திருப்புமுனை





‘‘சிவபெருமான் உலகத்துக்கெல்லாம் படியளந்துட்டு வீட்டுக்கு வந்ததும் அவரை வம்பிழுத்தாங்க பார்வதி. ‘எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்து முடிச்சிட்டீங்களா’ன்னு கேட்டாங்க. சிவபெருமான் ஜோரா தலையாட்டினாரு. சிரிச்சிக்கிட்டே ஒரு டப்பாவைத் தொறந்து அதுல இருந்த எறும்பைக் காட்டி, ‘இதுக்குமா?’ன்னு கேட்டாங்க. ‘நல்லா பாரும்மா’ன்னாரு சிவபெருமான். பார்வதி உத்துப் பார்த்தா, அந்த எறும்போட வாயில் ஒரு அரிசி இருந்துச்சாம்’’ என்று என் அம்மா கதை சொல்லி முடிக்கிற நேரத்தில், தூக்கம் கலைந்து எழுந்து  உட்கார்ந்திருக்கேன். எல்லாரும் கதை கேட்டு

தூங்குவாங்க. நான் சின்ன வயசுலேயே கதை கேட்டு முழிச்சிக்கிட்டு இருப்பேன். எறும்புக்கே படியளக்கிற எஜமான், என்னையா கண்டுக்காம உட்ற போறான்?’’

- குழந்தையாகவே சிரிக்கிறார் எஸ்.மனோகர். காஞ்சிபுரம், சென்னை, பெங்களூர் நகரங்களில் காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பட்டுச் சேலைகள் கிடைக்கிற எஸ்.எம். சில்க்ஸ் நிறுவனர். பேச்சும் உழைப்பும் இவரை ஏற்றி வைத்த ஏணிகளாக இருக்கின்றன.

‘‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு பெரியவங்க சொல்வாங்க. அது என் வாழ்க்கையில பலிச்சது. தயக்கம்னா என்னன்னு தெரியாது. பேசினா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு எல்லாம் இல்லை; நாம வெட்டினா துண்டு நாலா விழற மாதிரி பேசிடுவேன். ‘முதுகுக்குப் பின்னால மனோகர் பேசமாட்டான்’னு மத்தவங்க சொல்ற மாதிரி வெளிப்படையா இருப்பேன். ஒளிக்கிறது, மறைக்கிறதும் திருட்டுப்பசங்க செய்யுற வேலை. அதை நாம எதுக்குப் பண்ணணும்?


காஞ்சிபுரம் பக்கம், முத்தியால்பேட்டை கிராமத்துல மூணு வேளை சோறு ஒழுங்கா கிடைக்காத குடும்பம். அப்பாவுக்கு நிரந்தர வேலை இல்லை. பள்ளிக்கூடத்துல காமராஜர் மதிய உணவுத் திட்டம் எடுத்துட்டு வரலைன்னா, என்னை மாதிரி பசங்க ஸ்கூல் பக்கமே போயிருக்க முடியாது. படிக்கிறதுக்கு புஸ்தகம் எடுத்துட்டுப் போறேனோ இல்லையோ, சாப்பிடறதுக்கு மறக்காம தட்டு எடுத்துட்டுப் போயிடுவேன். தட்டுத் தடுமாறி பி.யூ.சி வரைக்கும் படிச்சேன். காலேஜ்ல செருப்பு கட்டாயம் போடணும்னு சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் கால்ல செருப்பு போட்டதே இல்லை. ஒரு ஜோடி செருப்பு வாங்கறதுக்கு, எங்கப்பா பட்ட கஷ்டத்தை கண்ணால பார்த்தேன். வாங்கின செருப்புக்கு ஏதாச்சும் ஆயிட்டா, திரும்ப வீட்ல வாங்கித் தர முடியாது. காலேஜ் வாசல் வரைக்கும் செருப்பை பேப்பர்ல சுத்தி எடுத்துட்டு வந்து, உள்ளே நுழையும்போது போட்டுக்குவேன். உள்ளே போனதும் பழையபடி பேப்பர் சுத்தி பைக்குள்ள வச்சுடுவேன்.

அம்மாவுக்கு கடவுள் பக்தி அதிகம். நிறைய கதைகள் சொல்லி வளர்த்தாங்க. ‘சோத்துக்கு உப்பு எப்படியோ, பாலுக்கு சர்க்கரை எப்படியோ, அப்படிதான் வாழ்க்கைக்குப் பணம்’னு சொல்லுவாங்க. சின்ன வயசுல கல்வெட்டு மாதிரி மனசுல பதிஞ்சது. அவங்ககிட்டே இருந்துதான் எனக்கும் கடவுள் நம்பிக்கை வந்தது. பி.யூ.சி வரைக்கும் படிச்சதே கடவுள் புண்ணியம். அதுக்கு மேல படிப்பு பத்தி யோசிச்சா, அது பகல் கனவு. வீட்டைப் பாத்துக்கணும், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணணும்னு பொறுப்புகள் தலைமேல ஏறவே, வேலைக்குக் கிளம்பியாச்சு. கஷ்டம் இல்லாம வாழணும்ங்கிறதுதான் அப்போதைக்கு ஒரே லட்சியம். முன்னேறுவதற்கு மத்தவங்க என்னெல்லாம் இலக்கணம் வச்சிருக்கிறாங்கன்னு தெரியலை. எல்லா இலக்கணத்தையும் நானே தட்டுத் தடுமாறி உருவாக்கிக்கிட்டேன்.


