கான்ஸ்டபிள் டூ டி.எஸ்.பி





உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் போதும்... எந்தத் தடையையும் தகர்த்து சாதிக்கலாம். அதற்கு உதாரணம், இந்த குமார்தான். நேற்றுவரை இரண்டாம் நிலைக் காவலராக சல்யூட் போட்டுக் கொண்டிருந்த குமார், இன்று சல்யூட் வாங்கும் டிஎஸ்பியாக மாறியதற்குப் பின்னால் இருப்பது கடும் உழைப்பு... தன்னம்பிக்கை..! ‘‘எனக்கு திருவண்ணாமலை மாவட்டம் பீமாரப்பட்டிங்க. மலையாளின்னு ஒரு பழங்குடி சமூகம். 4வது படிக்கும்போதே அப்பாவும், அம்மாவும் இறந்துட்டாங்க. 3 சகோதரர்கள், 2 சகோதரிகள். இருந்தும் என்னை விழுப்புரத்தில உள்ள ஆதரவற்றோர் இல்லத்துல சேர்த்து விட்டாங்க. சேராப்பட்டு நல்மேய¢ப்பன் உயர்நிலைப் பள்ளியில 10வது வரைக்கும் படிச்சேன். பி.இ படிக்கணும்ங்கிறது லட்சியம். வசதியில்லை. ஆனா, நல்லாப் படிச்சேன். 10ம் வகுப்பு முடிச்சதும், ‘பாலிடெக்னிக் சேத்து விடுங்க. அதை முடிச்சுட்டு, எங்கயாவது வேலை பாத்துக்கிட்டே பார்ட் டைம்ல பி.இ படிச்சுக்கறேன்’னு அண்ணன்கிட்ட கேட்டேன். ஆனா, அவங்களால அப்போ அதுவும் முடியல. ஐ.டி.ஐ-லதான் சேர முடிஞ்சது. 


அப்பவே போலீஸ் வேலைக்கு ஆளெடுக்கிறதா கேள்விப்பட்டு அப்ளை பண்ணுனேன். பர்ஸ்ட் செலக்ஷன்லயே பாஸ் பண்ணிட்டேன். டிரெயினிங் முடிச்சு தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில வேலை. வேலையில சேர்ந்துட்டாலும் படிக்கலையேங்கிற வருத்தம் உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்துச்சு. வேலை பாத்துக்கிட்டே டிகிரி முடிச்சேன்.  என் நண்பர்கள் சிலர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிச்சிட்டிருந்தாங்க. அதைப் பத்தி என் மனைவி சுமித்ராகிட்ட சொன்னப்போ, ‘நீங்களும் முயற்சி பண்ணுங்களேன், நிச்சயம் பாஸ் பண்ணுவீங்க’ன்னு சொன்னா. அவ கொடுத்த அந்த நம்பிக்கைதான் நான் இந்த நிலைமைக்கு வர முக்கியமான காரணம். சரின்னு நானும் விளையாட்டா பிரிப்பேர் பண்ணிட்டுப் போனேன். வி.ஏ.ஓ வேலைக்காக நடந்த குரூப் 4 தேர்வு எழுதி பாஸ் பண்ணினேன். ஆனா, காத்திருப்போர் பட்டியல்ல வச்சிட்டாங்க. ‘இதைவிட பெரிசா சாதிக்கணும்... குரூப் 1 எழுதுங்க’ன்னு உற்சாகப்படுத்தினா மனைவி. வி.ஏ.ஓ வேலை வர்றதுக்குள்ள குரூப் 1 பாஸ் பண்ணிட்டேன். ‘ஆர்.டி.ஓ, வணிகவரி துணை ஆணையர், டி.எஸ்.பி போஸ்டிங்... இதுல எதைத் தேர்ந்தெடுப்பீங்க’ன்னு கேட்டப்போ, என் ஆர்வமும் ஆவலுமான டிஎஸ்பி வேலையை செலக்ட் பண்ணினேன். சின்ன வயசுல காவல்துறை பணி மேல எனக்கு பெரிசா ஆர்வம் இருந்ததில்லை. ஆனா யூனிபார்ம் மாட்டி, பயிற்சி முடிச்ச பிறகு அதுதான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். அந்த வேலையாலதான் சமூகத்துல எனக்கு மரியாதை கிடைச்சுச்சு. நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்...’’ - அடக்கமாகப் பேசுகிறார் குமார்.


குரூப் 1 பாஸ் பண்ணிய பிறகும் குமாருக்கு உடனடியாக வேலை கிடைத்து விடவில்லை. போராட்டமே அதற்குப் பிறகுதான். வழக்கமாக பழங்குடியினர் பிரிவில் தேர்வு செய்யப்படுபவர்களின் விபரங்களை மாநில எஸ்.சி, எஸ்.டி போர்டுக்கு அனுப்பி ஒரு ரிப்போர்ட் கேட்பார்கள். அந்த ரிப்போர்ட் கிடைத்த பிறகு பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் குமார் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அந்த ரிப்போர்ட் கிடைத்த பிறகும், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையாளி சமூகமே வசிக்கவில்லை. அரசிடம் இருந்து ஜி.ஓ வந்தபிறகுதான் பணி ஒதுக்கப்படும்’ என்று சொல்லி விட்டார்களாம். மூன்று வருடங்கள் காத்திருந்தார் குமார். அவரே அலைந்து திரிந்து பழைய ஜி.ஓக்களை சேகரித்துக் கொடுத்தும் நோ ரெஸ்பான்ஸ். டிஎன்பிஎஸ்சி தலைவராக நட்ராஜ் பொறுப்பேற்ற பிறகு அவரிடம் குமார் முறையிட, உடனடியாகக் கிடைத்திருக்கிறது வேலை.‘‘என்னோட இந்த வெற்றிக்குப் பின்னால நிறைய பேரோட பங்களிப்பு இருக்கு. குறிப்பா நட்ராஜ் அய்யாவுக்கும், உதயசந்திரன் சாருக்கும் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன்’’ என்று நெகிழும் கான்ஸ்டபிள் குமார், இனி ஐ.ஜி பணி வரை எட்டிப் பிடிக்கலாம்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்