அது நான் இல்லை!





சுதாவின் முகத்தில் வழக்கத்தைவிட அதிக பூரிப்பு! பின்னே... ஒரே நேரத்தில் சன் டி.வியில் மூன்று தொடர்களில் முகம் காட்டுவதென்றால் சும்மாவா? ‘உறவுகள்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘மருதாணி’ என மேடம் செம பிஸி...

‘‘இப்ப நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு. மலேசியால படிச்சிட்டிருந்த நான், ஸ்கூல் ஹாலிடேஸ்ல சென்னை வந்தேன். எனக்கு சின்ன வயசுலேருந்தே பாட்டு ரொம்பப் பிடிக்கும். பாட்டு கத்துக்கிட்டே, மேல் படிப்பையும் தொடர்ந்திட்டிருந்தப்ப, காம்பியரிங் பண்ண வாய்ப்புகள் வந்தது. ‘நடிக்கிறீங்களா’ன்னு நிறைய பேர் கேட்டாங்க. அதைப்பத்திக் கற்பனை பண்ணிக்கூட பார்த்ததில்லைங்கிறதால வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்திட்டிருந்தேன். ஆனாலும் வாய்ப்புகள் தொடர்ந்தது. ‘சரி... இவ்ளோ பேர் கேட்கறாங்களே. ஜஸ்ட் ட்ரை பண்ணிப் பார்க்கலாமே’னு கமிட் பண்ணினதுதான் ராடன் டி.வியோட ‘திருவிளையாடல்’. அப்படியே அடுத்தடுத்த சீரியல்ஸ்.... ஒரு கட்டத்துல முழுநேர நடிகையாகிற அளவுக்கு நான் பிஸியானதை இப்ப நினைச்சாலும் ஆச்சரியமாதான் இருக்கு. நடிக்க ஆரம்பிச்சு ரொம்ப சீக்கிரம் ரசிகர்கள் மத்தியில பிரபலமாகக் காரணம், நான் பண்ணின அத்தனையும் சன் டி.வி சீரியல்ஸ்...’’ பெருமை பொங்கச் சொல்கிறார் சுதா.

‘‘என்னோட முதல் மெகா தொடர் ‘உறவுகள்’. இப்பவும் சன் டி.வில வந்திட்டிருக்கு. அதுல கமிட் ஆகிறப்ப, எனக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது. ரொம்ப விளையாட்டுத்தனமா இருந்திருக்கேன். 100 எபிசோடு வரை அப்படித்தான் போச்சு. கூட நடிக்கிற பலரும் பெரிய பெரிய சீனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ். நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க. நடிப்பு கத்துக் கொடுப்பாங்க. தாவணி போட்ட பெண்ணா அந்த சீரியல்ல அறிமுகமாகி, அப்புறம் சேலை கட்டி, கல்யாணமாகி, வளைகாப்பு, பிரசவம்னு... அப்படியே எனக்கே எனக்குன்னு ஒரு குடும்பம் வர்ற அளவுக்கு கேரக்டர் வளர்ந்தது. ‘நடிப்புன்னா விளையாட்டு இல்லை’ன்னு அப்பதான் உணர்ந்தேன்.

அதே நேரம்தான் ‘இதயம்’ சீரியல் பண்ணினேன். அதுலயும் கொஞ்சம் கனமான கேரக்டர். ஒரு கட்டத்துல படங்கள்லயும், மத்த சீரியல்லயும் எல்லாரோட நடிப்பையும் கவனிக்க ஆரம்பிச்சேன். அதே கேரக்டரை நான் பண்ணா எப்படி இருந்திருக்கும்னு நடிச்சுப் பழக ஆரம்பிச்சேன். நடிப்புல ஏபிசிடி கூடத் தெரியாம வந்த நான், இன்னிக்கு நல்ல நடிகைன்னு பாராட்டு வாங்கற அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா, இதெல்லாம்தான் காரணம்’’ என்பவருக்கு ‘நாதஸ்வரம்’ தொடரில் ஸ்ருதிகா நடிப்பது மாதிரி வெயிட்டான கேரக்டரில் நடிக்க நீண்ட நாள் ஆவல். ஸ்ருதிகாவும், சுதாவும் உடன்பிறப்புகள் என்பது ஊரறிந்த தகவல்!

‘‘வீட்ல அவ ரொம்ப விளையாட்டுப் பொண்ணு. சீரியல்ல அவ நடிப்பைப் பார்த்துட்டு, பலமுறை வியந்து போயிருக்கேன். ‘நாதஸ்வரம்’ல நல்லா பண்றீங்கன்னு என்கிட்ட பல பேர் பாராட்டுவாங்க. ‘அது நான் இல்லை, என் தங்கச்சி’ன்னு புரிய வைப்பேன். பெருமையான தருணங்கள் அதெல்லாம்...’’ என நெகிழ்கிறவரை ‘சிங்கம்’ படத்துக்குப் பிறகு சினிமாவில் காணவில்லையே..?

‘‘அது ரொம்ப பெரிய பேனர். டயலாக் இல்லாட்டாலும், நல்ல கேரக்டர்னு தெரிஞ்சதால சம்மதிச்சேன். அதே மாதிரி நல்ல கேரக்டர் வந்தா படங்கள் பண்ணுவேன். மத்தபடி இப்போதைக்கு என் கவனமெல்லாம் மியூசிக் பக்கம் திரும்பியிருக்கு’’ என்பவர் தீவிரமாக கிளாசிக்கல் மியூசிக்கும், ஹிந்துஸ்தானியும் கற்றுக் கொண்டிருக்கிறார்.
என்னமோ திட்டமிருக்கு..!

நம்பர் ஒன் ராட்சசி!


‘தென்றல்’ தொடரோடு சீரியலுக்கு குட்பை சொல்கிறார் ‘மைனா’ சூசன். ‘பேச்சியக்கா மருமகன்’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் பின்னியெடுத்திருக்கும் சூசனின் அடுத்த எதிர்பார்ப்பு வெற்றி மாறனின் ‘வடசென்னை’. ‘‘ஏற்கனவே ‘திமிரு’ படத்துல ஸ்ரேயா ரெட்டி பண்ணின மாதிரி ஒரு கேரக்டருக்கு ஆசைப்பட்டேன். ஒண்ணுக்கு ரெண்டா அமைஞ்சிருக்கு... ரெண்டு படங்களும் வரட்டும்.... அப்புறம் தமிழ் சினிமால நான்தான் நம்பர் ஒன் ராட்சசி’’ - நம்பிக்கையுடன் சொல்கிறார் முட்டைக் கண்ணழகி.

- ஆர்.வைதேகி