பாசம் சுபாகர்





அந்தத் தெருவில் உள்ள பெண்களுக்கு - குறிப்பாக மருமகள்களுக்கு - மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது. தெருவின் கடைசி வீட்டுக்கு புதிதாகக் குடிவந்திருக்கும் சுமதியை அவள் மாமியார் கவனித்துக் கொள்ளும் விதம்தான் இவர்களின் மூளை குடைச்சலுக்குக் காரணம். புது மருமகள் என்றால் கொஞ்ச நாளைக்குத் தாங்கலாம். ஆனால் சுமதிக்கு கல்யாணமாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறதாம். அவள் ஒரு வேலையைச் செய்ய வேண்டியதில்லை. நினைத்தாலே போதும்... மாமியார் அதைச் செய்து முடித்து விடுவார். மாமனார் கூட அப்படித்தான்! பள்ளிக் கூட மாணவன், டீச்சரைக் கண்டது போல் பவ்யமாகப் பழகுகிறார்.

‘சுமதியிடம் பாசம் காட்ட அப்படி என்னதான் காரணம்’ என்று அந்த ஏரியா பெண்கள் சதா யோசித்து, சமையலில் சொதப்பி, தங்கள் மாமியார்களிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம். ‘இனி பொறுப்பதில்லை’ என்று அந்த வீட்டு வேலைக்காரப் பெண்ணை மடக்கி விசாரித்தார்கள். ‘‘அட, தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டற கதைம்மா அது’’
என்றாள் அவள். ‘‘புரியறமாதிரி சொல்லு!’’ ‘‘பொண்ணு கொடுத்து பொண்ணை எடுத்திருக்காங்கம்மா... இங்க சுமதியம்மாவை நல்லபடியா பார்த்துக்கிட்டாதானே அங்க இவங்க மகளை நல்லபடியா வெச்சிக்குவாங்க...’’ அந்த மருமகள்கள் திகைத்து நின்றார்கள்