சென்னையில் ஒரு பிரஸ்ஸில் 40 ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை. மை வாசம் உடம்புல எல்லாம் வீசும். எந்தத் துணி போட்டாலும் கறையாகிடும். அதனாலேயே அந்த வேலை பிடிக்கலை. கொஞ்ச நாள் பெயின்ட் அடிக்கிற வேலைக்குப் போனேன். அதுலயும் மனசு ஒட்டலை. 1973ல் குஜராத்தைச் சேர்ந்தவங்க நடத்துன ஜவுளி நிறுவனத்துல கணக்கு எழுதுற வேலை கிடைச்சது. ‘ஜவுளி’ங்கிற வார்த்தை அப்போதான் அறிமுகம். அதுதான் வாழ்க்கையை மொத்தமா மாத்திப் போட்ட இடம். சுத்தி இந்தி பேசறவங்களா இருந்தாங்க. எங்க இருந்தாலும் பேசாம என்னால இருக்க முடியாது. வேலையும் கத்துக்கிட்டு அப்படியே இந்தியும் கத்துக்கிட்டது, பின்னால ரொம்ப உதவியா இருந்துச்சு.

அரை நாள்ல என் வேலையை முடிச்சிட்டு மத்த டிபார்ட்மென்ட்கள்ல இருக்கிறவங்களுக்கு உதவிக்குப் போய், அப்படியே எல்லா வேலைகளையும் கத்துக்கிட்டேன். குதிரைக்குக் கடிவாளம் கட்டின மாதிரி ஒரே வேலையைப் பார்த்துட்டு இல்லாம, மத்ததையும் தெரிஞ்சிக்கிட்டது முன்னேற்றத்துக்கு பலமான அஸ்திவாரமா அமைஞ்சது. ‘இது என் வேலை இல்லையே’ன்னு யோசிக்கிறவன் முன்னேறவே முடியாது. ‘எல்லா வேலையும் என் வேலை’ன்னு நினைக்கிறவன் தோக்கவே மாட்டான். இதுதான் நான் கத்துக்கிட்ட வாழ்க்கைப் பாடம்.

ஆபீஸ் முடிஞ்சதும் லுங்கி விக்க ஆரம்பிச்சேன். சென்னை பாரீஸ்ல ஏதாவது ஒரு ஆபீஸ் வாசல்ல நின்னா, வீட்டுக்குப் போறவங்ககிட்ட நாலு பீஸ் லுங்கியை சர்வ சாதாரணமா வித்துடுவேன். நான் வாய்ஜாலமா பேசறதை நிறைய கஸ்டமர்கள் ரசிச்சாங்க. சிலர் கடன் கேட்பாங்க. ‘கரன்ட் இல்லாம ஃபேன் சுத்தாது. காசு இல்லாம லுங்கி கிடைக்காது’ன்னு பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டே வித்துடுவேன். எனக்கு தொழில் செய்ய நல்லா வரும்னு முதன்முதலா அப்பதான் புரிஞ்சுது.

அப்போ இன்னொரு ஜவுளி கம்பெனியில சேல்ஸ் டிபார்ட்மென்ட்ல வேலைக்கு சேர்ந்தேன். 500 ரூபாய் சம்பளம். அது இன்னொரு திருப்புமுனை. நான் வேலைக்குச் சேர்ந்த இடத்துல, சேல்ஸ் ஆகாத சரக்கை லட்சக்கணக்குல ஸ்டாக் வச்சிருந்தாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டிருந்தாங்க. வேகமா மூவ் ஆகிற துணி ரெண்டு வாங்கறவங்களுக்கு, விக்காத துணியை இலவசமா தரலாம்னு ஐடியா சொன்னேன். ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’னு விளம்பரம் செய்தோம். இப்போ வருஷமெல்லாம் ‘ஆஃபர்’ போடுறாங்க. 1980ல இந்த ஐடியா புத்தம் புதுசு. பழசு எல்லாம் வித்துப் போச்சு. புதுத்துணிகளும் பரபரன்னு வித்தது. அப்படியே இரண்டு மடங்கு வியாபாரம். முதலாளி சந்தோஷத்துல எனக்கு சம்பளம் ஏத்துறதா சொன்னார். ஆயிரம் ரூபா ஏத்தினா பரவாயில்லைன்னு நினைச்சிட்டிருந்தா, 3 ஆயிரம் ரூபா மாச சம்பளம். நம்பவே முடியலை. கணக்கெழுதற வேலையைவிட, பொருளை வித்துக் கொடுத்தா நிறைய சம்பளம் குடுப்பாங்கன்னு புரிய ஆரம்பிச்சது. 

