கபடி விளையாடினா மரியாதை இல்லை! ஒரு வீராங்கனையின் கவலை





‘‘ஏழு வருஷமா கான்ஸ்டபிள்... இதுதான் இந்திய கேப்டனோட நிலைமை. அட, நம்ம டோனி ஏதோ கத்தி வச்ச துப்பாக்கியோட கண்கலங்கி நிக்கிற மாதிரி கற்பனை பண்ணிட்டீங்களா? அதெல்லாம் ‘பெரிய’ விளையாட்டுங்க. நம்ம தமிழ்நாட்டுல உருவாகி, உலகம் பூரா பரவின கபடிக்குத்தாங்க இந்த நிலைமை!’’ என்று கவலைகளை மறைத்து கலகலக்கிறார் கவிதா. இந்திய பெண்கள் கபடி அணியின் முன்னாள் கேப்டனான இவர், 2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்று தந்தவர்.

சென்னை, ஆவடியை அடுத்த சேக்காடில் இருக்கும் கவிதாவின் வீட்டில் சுவர் தெரியாதபடி நிரம்பிக் கிடக்கின்றன அவர் பெருமைகள். ‘‘இந்திய கபடி டீமுக்கு தமிழ்நாட்டுல இருந்து முதல்ல செலக்ட் ஆன பொண்ணு நான்தாங்க. தமிழ்நாட்டுக்காரங்களை வட நாட்டுல இளக்காரமாதான் பார்ப்பாங்க. அதையெல்லாம் தாண்டி நான் கேப்டன் ஆனேன்னா, அதுக்குக் காரணம் என் ஈடுபாடுதான்’’ என்கிற கவிதா, கபடிக்காகத்தான் போலீஸ் வேலைக்கே போனாராம்.


‘‘அப்பா செல்வராஜ் போக்குவரத்துக் கழகத்துல வேலை பார்த்து ரிட்டயரானவர். அம்மா ஹவுஸ் ஒயிஃப். அஞ்சு பெண் குழந்தைகள்ல நான் கடைக்குட்டி. சின்ன வயசுல இருந்தே துறுதுறுனு இருப்பேன். செவன்த் படிக்கிறப்போ ஒரு கபடி போட்டில கலந்துகிட்டேன். ‘எல்லாரையும் விட நீ நல்லா விளையாடுறே’ன்னு ஸ்கூலே பாராட்டிச்சு. அதுதாங்க என் வாழ்க்கையையே மாத்திச்சு.

டென்த் படிக்கும்போது நேரு ஸ்டேடியத்துல நடந்த அத்லட்டிக்ஸ் போட்டிக்காக போயிருந்தப்ப, கபடிப் போட்டிக்கும் செலக்ஷன் நடந்துச்சு. அத்லெட்டிக்ஸுக்காகப் போன நான், எதிர்பாராத விதமா கபடிக்கு செலக்ட் ஆகிட்டேன். பத்து நாள் ஸ்டேடியத்துலயே கேம்ப். அடுத்து போட்டிக்காக குஜராத் போக வேண்டிய கட்டாயம். அந்த நேரத்துல ஹார்ட் பிராப்ளம் வந்து அம்மா சீரியஸா இருந்தாங்க. ஆனாலும் கபடி மேல இருந்த ஆர்வத்துல கிளம்பிட்டேன். குஜராத்ல இருந்து திரும்பி வந்த ஒரு வாரத்தில அம்மா இறந்துட்டாங்க. இப்படி கபடிக்காக நிறைய இழந்திருக்கேன்!’’ என்றவர், கனத்த அமைதிக்குப் பிறகு தொடர்ந்தார்...


