பகிர்ந்துகொள்வது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கலைச்செல்வனிடம் மட்டுமே! விஜயாவின் சக ஆசிரியை ஈஸ்வரியின் கணவருக்கு விபத்து நேர்கிறது. அந்தச் சூழலில் கலைச்செல்வன் காட்டும் அக்கறை, அவர்மீது விஜயாவுக்கு ஈர்ப்பு உண்டாகக் காரணமாகிறது. அவரிடம் தன் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறாள். இந்நிலையில் ஈஸ்வரியின் கணவர் இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது.
இனி...


அவசர சிகிச்சைப் பிரிவு என்ற போர்டுக்கு கீழே உட்கார்ந்திருந்த ஈஸ்வரி கண்ணீர் வற்றிப் போயிருந்தாள். ஒரே ஒருமுறை அவளால் வீட்டுக்காரரை உள்ளே போய்ப் பார்க்க முடிந்தது. அப்போதுகூட, ‘‘உன் முகத்தில் முழிச்ச ராசி... என் கதியைப் பாத்தியா..?’’ என்று கடுமையான குரலில் திட்டுவானோ என்று பயந்தபடியேதான் உள்ளே போனாள். நல்ல மயக்கத்தில் இருந்தான். அதனால் அவள் பயந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.



அதன்பிறகு ஈஸ்வரியை டாக்டர் தயக்கத்தோடு அழைத்து, ‘‘தலையில் அடிபட்டிருந்ததால் அவரைக் காப்பாத்த முடியலை... ஸாரி!’’ என்றபோது அவளுக்கு அழுகையே வரவில்லை. கிட்டத்தட்ட இதை எதிர்பார்த்திருந்தாள் அவள்.

‘தன்னுடைய விடுதலைக்கு இது நல்ல வாய்ப்பு’ என்பதுபோலத்தான் அவள் உள்ளம் எண்ணிக் கொண்டிருந்தது. மாமியாரும் நாத்தனாரும் கதறி அழுதபோது, அவள் மகனை தனியே அழைத்துக் கொண்டுபோய் பிஸ்கெட்டும் காபியும் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


கலைச்செல்வனும் விஜயாவும் பதறி ஓடிவந்தார்கள். ‘ஈஸ்வரியை எப்படித் தேற்றப் போகிறோம்’ என்ற பதைபதைப்போடு வந்த இருவரும் அவளுடைய நிதானத்தைப் பார்த்து திகைத்துவிட்டார்கள். விஜயா மறுபடி மறுபடி கெஞ்சினாள். ‘‘ஈஸ்வரி... துக்கத்தை அடக்காத. அழுது தீர்த்திடு... நெஞ்சு வெடிச்சுடும்டி... தயவுசெய்து அழுதுடு’’ என்று பலமுறை சொல்லியும் ஈஸ்வரி அமைதியாகவே இருந்தாள்.

கலைச்செல்வன் வந்து, ‘‘மேடம்... உங்க மகனை நினைச்சுப் பாருங்க. நீங்களும் இப்படி இருந்தா அவனுக்கு யாரு வழிகாட்டுவா? உங்க துக்கத்துல இருந்து வெளியே வரணும்னா இப்போ அழுது தீர்க்கறதுதான் சரியா இருக்கும்...’’ என்றார்.

ஈஸ்வரி நிதானமாக விஜயா பக்கம் திரும்பினாள். ‘‘என் வாழ்க்கையிலே நான் அவருக்காக அழ வேண்டியதை எல்லாம் அவரு இருந்தப்பவே அழுது முடிச்சுட்டேன்... இப்போ என்னை சிரிக்கச் சொன்னால் சந்தோஷமா சிரிப்பேன். சபையிலே நல்லாயிருக்காதுனு அமைதியா இருக்கேன்... என்னை இந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடு... எனக்கு துக்கமெல்லாம் இல்லை...’’ என்றாள்.

விஜயாவுக்கு இந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது.
ஆஸ்பத்திரி ஃபார்மாலிட்டியில் தொடங்கி எல்லா விஷயங்களையும் கலைச்செல்வன் கையில் எடுத்துக் கொண்டார். ‘‘அம்மா... ஈஸ்வரி... உன் நிலைமை இப்படியா ஆகணும்..?’’ என்று அழுது புலம்பியபடி அவள் அம்மா வந்தபோது மட்டும் ஈஸ்வரியின் கண்களில் லேசாக ஈரம் எட்டிப் பார்த்தது. அம்மாவோடு வந்த ஈஸ்வரியின் தம்பி ரவி, கலைச்செல்வனின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.



