கார்ல் மார்க்ஸின் கல்லறையில்...






நண்பர்களோடு இங்கிலாந்தின் நெடுஞ்சாலைகளில் பாட்டும் பைந்தமிழுமாக சுற்றியது தேன் சொட்டும் அனுபவம். வெளியே வெயில் அடித்துக்கொண்டிருந்தது. ஆனால், அங்கு சூரியன் எப்போதுமே டம்மிதான். கையுறையைக் கொஞ்ச நேரம் நீக்கினால் விரல்கள் விறைத்து பற்கள் பரதம் ஆட ஆரம்பித்துவிடும். அங்கே, நகரத்தில் வீடு வாங்குவதைப் போல் இரண்டு மடங்கு பணம் கொடுத்தால்தான் கிராமத்தில் வீடு வாங்க முடியும். கிராமத்தில் வாழ்வதுதான் செல்வந்தர்களின் அடையாளம். அந்தப் புதிய கிராமங்களைப் பார்த்து அதிசயித்தேன்.

அங்கு பெரும்பாலான கார்களில் ‘டோம் டோம்’  (ஜிளிவிஜிளிவி) எனும்   நேவிகேட்டர் வைத்திருக்கிறார்கள். ‘‘ஆஃப்டர் டூ ஹண்ட்ரட் யார்ட்ஸ் டர்ன் லெஃப்ட்’’ என்று பெண் குரல் வழிகாட்டுகிறது. ஒருமுறை அது கொஞ்சம் சுற்று வழியைப் பரிந்துரைத்து விட்டது. கவிஞர் பாண்டித்துரை கோபித்துக் கொண்டார். ‘‘இதுக்குத்தான் பொம்பள பேச்சக் கேட்கவே கூடாது’’ என்று சிரிப்பு வெடியைக் கொளுத்தினார். நண்பர் வீரா தான் தினசரி செல்லும் தனது அலுவலகத்துக்குக் கூட ‘டோம் டோம்’ சொற்படிதான் போகிறார். பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் போனபோது, அந்தக் குளிரிலும் ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் குவிந்து ரசித்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். உலகின் பெரும்பாலான நாடுகளின் எல்லைகளைத் தீர்மானித்தது இங்கிருந்தவர்கள்தானே? பக்கத்திலேயே பிரிட்டிஷ் ராஜகுமாரிகளுக்கு மணமுடிக்கும் மண்டபமும் ஜொலிக்கிறது.

பதினைந்து நாள் அனுபவத்தில் மொத்த லண்டனிலும் இரண்டு பிச்சைக்காரர்களைப் பார்க்க முடிந்தது. ஒருவர் ‘பிக்காட்டலி சர்க்கஸ்’ தரையடி தொடர்வண்டி நிலைய நடைமேடையில் இருந்தார். தரையில் துணியை விரித்துவிட்டு ஒரு மேற்கத்திய புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்தார். அவரை இந்திய தர்மப்படி ‘பிச்சைக்காரன்’ என்று சொல்வது பெரிய வார்த்தை. இங்கே, சிக்னல்களில் அழுக்குக் கைகளை கார் ஜன்னல் வழியாக முகத்துக்கு நேரே நீட்டி ஏறக்குறைய வழிப்பறி செய்யும் பிச்சைக்காரர்களைத்தான் பார்க்கிறோம். ஆனால் அந்தப் பிச்சைக்காரர் தனக்கு சில்லறை போடுபவர்களை ஏறெடுத்தும் பாராமல் நிஷ்காமகர்மியாய் வாசித்துக்கொண்டிருந்தார். பார்க்க வேறு அவ்வளவு லட்சணமாக இருந்தார்.இன்னொரு பிச்சைக்காரர் லண்டன் டவர் பிரிட்ஜின் ஓரத்தில் தன் செல்ல நாய்க்குட்டிக்கு மஃப்ளரைப் போர்த்திவிட்டு, அந்த உறைகுளிரிலும் ஏதோ லஞ்ச வழக்கில் சிறைக்குப் போகும் இந்திய அமைச்சர்களைப் போல கனிந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

லண்டனைப் பார்த்தபிறகுதான் வெள்ளைக்காரன் சென்னையை லண்டனாக்க முயன்றிருக்கிறான் என்பது தெளிவாகிறது. பல இடங்கள் சென்னையின் ஜெராக்ஸ்தான். நகரம் முழுவதும் தேம்ஸ் நதி கண்களைக் கைது செய்து கொண்டே ஓடுகிறது. ஓரிடத்தில் கப்பல் வரும்போது பாலம் தற்காலிகமாக தன்னை உடைத்துக்கொண்டு வழிவிட்டு பின் ஒட்டிக்கொள்கிறது.

லண்டனின் ஹைகேட் இடுகாட்டுக்குச் சென்றேன். விட்டால் அங்கேயே வீடு கட்டிக் குடியேறிவிடலாம் போல் தோன்றுகிறது. ஒழுங்கு செய்யப்பட்ட வீதிகளும் உயர்ந்து நிற்கும் ஓக் மரங்களுமாய் குலுங்குகிறது. அதன் ஒரு மூலையில் உலகத்தொழிலாளர்களின் கதாநாயகன் கார்ல் மார்க்ஸின் கல்லறை, அவரது முகச்சிற்பம் ஏந்தி எளிமையாக இருக்கிறது. அங்கே, மலர் தூவி மௌனித்துக் கிடந்தேன்.

