கல்பாக்கத்துக்கு அருகில் கடலில் எரிமலை..





கடந்த சில வாரங்களாக குலை நடுங்கிக் கிடக்கிறார்கள் கல்பாக்கத்தை ஒட்டியுள்ள மீனவர்கள்.  ‘‘வழக்கமா நாங்க கரையோரத்திலதான் மீன்பிடிப்போம். கொஞ்சநாள் முன்னாடி பனையூர், தழுதாளிக்குப்பம் மீனவர்களோட சேர்ந்து 20 படகுகள்ல கடலுக்குப் போனோம். பாதிப்பேரு ஆலம்பரக்கோட்டை பக்கம் போயிட்டாங்க. 10 போட்காரங்க மட்டும் எதிர்ப்பக்கமா ஒதுங்கி வலையைப் போட்டுக்கிட்டிருந்தோம். காலையில ஏழரை மணி. திடீர்னு தண்ணிக்குள்ள இருந்து பெரிசா புகைமூட்டம் கிளம்புச்சு. அதைப் பாத்துட்டு பாதிப் பேரு வலையை விட்டுட்டு கரைக்குக் கிளம்பிட்டாங்க. நாங்க நாலு போட்காரங்க மட்டும் புகைக்குள்ள சிக்கிட்டோம். இருட்டுல சிக்கின மாதிரி இருந்துச்சு. தண்ணி திடீர்னு சூடாகிருச்சு. 2 நிமிஷத்தில புகை மறைஞ்சிருச்சு. அதுக்குப்பிறகு வலையை இழுத்தா எல்லாம் துண்டு துண்டாகிக் கிடக்கு. ஒரு மீனும் ஆப்புடலே. கரைக்கு வந்து மீன் வளத்துறை அதிகாரிகள்கிட்ட சொன்னோம். ‘அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. போய் வேலையைப் பாருங்க’ன்னு அனுப்பிட்டாங்க...’’ என்கிறார் பரமன்கேணி குப்பத்தைச் சேர்ந்த முனியன்.

‘‘அந்தப் புகையைப் பாத்ததுல இருந்து தூக்கமே வரமாட்டேங்குது சார். வழக்கமா கடற்படை ரோந்து படகுகள் போனா அப்படி புகை கிளம்பும். ஆனா, அன்னைக்கு அப்படி எந்தப் படகும் போகலே. முதல்ல சுனாமிதான் வந்துருச்சுன்னு நினைச்சேன். நாங்கள்லாம் கடலுக்கு நல்லா பழக்கப்பட்ட ஆளுங்க. இப்போவெல்லாம் கடலுக்குள்ள புதுசு புதுசா ஏதேதோ நடக்குது. தொழிலுக்குப் போகவே பயமா இருக்கு சார்...’’ என நடுக்கத்தோடு சொல்கிறார் இதே ஊரைச் சேர்ந்த மணி. கடலுக்குள் திடீர் புகை கிளம்பக் காரணம் என்ன..? ‘‘எரிமலைதான்...’’ என்று பீதியைக் கூட்டுகிறார் கல்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி.

‘‘இதுமாதிரி சம்பவங்களை ‘ஸ்மால் வேல்யூம் வல்கலைன் எரப்ஷன்’னு சொல்வாங்க. கல்பாக்கத்தில் இருந்து 104 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில், பாண்டிச்சேரியில் இருந்து 100 கி.மீ கிழக்குத் திசையில் கடலுக்குள் ஒரு பிரமாண்டமான எரிமலை இருக்கு. ஜப்பான், ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகு, கடந்த மே மாதம் சர்வதேச அணுசக்திக் கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கு. எரிமலைகளால் அணுஉலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி தீவிர ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று அதில் சொல்லியிருக்காங்க. இந்தியாவில், வங்காள விரிகுடாவில் ஒரு கடல் எரிமலை இருப்பதாவும் அந்த அறிக்கை குறிப்பிடுது.