‘‘ரொம்ப தேங்க்ஸ் சார்! நீங்க இல்லைன்னா எங்கக்கா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா... அவரு மகராசன் அடிபட்டு வந்து படுத்துக்கிட்டாரு... அக்கா அல்லாடியிருக்கா! நீங்க எல்லாரும் துணையா இருந்திருக்கீங்க... அந்த மனுஷனை கடைசியாப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தோம். அவரு என்ன பழகியிருக்காருனு பார்த்தாலே தெரியுதே... சொந்தக்காரங்க, சிநேகிதங்கன்னு பக்கத்துல ஒருத்தனும் இல்லை... ரொம்ப நன்றி சார்!’’ என்றான்.

‘‘ஐயோ... பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க. இதிலே என்ன இருக்கு? எனக்கு முடிஞ்சதை நான் செய்தேன்... என்கூட வேலை பார்க்கிறவங்களுக்கு செய்றதை நான் உதவியா நினைக்கலை... ரொம்ப பெரிசுபடுத்தாதீங்க... பாடியை வீட்டுக்குக் கொண்டு போறதுக்கு ஆம்புலன்ஸ் பார்த்துட்டு வந்திடறேன்...’’ என்று நகர்ந்துவிட்டார் கலைச்செல்வன். விஜயா பிரமை பிடித்தது போல கலைச்செல்வனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

அன்றைய நாள் முழுவதும் ஈஸ்வரியுடனேயே இருந்தாள் விஜயா. பிறந்த வீட்டுக் கோடித் துணி வெள்ளையில்தான் போடவேண்டும் என்று அம்மா சொன்னபோதுகூட தீர்மானமாக மறுத்த ஈஸ்வரி, தம்பி ரவியிடம் கலர் சேலை வாங்கிவரச் சொன்னாள். விஜயாவுக்கு ஈஸ்வரியின் மன திடம் ஆச்சரியமாக இருந்தது.

எல்லாம் முடிந்து தலைமுழுகிய ஈஸ்வரி, ‘‘விஜயா... நீ வேணா வீட்டுக்குப் போயிட்டு வா... நான் நல்லாத் தூங்கி ரெண்டு நாளாச்சு... நான் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கிறேன்...’’ என்று சொல்லிவிட்டு உள் அறைக்குள் போய்விட, விஜயா வீட்டுக்குப் புறப்பட்டாள்.

விஜயா வீட்டுக்குள் நுழைந்தபோது நடுக்கூடத்தில் வடிவேலும் ரத்னவேலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். விஜயாவைப் பார்த்ததும் சட்டென்று எழுந்த வடிவேல், ‘‘நல்லாயிருக்கீங்களா..?’’ என்றான். ‘‘ம்...’’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு நேராக பாத்ரூம் நோக்கிச் சென்றாள். கூடத்தைத் தாண்டி உள் அறைக்குள் போய், ‘‘அம்மா... எனக்கு டிரஸ் எடுத்துப் போடுங்க!’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது சீதா அழுத கண்களோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.

‘‘என்னாச்சு சீதா..?’’ என்றாள் விஜயா.
அம்மா நடுவில் புகுந்து, ‘‘நீ குளிச்சுட்டு வா... நான் சொல்றேன்!’’ என்று விஜயாவை பாத்ரூமுக்குள் தள்ளினாள்.
விஜயாவும் சீதாவும் மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

‘‘அக்கா... இந்தக் கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்! இந்த ஆளு என்னன்னா காலேஜுக்கே வந்து நின்னுக்கிட்டு, ‘மோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன்... அளவு சரியா இருக்கான்னு பார்த்துச் சொல்லு... இல்லைன்னா கடையிலே குடுத்து மாத்தணும்’னு வழியறாரு. காலேஜ்ல எனக்கு அவமானமாப் போச்சு...’’ என்று விசும்பினாள்.
விஜயாவுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

‘‘சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்...’’ என்ற விஜயாவிடம், ‘‘எனக்கு என்னமோ பயமா இருக்கு அக்கா! எதுக்கு எனக்கு இப்போ இப்படி அவசரமா ஒரு மாப்பிள்ளை... உனக்கு முன்னால..?’’ என்று மேலும் விசும்பினாள். ஆறுதலாக அவள் தோள் பற்றிய விஜயா, ‘‘இல்லை... நம்ம வீட்டுல வரிசைப்படிதான் கல்யாணம் நடக்கும். நானாச்சு அதுக்கு... ஏன் கவலைப்படுறே..?’’ என்றாள்.

மனசுக்குள் ஒருமுறை கலைச்செல்வனின் முகம் வந்து போனது.

பஸ் ஸ்டாப்பில் ஆனந்த் நின்று கொண்டிருக்க... பதற்றமாக வந்தாள் நளினி.

‘‘நீங்க கவிதாவோட சித்தப்பாதானே? எனக்கு சின்ன பிரச்னை... எங்க ஸ்கூல் சீனியர்ஸ் என்னை ஃபாலோ பண்ணி கலாட்டா பண்றாங்க... என்னை வீட்டுல விட்டுற முடியுமா..?’’ என்றாள்.