சேல்ஸ்ல நான் சூப்பர் ரிசல்ட் தந்தேன். ஊர் ஊரா போய் கம்பெனிக்கு புதுப்புது கஸ்டமர்களை தேடிக் கொண்டுவந்தேன். பத்து பேரை பார்த்தா எட்டு பேர்கிட்ட வியாபாரம் பண்ணிட்டு வந்துடுவேன். வளர்ச்சி மளமளன்னு வந்துச்சு. ‘பெங்களூருக்குப் போய் வேலை பார்க்க ரெடியா இருந்தா 10 ஆயிரம் ரூபா சம்பளம்’னு சொன்னாங்க. ‘துட்டு குடுத்தா சந்திர மண்டலத்துக்குப் போய் வேலை செய்யக்கூட ரெடி’ன்னு கிளம்பினேன். தமிழ், இங்கிலீஷ், இந்தி, தெலுங்கு தெரிஞ்சு வச்சிருந்த நான், பெங்களூர்ல கன்னடமும் கத்துக்கிட்டேன். தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு, நானும் கல்யாணம் முடிச்சு சந்தோஷமா இருந்தேன்.

என்னால லாபம் வந்தப்ப எல்லாம் ‘இந்திரன் சந்திரன்’னு புகழ்ந்த கம்பெனி, 70 ஆயிரம் ரூபா நஷ்டம் வந்தப்ப என்னைக் கட்டச் சொல்லுச்சு. பொருள் எடுத்தவன் துட்டு குடுக்காம ஓடிட்டான். தண்டனை எனக்கு! லட்சம் லட்சமா லாபம் வந்தப்ப, என்கிட்டேயா குடுத்தாங்க. நஷ்டத்தை என் தலையில கட்டினப்ப கோபமா வந்துச்சு. ‘கோடி ரூபா குடுத்தாலும் இன்னொருத்தர்கிட்ட கைகட்டி வேலை பார்க்கிறதில்லே’ன்னு அப்ப முடிவு செஞ்சேன். அதுதான் முக்கியமான திருப்புமுனை. சொந்த ஊருக்கே வந்து ‘சண்முகம் கட்பீஸ்’னு சொந்தமா கடை போட்டேன். 1987ம் வருஷம் ஏப்ரல் 17ம் தேதி சொந்தத் தொழில் பயணம் ஆரம்பிச்சது. ஏழை ஜனங்க அதிகம் இருக்கிற ஊர்ல ‘ஷர்ட் பிட், பேன்ட் பிட்’ வித்தேன். சின்ன ஊர்ல பெரிய வியாபாரம். நல்லா வியாபாரம் நடந்தாலும் லாபம் பெருசா இல்லை. 

காஞ்சிபுரம் பட்டு உலகமெல்லாம் பிரபலமா இருக்கு. அதுல லாபமும் அதிகம். பட்டுப் புடவை விக்கலாம்னு எடுத்த முடிவு அடுத்த திருப்பு முனையாச்சு. பரம்பரை பரம்பரையா பழம் தின்னு கொட்டை போட்ட ஜாம்பவான்கள் நிறைய பேர் இருந்தாங்க. எனக்கு அந்தத் தொழில்ல ‘அனா, ஆவன்னா’கூட தெரியாது. ‘இது வரைக்கும் செஞ்ச வேலையையெல்லாம் எம்.பி.ஏ படிச்சிட்டா ஆரம்பிச்சோம்’னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். காஞ்சிபுரத்தில் எஸ்.எம் சில்க்ஸ் தொடங்கினேன். ஒரே வாரத்துல 4 லட்சம் ரூபாய்க்கு சேல்ஸ் பண்ணேன். படிப்படியா சென்னை, பெங்களூர்னு கிளைகள் திறந்தேன். வாடிக்கையாளர்களுக்கு மத்தவங்க துணிப்பை, காலண்டர், எவர்சில்வர் சாமான்  தந்திட்டு இருந்தாங்க; 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல வாங்கறவங்கள்ல குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ‘கார்’ பரிசா தந்தேன் நான். இந்த மாதிரியான முயற்சிகளுக்கு நல்ல பலன் இருந்துச்சு. நம்பி வருகிற வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து தரமான பொருளையே தர முடிஞ்சா, அதுதான் வளர்ச்சின்னு நினைக்கிறேன். இந்த எண்ணம் இருக்கிற வரை என் முன்னேற்றத்திற்கு எந்தக் குறைவும் வராது’’ என்கிற மனோகரை, அவருக்கு மிகவும் விருப்பமான சாய்பாபா இரண்டு கைகளை உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். அச்சம் இல்லாமல் பேசவும், கவலை இல்லாமல் வாழவும் முடிகிற ஒருவரிடம் வெற்றி தேவதை விலகியா இருக்கப்போகிறாள்?

(திருப்பங்கள் தொடரும்...) படங்கள்: புதூர் சரவணன்