அமெரிக்காவில் இருக்கும் ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட், ஒரு இணையதளத்தைத் தொடங்கி கடந்த 10 ஆயிரம் வருடங்களில் வெடித்த எரிமலைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு எண்கள் கொடுத்து வரிசைப்படுத்தியுள்ளது. அதில் கல்பாக்கத்தை ஒட்டியுள்ள இந்த எரிமலையும் இடம்பெற்றுள்ளது. அதற்கான அடையாள எண்: 0305-01. இந்த எரிமலை 1757ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சீற்றம் காட்டியிருக்கிறது. இதற்கும் ஆதாரங்கள் உள்ளன. 1773ல் எட்மண்ட் பர்க் என்பவர் தொகுத்த ‘த ஆனுவல் ரெஜிஸ்டர்’ என்ற ஆவண நூலில், இந்தக் கடல் எரிமலை வெடித்ததைப் பார்த்த ஒரு மாலுமியின் கடிதம் இடம்பெற்றுள்ளது. அவர் சொல்லும் காட்சி விவரணைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. 1981ல் ஓஎன்ஜிசி வல்லுனர் குழுவைச் சேர்ந்த வி.வி.சாஸ்திரி என்பவர் இந்தக் கடல் பகுதியில் நடத்திய பெட்ரோல் தொடர்பான ஆய்வில், எரிமலைக் கற்கள் குவிந்து கிடப்பதைக் கண்டறிந்துள்ளார்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கடல் எரிமலைகளை ஆய்வு செய்த வல்லுனர் ஹெடர்வாரி, பாண்டிச்சேரிக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில் உள்ள எரிமலை பற்றியும் எழுதியிருக்கிறார். இப்படி பல ஆதாரங்களை அடுக்கியும் இந்தியப் புவியியல்துறை விஞ்ஞானிகள் இதுவரை எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்துச் சிதறிய எரிமலைகளே மீண்டும் வெடிக்க வாய்ப்புண்டு என்கிறது சர்வதேச அணுசக்திக்கழகம். ஆனால் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு அருகில் 250 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த எரிமலை இருக்கிறது. குமுறிக்கொண்டிருக்கும் கடல் எரிமலை வெடித்தால் மிகப்பெரும் சுனாமி ஏற்படலாம். அதன் விளைவுகளைக் கற்பனை செய்யமுடியாது...’’ என்கிறார் புகழேந்தி.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை ஒட்டி கடலில் எரிமலை இருப்பது உண்மையா..? வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக இயற்கைப் பேரிடர் தடுப்பு மேலாண்மை மையத்தின் இணைப் பேராசிரியர் ஜி.டி.கணபதியிடம் கேட்டோம். ‘‘சில புத்தகங்களில் உள்ள குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்லிவிட முடியாது. பாண்டிச்சேரி என்ற பெயரில் ஒரு ஊர் மட்டும் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் 1750வாக்கில் இந்தியக் கரையில் நான்கு பாண்டிச்சேரிகள் இருந்தன. அதில் ஆந்திராவின் ஓங்கோலுக்கு அருகே இருந்த பாண்டிச்சேரியும் ஒன்று! அங்கிருந்து 240 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கடல் பகுதியில் ஒரு எரிமலை இருந்ததாக ஜே.சி.கிரேடி என்பவர் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு எரிமலை தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. இந்தியப் புவியியல் துறை நடத்திய ஆய்வுகள் எதுவுமே, கல்பாக்கம் அருகில் கடலில் எரிமலை இருப்பதாகக் குறிப்பிடவில்லை. ஒருசில அமெரிக்க ஆய்வுகள் மட்டுமே இங்கு எரிமலை இருப்பதாகச் சொல்கின்றன.

எரிமலையில் பல ரகங்கள் உண்டு. சில எரிமலைகள் நெருப்பைக் கக்காது. அதிபலத்துடன் வெடிக்காது. சில எரிமலைகள் வெறும் மணலைக் கக்கக்கூடியவை. தூங்கும் எரிமலைகள் கூட உண்டு. அவை வெடிக்கலாம்; வெடிக்காமலும் போகலாம். நிலத்தில் உள்ள எரிமலைக்கும், கடலில் உள்ள எரிமலைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கடற்கரையிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு எரிமலை ஒருவேளை வெடித்தாலும், அதனால் கரையில் இருக்கும் யாருக்கும், எதற்கும் ஆபத்து வராது! அமெரிக்காவின் ஹவாய் தீவில் தினம் தினம் எரிமலை சீற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் யாருக்கும் ஆபத்து ஏற்படுவதில்லை’’ என்கிறார் கணபதி.

சரி... கடலில் புகை கிளம்பியது எதனால்? ‘‘பூமிக்குக் கீழே பாறைக்குழம்பு ஓடிக்கொண்டு இருக்கிறது. கடலுக்கு அடியில் இருக்கும் தரைப் பிளவுகள் வழியாக சில சமயங்களில் அது வெளியில் பீறிட்டு வரும். பாறைக்குழம்பு படும் இடங்களில் கடல்நீர் 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை சூடாகும். கொதிநிலை அதிகமாகும்போது கடல்நீர் ஆவியாகி சமயங்களில் 30 மீட்டர் உயரம்வரைகூட நீராவி புகையாகக் கிளம்பும். அதைப் பார்த்துத்தான் இவர்கள் பயந்திருப்பார்கள். இந்த சம்பவத்தை மட்டும் வைத்து அப்பகுதியில் எரிமலை இருப்பதாகச் சொல்லமுடியாது’’ என்று கூறுகிறார் கணபதி.
- வெ.நீலகண்டன் படங்கள்: கங்காதரன்