ஆனந்த் ஆக்ரோஷமாகி, ‘‘எங்கே அந்தப் பசங்க?’’ என்றான்.
அதோ என்று அவள் கைகாட்டிய பெட்டிக் கடையில் நான்கைந்து பேர் நின்று கூல் டிரிங்க்ஸ் குடித்துக் கொண்டிருந்தார்கள். நேராக அவர்களிடம் சென்ற ஆனந்த் ஏதோ பேச, நளினி பதற்றமாகக் காத்திருந்தாள். சிறிதுநேர வாக்குவாதத்துக்குப் பிறகு லேசாக ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடிக்க... தள்ளுமுள்ளு ஆனது. உதறிக் கொண்டு வேகமாக வந்த ஆனந்த், ‘‘இனிமே அந்தப் பசங்க உங்க வழிக்கே வரமாட்டாங்க... வாங்க போகலாம்...’’ என்று நடந்தான் நளினியோடு இணைந்து!

நளினியின் வீடு இருக்கும் தெருமுனையில் அவளை விட்டுவிட்டு, ‘‘பொம்பளைப் பிள்ளைகளுக்கு தைரியம் வேணும்ங்க... இன்னைக்கு நான் இருந்தேன், உங்களைக் காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டேன். தினம் தினம் உங்களைக் காப்பாத்த நான் வாழ்க்கை பூரா உங்க கூட வரமுடியுமா..?’’ என்று சொல்லிவிட்டு நளினியின் கண்களைப் பார்த்தான். லேசான வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே ‘பை’ சொல்லிவிட்டுப் போனாள். அவளுடைய கூந்தல் காற்றில் அலைபாய... ஆனந்த் மொத்தமாக நிலைகுலைந்துவிட்டான்.
தந்தையின் கடையில் கடலைப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கிய விஜயா, கடைவீதியில் கலைச்செல்வனைப் பார்த்து ஆச்சரியமாகி விட்டாள். ‘‘என்ன... உங்க வண்டி என்னாச்சு..?’’ என்றாள் வேகமாக அருகில் நெருங்கிப் போய்.

‘‘சர்வீஸ் கொடுத்தேன்... ரெடியாகிடும்னு சொன்னான்; ஆனா, ரெடி பண்ணலை. அதான், நடராஜா சர்வீஸில் போயிட்டிருக்கேன்...’’ என்றார். அவருக்கு ஒரு கை கடலையைக் கொடுத்தாள். ‘‘ரொம்ப தேங்க்ஸ்...’’ என்றார்.

‘‘நீங்க என்னவெல்லாமோ செய்றீங்க... அதுக்கு முன்னால் இந்தக் கடலை ஒண்ணுமே இல்லை...’’ என்றாள் விஜயா. இருவரும் பள்ளிக்கூடம் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
‘‘ஒரு விஷயம் உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன்... இந்த சமூக சேவைங்கறது உங்க கூடப் பிறந்த குணமா... ஈஸ்வரிக்கு பண்ணிய உதவியையாவது, ‘கூட வேலைபாக்கிறவங்கன்னு ஒரு அக்கறை’ன்னு சொல்லலாம். ஆனால், அங்கே போன இடத்தில் ரத்தம் கொடுத்துட்டு வந்தீங்களே... அதனால்தான் கேட்கிறேன்...’’ என்றாள் விஜயா.
அவள் பேச நினைத்த விஷயம் வேறு. ஆனால், எங்காவது ஆரம்பிக்க வேண்டுமே என்று ஆரம்பித்தாள்.

‘‘சமூக சேவையெல்லாம் இல்லைங்க... முழுக்க சுயநலம்...’’ என்றார் கலைச்செல்வன்.

‘‘என்ன சொல்றீங்க... ஊரு, பேரு தெரியாத ஆளுக்கு ரத்தம் கொடுக்கறதுல என்ன சுயநலம் இருக்கமுடியும்?’’ என்று குழம்பினாள் விஜயா.

‘‘எங்கம்மாவும் தங்கையும் ஊருல இருக்காங்க... என்னால் அவங்களை பக்கத்துல வச்சு பார்த்துக்க முடியலை. இங்கே வரமாட்டேன்னுட்டாங்க. அம்மா நோயாளி... தங்கைக்கு லேசா கால்ல ஊனம்... நடையில் சின்ன வித்தியாசம் தெரியும். இங்கே நான் யாருக்காவது ஏதாவது உதவி செய்தா, அங்கே அவங்களுக்கு தேவை வரும்போது யாராவது உதவி செய்வாங்கன்னு ஒரு நம்பிக்கை... இப்போ சொல்லுங்க, இது சுயநலம்தானே!’’ என்றார்.

இருவரும் பள்ளிக்குள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரை நோக்கிப் போனார்கள். அங்கே அவர்களுக்கு முன் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தாள்
ஈஸ்வரி.
(தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்