இங்கிலாந்து ஒரு வளர்ச்சியடைந்த ஜனநாயகம் கொண்ட நாடு. அங்கே பஸ்ஸுக்குக் காத்திருப்பவர்கள் எல்லாம் வெள்ளையர்கள்தான். வந்தேறிகளான ஆசியர்கள் சொந்த வீடு, கார் என்று தங்களின் சேமிக்கும் புத்தியின் மூலமாக முன்னேறி யிருக்கிறார்கள். ‘வாரத்தில் ஆறு நாட்கள் வேலை, ஒரு நாள் எல்லாவற்றையும் அனுபவித்து செலவழிப்பது’ - இதுதான் வெள்ளையர்களின் சூத்திரம். பிறந்த அத்தனை குழந்தைக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை அரசாங்கமே பொறுப்பேற்பதால் பத்தாவது தலைமுறைக்கு பொருள் சேர்க்க இப்போதே அடுத்தவன் வயிற்றில் அடித்து சுவிஸ் வங்கியில் கொட்டும் இந்திய சுயநலம் கொஞ்சமும் இல்லை. நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் என்றாலும் லண்டனில் உங்கள் விருப்பத்துக்கு உங்கள் வீட்டின் வெளித்தோற்றத்தை மாற்றி அமைக்க முடியாது. வண்ணமடிக்க முடியாது. வீட்டின் வடிவத்தை அந்தந்தப் பகுதிக்கான கவுன்சில்கள்தான் முடிவு செய்யும். ஊரின் எல்லா வீடுகளும் ஒரே மாதிரி, ஏழை பணக்காரனைக் காட்டிக் கொடுக்காத சமச்சீர் சொர்க்கமாக அசத்துகிறது.

நீதித்துறையும் மிக நுட்பமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சுழற்சி முறையில் ஒவ்வொரு குடிமகனும் ஒருநாள் நீதிபதிதான். ஒவ்வொரு வழக்கிற்கும், அவ்வழக்கிற்கு முற்றிலும் தொடர்பற்ற பத்து பேர் பொதுமக்களில் இருந்து அழைக்கப்படுகிறார்கள். அவ்வழக்கை அவர்கள் ஆதியோடந்தமாக கவனித்து, தலைமை நீதிபதிக்கு ஆலோசனை கூற வேண்டும். இதில் அனைவரும் ஒப்புக்கொண்ட தீர்ப்பே இறுதியானது. யாருக்கும் லஞ்சம் கொடுக்க முடியாது. காரணம், யார் யார் நம் வழக்கைத் தீர்மானிக்கப் போகிறார்கள் என்று குற்றவாளிக்குக் கடைசிவரை தெரியாது. நண்பர் ஒருவரின் ஆசையால் சௌத் ஹாலில் ஒரு கவியரங்கத்துக்கு தலைமை தாங்கினேன். இரண்டு பெண்கள் உட்பட ஆறு கவிஞர்கள். எல்லோரும் ஈழத்தமிழர்கள். அற்புதமான கவிதைகளால் அரங்கத்தை அர்த்தமுள்ளதாக்கினார்கள். ஒரு கவிதாயினி இதற்காகவே ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்திருந்தார். ஈழத்துக் கவிஞர்கள் அனைவருமே பிள்ளையார் சுழியாய் பிரபாகரனைப் போட்டுத்தான் பாடுகிறார்கள். என்னதான் மனித உரிமைகள் பேணப்படும் தேசத்தில் வாழ்ந்தாலும், பனைமரக்காடுகளும் கோணமலைக் குயில்களின் கீதமுமாய் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த நிலத்தைப் பிரிந்த சோகம் அவர்களின் ஒவ்வொரு வரியிலும் உருகி ஓடுகிறது.


ஒரு ஹார்ன் சத்தம் கூட கேட்காத மாநகரச் சாலைகள், எலும்பைக் கடிக்கும் குளிர், ஒரே மாதிரி அளவெடுத்துச் செய்த வீடுகள், தூய்மையான தெருக்கள், இலைகளை உதிர்த்து நிற்கும் ஆப்பிள் மரங்கள், ஆங்காங்கே காதலியின் உதடுகளை உறிஞ்சிக்கொண்டிருக்கும் காதலர்கள், பாராளுமன்றத்துக்கு முன்னால் தனியாளாய் ஈரானுக்கு ஆதரவாக நேட்டோ படைகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் வெள்ளைக்காரர், ராணி வேஷம் கட்டி ஒரு பவுண்ட் காசுக்கு போட்டோவுக்கு போஸ் தரும் பெண்கள், நிர்வாண நடன கிளப்புகளில் பணம் கட்டி விட்டு உள்ளே சென்று உடல் காட்டி சம்பாதிக்கும் குட்டிகள், ஙிவிகீ   காரில்   வந்து குப்பை கூட்டிவிட்டுப் போகும் துப்புரவுத் தொழிலாளர் என அதிசயங்களின் தேசம்தான் இங்கிலாந்து. ஆனால், என்னால் பத்து நாட்களுக்கு மேல் சென்னையின் கொசுக்களைப் பிரிந்திருக்க முடியவில்லை.  இந்தப் பயணத்தின் மூலம் ஒரு செய்தி எனக்குப் புலப்பட்டது. ஓர் ஏழை வாழ்வதற்கு சிறந்த தேசம் இங்கிலாந்து. உணவு, இருப்பிடம், கல்வி... கேரண்டி! அங்கே பணம் வைத்துக் கொண்டு ஒரு டிராஃபிக் விதியைக் கூட மீற முடியாது. ஆனால், இந்தியா பணக்காரர்களுக்கான தேசம்... இங்கே பணம் இருந்தால் எந்த அத்துமீறலையும் நிகழ்த்தலாம். ஏழைகளுக்கு இங்கே மூச்சு விடு
வதும் கூட ஆடம்பரமே!