‘‘ஒரு விஷயத்துக்காக நிறைய தியாகம் பண்ணினோம்னு வைங்களேன். அந்தத் தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமப் போயிடுமேங்கற கவலையிலயே அந்த விஷயத்தை விடாப்பிடியா பிடிச்சுக்குவோம். அப்படித்தான் என் கபடி ஆர்வமும்! காலேஜ் படிச்சப்போ ஒரு தடவை போலீஸ் டிபார்ட்மென்ட்டுக்குள்ள நடக்குற கபடிப் போட்டியைப் பார்த்தேன். போலீஸ்ல சேர்ந்தா இந்த கபடி டீம்ல சேர்ந்து விளையாடலாம்னு ஆசை வந்துச்சு. முயற்சி பண்ணி 2005ல கான்ஸ்டபிள் ஆகிட்டேன். டிபார்ட்மென்ட் கபடி டீம்ல பெஸ்ட் ப்ளேயர்னு பேரும் எடுத்தேன். 2007ல இந்திய அணிக்காக செலக்ஷன் நடந்துச்சு. இந்தியா முழுக்க 45 பேர் செலக்ட் ஆனோம். தமிழ்நாட்டிலிருந்து செலக்ட் ஆனது நான் மட்டும்தான். அந்த சமயத்துல கடுமையா பயிற்சி எடுத்துக்கிட்டதுனால முதுகெலும்பு தேஞ்சு நிற்கவோ, உட்காரவோ கூட முடியாம போச்சு. ‘இனிமே விளையாடவே கூடாது’ன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. ம்ஹும். கபடி... இந்த மூணு எழுத்தை அடித்தளமா வச்சுதான் என் கரியரையே அமைச்சுக்கிட்டேன். அந்த அடித்தளத்தை இழக்க மாட்டேன்னு உறுதியா இருந்தேன். அம்மாவை மனசுல நினைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா எழுந்து நடக்க முயற்சி பண்ணினேன். ஒரே வாரத்துல எழுந்து நடந்தேன். படிப்படியா பயிற்சி பண்ணி கபடி ஆடத் தயாராயிட்டேன். அதுக்கப்புறம் நடந்த அடுத்த கட்ட செலக்ஷன்ல நான் நம்பர் ஒன்னா வந்தேன்னு சொன்னா நம்புவீங்களா!’’ என்று விழிகள் விரிக்கிற கவிதா, அதன்பிறகு குவித்ததெல்லாம் மெடல்களும் கோப்பைகளும்தான்.

‘‘2010ல கேப்டன் பொறுப்பு தேடி வந்துச்சு. அப்போதான் ஆசிய விளையாட்டு போட்டியில தங்கம் ஜெயிச்சோம். ஜனாதிபதியும், தமிழ்நாடு கவர்னரும் எனக்கு விருந்து கொடுத்து கௌரவிச்சிருக்காங்க’’ என்று பட்டியலிடுகிறவர் இன்று ஏனோ கபடியை விட்டு விலகியே இருக்கிறார். காரணம் கேட்டால், புன்னகையே பதிலாக வருகிறது.

‘‘கபடியில நிறைய சாதிச்சாலும், பர்சனல் வாழ்க்கை எனக்காக இன்னும் காத்திருக்கு. இப்ப கல்யாண வயசு. வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காங்க. இந்திய அணியில இடத்தைப் பிடிச்சதுக்கே அரியானாவுல ஒரு பொண்ணுக்கு டி.எஸ்.பி போஸ்ட் கொடுத்திருக்காங்க. ஆனா, நான் இன்னும் கான்ஸ்டபிள்தான். தமிழ்நாட்டுல கபடிக்கு மரியாதை இல்லையேனு ஒரு விரக்தியும் இருக்கு. எனக்காக இல்லைன்னாலும் வருங்காலத்துல உருவாகப் போற கபடி ப்ளேயர்ஸை ஊக்குவிக்கற மாதிரியாவது நம்ம அரசு சில கௌரவங்களைத் தரணும். கபடி அகாடமி ஆரம்பிச்சு, நிறைய பேரை உருவாக்கணும்னு எனக்கு ஆசை’’ மூச்சிரைக்காமல் பேசி முடித்து விடை தருகிறார் கவிதா. தமிழ்நாட்டில் பிறந்த கபடிக்கும் கவிதாவுக்கும் நல்லது நடக்கட்டும்!

- அமலன் படங்கள்: ஆர்.சி.எஸ்